Halloween party ideas 2015
. 


21/03/16/Monday/Colombo/#01 (Font-Arial Unicode MS)
வத்தளை தமிழ் பாடசாலை தொடர்பில் ஜோன் அமரதுங்கவின் கண்களை நான் திறந்துள்ளேன்
-     முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்கிறார் மனோ கணேசன்
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை தொகுதியில் ஓலியமுல்லை பிரதேசத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னமே ஒதுக்கப்பட்ட தமிழ் பாடசாலைக்கான காணியில் தமிழ் பாடசாலை அமைக்க இன்னமும் மூன்று மாதத்துக்குள் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க அறிவித்துள்ளார். மூன்று மாத காலக்கெடுவை இன்னமும் குறைத்து ஒரு மாதத்துக்குள் அடிக்கல்லை நாட்டி இந்த நல்ல காரியத்தை ஆரம்பித்து வைப்போம் என்ற முன்மொழிவுடனும், இந்நடவடிக்கைக்கு அனைத்து ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குவோம் என்ற உத்தரவாதத்துடனும், அமைச்சரின் இந்த அறிவிப்பை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். பெப்ரவரி 13ம் திகதி இந்த காணியில் அடிக்கல் நாட்டுவோம் என மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவின் மூலமாக இதற்கு முன்னர் நாம் அறிவித்து இருந்தோம். இதன்மூலம், இருபது வருடங்களாக ஒவ்வொரு தேர்தலின் போதும் பேசப்பட்டு, பின்னர் கிடப்பில் போடப்பட்டு வந்த, இந்த வத்தளை தமிழ் பாடசாலை பிரச்சினையில், அமைச்சர் ஜோன் அமரதுங்க உட்பட பலரது கண்களை நான் திறந்து வைத்துள்ளேன் என்பது மனசாட்சிபூர்வ உண்மை. இதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இது ஒரு அரசாங்க பாடசாலை. கட்டப்படப்போவது ஒரு அரசாங்க பாடசாலை. எனவே அரச காணியில் அரச பாடசாலை கட்டபடுவதில், நாம் காணியுரிமை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு. உண்மையில் அரச காணி என்ற காரணத்தினால் இந்த காணிக்கு பணம் செலுத்தவும் தேவையில்லை என்று பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க பல வருடங்களுக்கு முன்னரே எனக்கு எழுத்து மூலம் அறிவித்து உள்ளார். வத்தளையில்  தமிழ் பாடசாலை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பெரும் அமைதி போராட்டங்களை மிக நீண்ட காலமாக மிகப்பலர் நடத்தியுள்ளனர். இதனாலேயே இந்த பிரச்சினை நிரந்தரமாக கிடப்பில் போடப்படாமல் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டு பேசப்பட்டு வந்தது. எனவே இப்பிரதேசத்தை சார்ந்த சில மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து தன்னுடன் சேர்ந்து இந்த பிரச்சினை தொடர்பில் போராடினார்கள் என்று மாத்திரம் அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறுவது மிகப்பெரும் தவறு.    

தமிழ் பாடசாலைக்கு என ஓலியமுல்லையில் ஒதுக்கப்பட்ட இந்த  1-1/4 ஏக்கர் காணி, பாடசாலை அமைக்க போதாது என்றும், மொழி அடிப்படையில் இங்கே பாடசாலை அமைக்க முடியாது என்றும், எனவே இங்கே தமிழ் பாடசாலை கட்டவே கூடாது என்றும்கூறி 23-06-2015ம் திகதியன்று ஒரு கடிதத்தை, கல்வி அமைச்சின் செயலாளர், இந்த காணியை நகர அபிவிருத்தி சபையிடம் தான்தோன்றித்தனமாக மீண்டும் ஒப்படைத்துள்ளார். இது ஏன் என எனக்கு விளங்கவில்லை. யாரைக்கேட்டு கல்வி அமைச்சு செயலாளர் இந்த முடிவை மேற்கொண்டார் என்பதை பகிரங்கமாக ஊடகங்களில் ஆராய நான் விரும்வில்லை. ஆனால், இந்த காணியை மீண்டும் நகர அபிவிருத்தி சபைக்கு ஒப்படைத்து, அங்கிருந்து அதை வத்தளை நகரசபைக்கு எடுத்து, அதை ஒருசிலருக்கு வீட்டு கட்டும் நோக்கில் பிரித்து வழங்க ஒரு கூட்டம் வத்தளையில் திட்டம் போட்டது எனக்கு தெரியும். 23-06-2015 என்பது கடந்த வருடம். அதன்போது நமது நல்லாட்சியே நடைபெற்று வந்தது. தூரதிஷ்டவசமாக நான் அப்போது பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இருக்கவில்லை. அமைச்சர் ஜோன் அமரதுங்க இருந்தார். எனவே இது பற்றிய விபரங்களை அமைச்சர் தெரிந்து இருப்பார் என நான் நம்புகிறேன். எனவே கடந்த அரசையும், ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சியையும் இது தொடர்பில் குறை சொல்வதில் பயனில்லை.
இதனால்தான் நான் காலம் தாழ்த்தாது இந்த காணியில் அடிக்கல்லை நாட்டி இந்த தமிழ் பாடசாலை அமைக்கும் நல்ல காரியத்தை ஆரம்பித்து வைப்போம் என இப்போதும் வலியுறுத்தி கூறுகிறேன். காலம் தாமதிக்க, தாமதிக்க, இது மீண்டும் கிடப்பில் போடப்படும் சாத்தியம் இருக்கின்றது. இந்த காணியை  பிரித்து  கொள்ளையடிக்கும் முயற்சிகளுக்கு இடம் இருக்கிறது. இதனால்தான், ஜனவரி 30ம் திகதி மேல்மாகாண ஆளுநர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி, பெப்ரவரி 13ம் திகதி இந்த காணியில் அடிக்கல் நாட்டும் அறிவிப்பை மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவை கொண்டு நாம் அறிவித்தோம். அதன்மூலம், இந்த  தமிழ் பாடசாலை தொடர்பான பிரச்சினையில் மூடியிருந்த பலரது  கண்கள் திறந்தன. இதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.   

      

Post a Comment

Powered by Blogger.