Halloween party ideas 2015
.

                                  அன்பிற்குரியீர்! 

        வணக்கம். மதுரை அருகே ஈழத் தமிழ் ஏதிலியர் ரவீந்திரன் மரணமடைந்ததை நாம் அறிவோம். வருவாய்துறை அதிகாரியின் மனிதாபிமானமற்ற அராசகப் போக்கால் அவர் இன்று நம்மிடம் இல்லை. மின்கம்பம் மேலேறி உயிர் துறந்தார். ரவீந்திரனுக்கு உண்மையில் முகாம் சிறை வாழ்வைக் காட்டிலும் மரணம் ஒருவித விடுதலைதான். இப்படி நமை எண்ண வைக்கிறது கும்முடிப்பூண்டி முகாமில் நடைபெற்றுவரும் சித்தரவதைகள். அண்மையில் சுபேந்திரன் என்ற ஈழத் தமிழர் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லி பாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை அவரால் கால்களை இயக்கமுடியவில்லை. தொடர்ந்தும் அந்தக் கால்கள் இயங்குமா எனபது சந்தேகமே. அந்தக் குடும்பம் அன்றாடச் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கிறது. இந்நிலையில் வெற்றுக் காகிதத்தில் கையொப்பம் போடும்படி உளவுத் துறையும் காவல்துறையும் சுபேந்திரன் துணைவியாரை மிரட்டி வருகின்றனர். பொய் வழக்குப் போட்டுவிடுவோம் என்ற வழக்கமான மிரட்டலும் செய்கின்றனர். சுற்றியும் காவலர்கள் சூழ்ந்து அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

முகாமின் தலைவர் கண்ணன் அவர்களையும் அதே காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்து ஜட்டியோடு உட்கார வைத்துள்ளனர். அம்முகாமில் பலரும் போலி வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் நம்மவர்கள் போராடி அவர்களைப் பிணை எடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது. இப்படி வாழ்வதற்கு சாகலாம் இல்லையா? இப்போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டியது நம் கடமை. 

கும்மிடிப்பூண்டி முகாமின் நிலையை தமிழ்ச் சமூகத்திற்கு அறியத்தந்து மனித உரிமை மற்றும் சனநாயக ஆற்றல்களின் ஆதரவுக் குரலை அவர்களுக்காக உயர்த்தச் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் அமைப்புகள் இதுகுறித்து நிலை எடுத்து தடுக்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டில்  ஈழத் தமிழரின் அவலநிலைக்கு எதிராய் தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும். 

இந்நோக்கங்களுக்காக நாளை 17.03.2016 வியாழன் காலை 10 மணியளவில் பத்திரிகையாளர் மன்றத்தில் நாளிதழ் மற்றும் ஊடகங்கள் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். தோழர் தியாகு, விடுதலை ராசேந்திரன் ஆகியோரோடு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்கம், தமிழர் முன்னணி, குமுக விடுதலைத் தொழிலாளர்கள், உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.   

இந்நிகழ்வுக்கு தோழமை இயக்கங்கள், நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

வே.பாரதி 

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

Post a Comment

Powered by Blogger.