Halloween party ideas 2015
.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் முன்மொழியப்பட்டு நாற்பதாவது வருடத்தை எட்டிய நிலையில் 2016ம் ஆண்டானது அத்தீர்மானத்தின் வலுவூட்டல் ஆண்டாக புலம் பெயர் தமிழ் அமைப்புக்களால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

1976ம் ஆண்டு மே 14ம் திகதியன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக முன்மொழியப்பட்ட தீர்மானம் யாதெனில் “ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதாகியுள்ளதென இம் மாநாடு தீர்மானிக்கின்றது” என்பதாகும்.

1948 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனி அதிகாரம் தனது உள்ளூர் அதிகாரவர்க்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்தவேளை தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் தனது பிரித்தாளும் சூட்சியையும் சேர்த்தே ஒப்படைத்துச் சென்றது. 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியரசு தின யாப்பின் அடிப்படையில் பிரித்தாளும் தந்திரம் என்பது அப்பட்டமான சிங்கள பௌத்த மேலாதிக்கமாகக் தோற்றம்பெற்று தமிழ் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

அதன் பின்னர் தேசிய இனத்தின் தன்னாட்சிக்குரிய அனைத்துக் கூறுகள் மீதும் சிங்கள பௌத்த அதிகாரவர்க்கம் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. மொழி, கலாச்சாரம், பொதுவான பிரதேசம் மற்றும் பொதுவான பொருளாதாரம் என்பன மீதான சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தின் தொடர்ச்சியான தாக்குதலின் வெளிப்பாடாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் அமைந்தது எனலாம்.

இத் தீர்மானத்தின் மறுபுறத்தில் சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்திற்கும் அதன் கருத்தியலுக்கும் எதிரான அரசியல் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற தமிழ் அதிகாரவர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தின் தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை எழுபதுகளின் ஆரம்பங்களிலேயே இராணுவ ஒடுக்குமுறையாக மாற்றமடைய ஆரம்பித்துவிட்டது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் பேசும் மக்களின் போராட்டம் அவ்வேளையில் ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற அதற்கான தலைமைத்துவம் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றது.

இதன் மறுபக்கத்தில் தொடர்ச்சியாக ஆட்சிக்குவந்த சிங்கள பௌத்த அரச அதிகாரங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது. கல்லோயா திட்டத்தில் ஆரம்பித்த நிலப்பறிப்பு பின்னதாக தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் வியாபித்து ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை அதிகப்படுத்தியது.

1983 ஆம் ஆண்டு வரையான தொடர்ச்சியான இனப்படுகொலைகள் தமிழ் பேசும் மக்களை தற்காப்பு யுத்தம் ஒன்றை முன்னெடுக்கும் நிலையை நோக்கித் தள்ளியது.

அப் போராட்டத்தின் அரசியல் நியாயம் வன்னியில் இலட்சக் கணக்கான மக்களையும் போராளிகளையும் அழித்து சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தாலும், உலகின் ஏகபோக அரசுகளாலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.

முழுத் தமிழ் பேசும் மக்களதும் அடிப்படை ஜனநாயக உரிமையான சுய நிர்ணய உரிமை, உலகின் வல்லரசுகள் என மார்த்தட்டிக்கொள்ளும் கொலை வெறிகொண்ட ஏகாதிபத்திய அரசுகளாலும் அதன் உள்ளூர் பிரதிநிதிகளான சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தாலும் வன்னி நிலப்பரப்பின் சிறிய மூலையில் இரத்தமும் சதையுமாக அழித்துத் துவம்சம் செய்யப்பட்டது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இன அழிப்பான வன்னி மனிதப் படுகொலைகள் நடத்தப்பட்டு இன்று ஏழாவது ஆண்டு அண்மித்துக்கொண்டிருக்கிறது.
போராடுவதற்காக வாழ்ந்த மக்கள் கூட்டம் இன்று வாழ்வதற்காகப் போராடுகின்ற மீள் சுழற்சி ஏற்பட்டுள்ளது. எழுபதுகளின் அரசியல் சூழலை நோக்கி நாம் மீண்டும் இழுத்து வரப்பட்டிருக்கிறோம். நாளைய வாழ்வின் சுமைகளே இன்றைய மக்களின் பிரதான கேள்வியாகியுள்ளது.

எது எவ்வாறாயினும் சிங்கள பௌத்தக் கருத்தியல் இன்னும் மாற்றமடையவில்லை. பேரினவாதம் யுத்தகால கோரத்தைத் தணித்துக்கொண்டாலும். அதன் அடிப்படை இன்னும் மாற்றமடையவில்லை. அது மாற்றமடையப் போவதில்லை என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடம். நாளாந்த வாழ்வியலின் பொருளாதார சமூக வலிகளைச் சுமந்துகொண்டிருக்கும் மக்கள் தமது தன்னுரிமையான சுய நிர்ணய உரிமையைக் குறித்து சிந்திப்பதற்கு வலுவற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

அவர்களின் ஆழ் மனதில் வரலாற்று வழிவந்த அச்சம் இன்றும் குடிகொண்டிருப்பது உண்மைதான். என்றாவது ஒரு நாள் சிங்கள பௌத்த அதிகாரவர்க்கம் தனது சொந்த நலன்களுக்காக மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்காது என்ற அச்சம் ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் எங்கோ ஒரு மூலையில் குடிகொண்டிருக்கிறது.

சுய நிர்ணய உரிமையை நோக்கிய அரசியலின் நியாயத்தை உலக மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஏன் ஒடுக்கப்படும் சிங்கள மக்களுக்கும் கூட எடுத்துகூறவேண்டிய அரசியல் தலைமையின் அவசர தேவையின் அடிப்படையிலிருந்தே அதன் மீட்சியும் தங்கியிருக்கிறது.

சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வதற்கான உரிமை. அந்த உரிமை வழங்கப்பட்டால் மட்டுமே தமிழ்த் தேசிய இனம் பிரிந்து செல்வதா இணைந்திருப்பதா என்பதைத் தீர்மானிக்கும் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கொண்டதாகக் கருதப்படும்.

அவ்வாறான உரிமை வழங்கப்படும் நிலையில் அந்த உரிமையைப் பெற்றுக்கொண்டு பெருந்தேசிய இனத்துடன் இணைந்த கூட்டாட்சியை நடத்துவதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அது பிரிவினைவாதமல்ல. சுய நிர்ணய உரிமையே தேசிய இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் உறுதிப்படுத்தும்.

இவை அனைத்தும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட வேண்டும். சிங்கள ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் அதற்கான நியாயம் கூறப்பட வேண்டும். உலகமெங்கும் பரந்துகிடக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை நோக்கி எமது சுய நிர்ணய உரிமைக்கான நியாயம் எடுத்து செல்லப்பட வேண்டும்.

கடந்த கால யுத்தங்கள் தந்த கோர வடுக்களிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் இன்னமும் எங்கள் மக்கள் இருக்கையில், சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையின் நியாயத் தன்மை சரியான முறையில் அவர்களிடம் எடுத்துச் செல்லப்படும் வரை எங்கள் மக்களிடமிருந்து தாக்கத் திறன் வாய்ந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சில வேளைகளில் எதிர்மறையான விளைவுகளைக் கூட எதிர் கொள்ள வேண்டி ஏற்படலாம். எனவே, தமிழர் தரப்பு பிரதி நிதிகள் எனக் கூறிக்கொள்ளும் அனைத்து தரப்பினரும் உளச் சுத்தியுடன், தத்தமது குறுகிய சுய நல, சுயலாப அபிலாசைகளை விடுத்து பொது நன்மை நோக்கி செயற்பட வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் சுய நிர்ணைய உரிமையின் உள்ளார்ந்த அர்த்தங்களின் அடிப்படையில் செழுமைப்படுத்தப்பட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளோடு இணைத்து புதிய அரசியலாக்கப்பட வேண்டும்.

. இன்றைய தாயகச் சூழலில் மக்கள் மத்தியிலிருந்து அவர்களின் நலன்களின் அடிப்படையில் எழுச்சி பெற்ற அரசியல் கட்சிகள் அந்த அரசியலை இதய சுத்தியுடன் எம் மத்தியில் முன்வைப்பதற்கு இல்லை. அவ்வாறான புதிய அரசியலும் அதனைத் தலைமைதாங்கும் அரசியல் இயக்கமுமே மக்களை முனோக்கி அழைத்துச் செல்ல முடியும். அந்த அரசியல் தலைமை இன்று வெற்றிடமாகவே காணப்படுகின்றது. அது நிரப்பப்படும் வரை மக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையிலிருந்து அன்னியப்பட்டிருப்பது என்பதனை கசப்பான ஒரு உண்மையாகவே நாங்கள் பார்க்கவேண்டும்.

– சுகன்யா –

Post a Comment

Powered by Blogger.