Halloween party ideas 2015
.

1. ஈழன் என்கிற உங்களின் பெயர் அடையின் உள்ளர்த்தம் என்ன ?
ஈழன் என்றால் ஈழத்தில் பிறந்தவன், ஈழத்தவன் என்று பொருள்! என்னைப்பொறுத்தவரையில் தாய்மண்ணை இழந்து வெளிநாட்டில் வாழும் அத்தனை பேரும் அகதிகள்தான். நான் ஒரு அகதி என்ற உண்மையை எந்த தருணத்திலும் மறுக்கவோ மறைக்கவோ விரும்பவில்லை, அதேவேளை எனது முயற்சிகளும் வெற்றிகளும் ஈழத்தவன் என்ற முறையில் இனத்திற்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கவேண்டும் என்பது எனது அவா.
Eelan Elanko3
ஒரு தனி மனிதனின் வெற்றி கூட அந்த இனத்திற்கு கிடைக்கும் வெற்றி என்று எண்ணுகிறேன், அப்படி இருக்க பலரின் ஒன்றுசேர்ந்த இந்த முயற்சிகளுக்கு கிடைக்கும் வெற்றிகளை பிரதேசவாதியாக குறுக்காமல் மொத்த ஈழத்தவருக்கும் சென்றடையவேண்டும் என்பதே ஈழன் என்ற எனது பெயர் அடையின் உள்ளர்த்தம்.

2. இதுவரையில் நீங்கள் பொற்றுக் கொண்ட விருதுகள் எவை ?
2009இல் நாம் முதல் முதலாக உருவாக்கிய ‘தவிப்பு’ என்ற குறும்படம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ‘சங்கிலியன்’ குறும்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது, அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட முதல் குறும்படம் இதுதான். பின்னர் 2012ல் நாம் வெளியிட்ட ‘இனியவளே காத்திருப்பேன்’ என்ற முழுநீளத்திரைப்படம் நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

eelam eelankooஅவுஸ்திரேலியாவாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை இந்தப்படத்திற்கு உண்டு, அத்துடன் ஈழத்து பழம்பெரும் நடிகர் ஏ.ரகுநாதன் அவர்கள் இப்படத்தில் நடிப்பதற்கு அவுஸ்திரேலியா வந்திருந்தார், அவருடன் இணைந்து வேலை செய்ததை எனது பாக்கியமாகவும் அவரின் வாழ்த்துக்களை பெரிய விருதாகவும் கருதுகிறேன். 2013 இல் ஏ. ரகுநாதன் ஐயா உட்பட பிரான்ஸ் நாட்டுக்கலைஞர்களுடன் இணைந்து நாம்உருவாக்கிய ‘தொடரும்’ என்ற குறும்படம் சிட்னியில் நடைபெற்ற இத்தாலிய குறும்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.
அதேவிழாவில் நாம் அவுஸ்திரேலியாவில் உருவாக்கிய ‘மொழிப்பிறழ்வு’ என்ற குறுந்திரைப்படம் முதலாம் இடத்தைத் தட்டிச்சென்றது. 2014 இல் உலகில் முதல்முறையாக ‘செங்குத்து திரைப்பட விழா ( Vertical Film Festival ‐VFF ) அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது, அதில் எனது இயக்கத்தில் உருவான ‘அனிதாவின் பார்வையில் (Anita’s Point of View)) என்ற குறும்படம் உலகில் பல நாடுகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான படங்களுள் சிறந்த 13 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்பொழுது எமது நிசப்த ஓலங்கள்’ என்ற குறுந்திரைப்படம் போட்டிகளில்கலந்து வருகிறது.

3. துறை சார்ந்த அடிப்படையில் திரை துறை தொடர்புடைய கற்கை நெறிகளை கற்றீர்களா? அல்லது அனுபவந்தானா?

எந்த ஒரு துறையாக இருந்தாலும் அந்தத் துறை சம்பந்தமான கல்வியை கற்று பின் பயிற்சி பெற்ற பிறகுதான் எமது முயற்சிகளோ படைப்புகளோ தரமாக அமைய வாய்ப்புக்கள் இருக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, அப்படிப்பட்ட படைப்புகள்தான் முறைப்படி மரத்தில் முத்திக் கனிந்த பழம் போன்று தரமாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வாய்ப்புக்கள் இருக்கும் என நம்புகிறேன்.
அதனால்தான் நான் புலம்பெயர்ந்து நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் போது ஆக்கிலாந்த் பல்கலைக்கழகத்தில் ஊடக பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு பின் சிட்னியில் ‘சிகரம்’ தமிழ்த்தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினேன், பின்னர் காலம்சென்ற இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பயிற்சியும் அறிவுரைகளும் பெற வாய்ப்புக்கிடைத்தது, அத்தோடு ஒளிப்பதிவாளர் கைமல் அவர்களின் அறிவுரைகளும் ஆசியும் பெரும் பலமாக இருந்தது, அதன் பிறகே படைப்புகளை படைக்க ஆரம்பித்தேன்.

4. உங்களுக்கு திரை துறை மீது ஈர்ப்பு ஏற்பட காரணம்?
கலைகள் மீது சிறுவயதில் இருந்தே எனக்கு நாட்டம் இருந்தது, கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பரிசுகள் பெற்றுள்ளேன். திரைப்படத்துறை மிகுந்த வலிமை வாய்ந்தது, திரைப்படத்துறை வலிமையும் வாய்ப்பும் இல்லாது ஒரு இனம் எந்தவொரு கலைத்துறையிலும் பெரும் வெற்றியையோ ஆதாயத்தையோ அடைவது கடினம் என்று எண்ணுகிறேன். தாய்மண்ணிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி கடந்த 40 வருடகாலம் காலத்தின் கட்டாயம் எம்மால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது நாம் அனைத்துத்துறைகளிலும் சிகரத்தை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
எமது இனத்தின் கொடூரமான இனஅழிப்பு அவலங்களை நினைவில் வைத்து பதிவுகளாக்கி உலகிற்கு அறியத்தருவதோடு எதிர்காலத்தில் எமது பொருளாதார வலிமை எமது வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் பெரும் உதவி புரியும் என்று நம்புகிறேன். ஈழத்தமிழர் திரைப்படத்துறையில் வளர்ச்சியும் வலிமையும் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று எண்ணுகிறேன், அடுத்த தலைமுறையினர் கையில் கனத்தைக்கொடுத்துவிட்டு போகாது எம்மால் முடிந்தவரை அவர்களுக்கு பாதையை இலகுவாக்கவேண்டும் என்பதே எனது நோக்கு.
5. தற்போது எடுத்து கொண்டிருக்கும் படைப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ? எப்போது திரைக்கு வருகிறது ?
அண்மையில் வெளியான ‘புறம்போக்கு’ திரைப்பட இசையமைப்பாளர் வர்ஷன் இசையில் இந்திய கலைஞர்களையும் உலகில் பல தேசங்களிலும் வசிக்கும் கலைஞர்களையும் தொழில்நுட்பவாதிகளையும் இணைத்து, எனது எழுத்து இயக்கத்தில் அவுஸ்திரேலியாவில் ஒரு முழுநீள திரைப்படம் உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன்.
Eelan Elanko7சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த முயற்சி தாமதமாகிறது, ஆகையால் இந்த இடைவெளியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட எமது தேசியத்தலைவரின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் சகோதரி இசைப்பிரியா இருவருக்கும் சமர்ப்பணமாக சாட்சிகள் சொர்க்கத்தில்‘Witness in  Heaven” என்ற பெயரில் நான்கு ஈழம் சார்ந்த கதைகளை இணைத்து ஒரு முழுநீள திரைப்படமாக திரையரங்குகளில் திரையிடவுள்ளேன்.
இப்படத்தில் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனாக எனது மகன் சத்யா நடித்துள்ளார்.இக்கதைகள் நமது மண்ணில் நமது மக்களுக்கு நடந்த கொடூரங்களை கற்பனையில் வடித்த கதைகள் அல்ல, இறுதிப்போரின்பின் வெளிநாடுகளில் நமது மக்கள் எவ்வாறான அவலங்களை எல்லாம் சந்தித்து வருகிறார்கள் என்றும் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களுக்கு இறுதிப்போரில் எமது தாய்மண்ணில் மக்களுக்கு நடந்த கொடுமை சம்பவங்கள் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பது பற்றிய ஒரு பார்வையாக இருக்கும்.
இதில் நாம் உருவாக்கி பரிசுபெற்ற குறும்படங்களும் அடங்கி இருக்கும். இத்திரைப்படத்தை இன்னும் ஒருசில மாதங்களில் திரையிடமுடியும் என நம்புகிறோம்.
6. ஈழத்து திரை துறை தனக்கான ஒரு திரை பேச்சு மொழியை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது இது தொடர்பாக முயற்சிகள் ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா ?
என்னைப்பொறுத்தவரையில் ஒரு திரைப்பேச்சை உருவாக்கவேண்டும் என்பதே தவறான கருத்து, சமூகத்தில் நாம் எப்படிப்பட்ட உரையாடல் பேச்சு முறையை வழக்கத்தில் கொண்டிருக்கின்றோமோ அதை அப்படியே யதார்த்தமாக திரையில் சற்று தெளிவாக, பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உபயோகித்து படைப்பின் தரத்தில் கவனம் செலுத்தினாலே போதும்.
எமது சில படைப்பாளிகள் ஈழத்துத் தமிழ் என்று கூறி, அந்தக்காலத்தில் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஈழத்து திரைத்துறை ஆரம்பமான காலகட்டங்களிலும் முக்கியமாக, நகைச்சுவை நடிகர்கள் கையாண்ட அதே பாணியை கையாள்கிறார்கள், அது இந்திய திரைப்படங்களை மட்டுமே பார்த்து ரசித்துப்பழகிய மக்களுக்கு ரசிக்கும் தன்மையை இழக்கச்செய்கிறது.
CU5A2258
ஒரு ஈழத்தமிழ்க்கலைஞனாக எமது சமூகத்தில் நடப்பதுபோன்ற ஒரு கதையை, இந்திய உரையாடலில் உருவாக்கவேண்டிய அவசியம் என்ன? எமது சமூகத்தை சார்ந்த ஒரு கதைக்களம் என்றால் அது எமது வழக்கில் என்ன பேச்சுத்தமிழ் உள்ளதோ அப்படியே திரையிலும் அமைந்திருந்தால் ஏன் ரசிக்கமாட்டார்கள்?. இதற்கு எதற்கு நாம் ஒரு திரைப்பேச்சை உருவாக்கவேண்டும் அல்லது வாடகைக்கு எடுக்கவேண்டும்? எமது பேச்சுத்தமிழை, அதன் பெருமையை, சிறப்புகளை நாம் எவ்வளவு மதிக்கின்றோமோ அந்த மதிப்பு எமது படைப்புகளில் பிரதிபலிக்கவேண்டும்.
971942_625998314110880_709108182_nஜாக்கிஜானின் படத்தையோ மற்றும் பல மொழி புரியாத படங்களையோ பார்த்து ரசித்து வெற்றியடைய செய்யும் ரசிகர்கள் எமக்குள் இல்லை என்று கூறமுடியுமா? எமது மொழியையோ, பாணியையோ, உரையாடல் முறையையோ, உச்சரிப்பையோ எப்படி விட்டுத்தர முடியும்? அதை மாற்ற நினைப்பதே கொலைக்குற்றத்திற்கு சமனானது இல்லையா? ஒரு மனிதன் எதை இழந்தாலும் தாய் மொழியை, அதன் தனித்துவத்தை இழக்கலாமா? எந்தக்கடமையில் தவறினாலும் தாய் மொழியை, அதன் தனித்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பொறுப்பில் இருந்து தவறலாமா? தாய் மொழியும், அதன் தனித்துவமும் பெருமைகளும் தெரியாத ஒரு கேவலமான சமூகம் உருவாக நாமே காரணமாக ஆகலாமா? படைப்பாளிகளுக்கு அந்தக்கடமை அதிகமாகவே உள்ளது.
7. ஈழத்தமிழர்கள் திரைப்படத்துறையில் பாரிய வெற்றியடையாமல் பின்தங்கி இருப்பதன் காரணம் பற்றி உங்கள் கருத்து ?
நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பதைவிட 40 வருட கால இடைவெளியின்பின் இப்பொழுதுதான் மீண்டும் ஆரம்பித்து இருக்கிறோம் என்று ஏன் கூறக்கூடாது? படைப்பாளிகள் அவர்கள் வேலையை பொறுப்புடனும் தெளிவுடனும் நேர்மையுடனும் தரமாக செய்வார்களாக இருந்தால் மக்கள், ரசிகர்கள் அவர்களின் ஆதரவை அள்ளித்தரமாட்டார்கள் என்று யாராலும் கூறமுடியுமா? ஒரு படைப்பிற்கு பொருளாதார உதவி மிக முக்கியம், வணிக தொழிலதிபர்களும் வியாபார தரகர்களும் கலைநிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர்களும் எமது இனத்தின் கலை வளர்ச்சியின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய கலைஞர்களுக்கு கொடுக்கும் ஆதரவுக்கு அதிகமாகவோ அல்லது அதே போன்று ஆதரவை வழங்கவேண்டும், பொதுவாக எமது கலைஞர்கள் தொழிலதிபர்களை நாடும்பொழுது கிடைக்கும் பதில், மன்னிக்கவும் இந்தவருடம் இந்திய கலைஞர்களை வைத்து பல நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அளித்துவிட்டோம் இந்த வருட வரவு செலவு திட்டத்தில் இடம் இல்லை என்பதுதான். இந்த நிலை மாறவேண்டும், அடுத்து திரைப்பட விநியோகஸ்தர்கள் எமது படைப்புகளையும் வாங்கி வெளியிட்டு படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும், அப்பொழுதுதான் எமக்குள் தயாரிப்பாளர்கள் உருவாகி முன்வர வாய்ப்புகள் ஏற்படும்.
8. இளையவர்களின் படைப்புக்கள் தொடர்பாக உங்களின் மதிப்பீடு என்ன ?
ஒரு படைப்பாளியின் படைப்பு திரையிடும் வரையில் தான் அது அவருக்கு சொந்தம், திரையிடப்பட்டபின் அது சமூகத்தின் சொத்து, அடையாளம். தனது சமூகத்தின் அடையாளமாக அமையவிருக்கும் அந்தப்படைப்புகள் சமூகத்திற்கு அவப்பெயரை பெற்றுத்தரக்கூடாது என்ற பொறுப்பு படைப்பாளிகளுக்கு உள்ளது, ஆகவே ஒவ்வொரு படைப்பும் தரமான பதிவுகளாய் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டும். திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள இளையவர்கள் முறைப்படி பயின்று, பயிற்சி பெற்று, அனுபவம் வாய்ந்தவர்களுடன் இணைந்து பணிபுரிந்து இலக்கணத்தை நன்கு அறிந்து கற்று வளர்ந்த பின்னர் களத்தில் காலடி வைத்தால் அவர்களின் எண்ணத்தில் தெளிவும் படைப்பில் தரமும் உயர வாய்ப்புண்டு.
தெளிவுடன் படைப்பின் தரத்திலும் எமது நோக்கிலும் மிகுந்த கவனம் செலுத்துதல் மிக அவசியம். நாம் எத்தனை படைப்புகள் படைத்திருக்கின்றோம் என்பதல்ல முக்கியம், என்ன தரத்தில் படைக்கின்றோம் என்பதுதான் முக்கியம், எமது படைப்பின் மூலம் என்ன கூற வருகிறோம் என்பது தான் முக்கியம், கதை என்றாலே அடிதடி கத்திக்குத்து, வெட்டு, துப்பாக்கி, வன்முறை துரோகம், காதல் தான் என்ற வட்டத்தை விட்டு சற்று தொலைநோக்கு பார்வை இருந்தால் அது எமது சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமைய வாய்ப்புகள் இருக்கும்.
534476_478676032176443_2068500261_n
முதலில் எங்களை நாங்களே மதிப்பீடு செய்ய பழக வேண்டும், பின் எம்மால் என்ன முடியுமோ அதை திறன்பட எப்படி செய்யலாம் என்று முயற்சிக்கவேண்டும். ஒரு படைப்பாளிக்கு உள்வாங்கல் என்பது மிக மிக அவசியம், எமது படைப்புகள் வெளிவரும் போது பல்வேறுபட்ட விமர்சனங்களும் பாராட்டுக்களும் பெற வாய்ப்புண்டு, விமர்சனங்கள் எமது அடுத்த படைப்புக்கு பாடமாக அமையும், பாராட்டுக்களை தலையில் வாங்காது இதயத்தில் வாங்கி இயங்கினால் வெற்றிகள் எமை வரவேற்க வாய்ப்புகள் அதிகம். இன்று பல தேசங்களில் எமது கலைஞர்கள் பல படைப்புக்களை படைத்து சர்வதேச விருதுகளையும் பெற ஆரம்பித்து இருப்பது எமது வெற்றிக்கு அறிகுறியாக இருக்கிறது. வாழ்த்துக்களும் ஆதரவும் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
நன்றிகள்
வாழ்த்துகள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மாவீரர்கள் என்றும் துணையிருப்பார்கள்.
நன்றி: துளியம் இணையம்

Post a Comment

Powered by Blogger.