Halloween party ideas 2015
.

 கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கலப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய மனைவி கவுசல்யா மீது நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று குமரலிங்கம் சென்று சங்கரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவை பார்வையிட வந்தேன். அவர் உடல் நலம் தேறி வருகிறார். பூரண குணம் அடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.

அவர் தனியாக இருப்பதால் மிகவும் மனஉளச்சலுடன் காணப்படுகிறார். ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லாமல் தனிமையில் இருக்கிறார். எனவே சங்கரின் உறவினர்கள் யாரையாவது அனுமதித்து கவுசல்யா அருகில் இருந்தால் மன ஆறுதல் கிடைக்கும். தற்போது தனியாக இருப்பதால் மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளார்.

உலகத்தில் 10 கோடி மக்கள் இந்த படுகொலை சம்பத்தை பார்த்து கண்ணீர்விட்டுள்ளனர். இது ஒரு மனித உரிமை மீறிய செயல். கவுசல்யாவிடம் சிகிச்சை முடிந்து நீ எங்கே செல்ல போகிறாய் என்று கேட்டதற்கு, எனது கணவர் சங்கரின் வீட்டிற்கு தான் செல்வேன் என்று உறுதியாக கூறினார்.

கொலைக்கு யாரெல்லாம் காரணம் என்று கவுசல்யாவிடம் கேட்டதற்கு எனது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அம்மா மற்றும் சிலர் தான் முக்கிய காரணம் என்று கூறினார். காவல் துறை, இந்திய அரசு, மாநில அரசு ஆகியவை இது போன்ற ஆணவ கொலைகளை தடுக்க தனிசட்டம் கொண்டு வரவேண்டும் என்று கடந்த 3, 4 ஆண்டுகளாக நான் தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. ஆனால் ஆணவ கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எனவே அரசு உடனடியாக இது போன்ற சம்பவங்களை தடுக்க தனி சட்டத்தை கொண்டு வரவேண்டும். இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு தற்போது ரூ. 5 லட்சம் நிதி வழங்கியுள்ளது. இது போதாது மத்திய, மாநில அரசு ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும்.

கவுசல்யா மற்றும் சங்கரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது போன்ற ஆணவ கொலைகளில் தொடர்பு உடையவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தனி சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும். அப்போது தான் இது போன்ற கொலைகளை தடுக்க முடியும்.

இந்த படுகொலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற 26–ந் தேதி உடுமலையில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Powered by Blogger.