Halloween party ideas 2015
.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்  முன்வைத்த 'கூட்டணி ஆட்சி - அதிகார பகிர்வு' என்னும் கோட்பாடும், அதன் அடுத்தகட்ட நகர்வாக 'மாற்று அரசியல் - மாற்று பாதை' என்று உருவெடுத்த மக்கள் நலக் கூட்டணி அமைந்ததால் தான் இன்று தமிழ்நாட்டு அரசியலின் திசைவழிப் போக்கே அடியோடு மாறிப்போயுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி பேரம் பேசுகிறார், இன்னும் பேரம் படியவில்லை அதனால் தான் கூட்டணி பற்றி எதுவும் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் என்று கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வந்தது. திமுக தலைவர் கலைஞரும் 'பால் - பழம்' கதையை வேறு சொன்னார். இந்நிலையில் தேமுதிக தனித்தே போட்டியிடும். கூட்டணிக்காக நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை என்று அறிவித்திருக்கிறார் விஜயகாந்த். திமுக - அதிமுக ஆகிய இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் தனித்து நிற்கிறோம் என்றும் அறிவித்துள்ளனர்.

கலைஞர் சொல்வது போல அப்படியே தேமுதிக - திமுக பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டாமல் போயிருந்தால் அது ஒரேயொரு விடயத்துக்காக மட்டுமே இருக்கும். அது 'கூட்டணி ஆட்சி - அதிகார பகிர்வு' என்னும் கோரிக்கையில் தான். இது தான் தமிழக அரசியலில் கோட்பாட்டளவில் மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம். 'மாற்று அரசியல்' என்று கொள்கை உறுதியோடும், தெளிவான பார்வையோடும் மக்கள் நலக் கூட்டணி அறிவித்து செயல்பட துவங்கி தமிழக மக்களிடம் ஏற்படுத்திய எழுச்சி தான் தனித்து போட்டி என்று முடிவெடுக்க தேமுதிகவிற்கு துணிச்சலை தந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக மதவெறி மற்றும் சாதிவெறி பாசிசத்தை முன்னிறுத்தும் பாஜக மற்றும் பாமகவை யாருமே சீண்டாமல் அரசியல் களத்தில் தனிமைப்படுத்தியதே நமது முதல் வெற்றி எனலாம். தேசிய இனங்களின் உரிமைகள், மாநில சுயாட்சி உரிமைகள், தனி நபர் உரிமைகள், கல்வி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் என எல்லா தளங்களிலும் ஆர்.எஸ்.எஸ்சின் பாசிச கொள்கைகளை நிறுவும் முயற்சியில் இருக்கிறது பாஜக. எப்படியாவது யார் முதுகில் ஏறி சவாரி செய்தாவது தமிழ்நாட்டில் நிலைகொள்ள வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். அதேபோல தங்கள் தனிப்பட்ட குடும்பத்தின் அரசியல் தேவைக்காக உழைக்கும் மக்களிடம் சாதிவெறி விஷத்தை விதைத்து தந்தை பெரியாரால் பண்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது பாமக. வருடாவருடம் குறைந்து வரும் தங்கள் சாதி ஓட்டுகளை காட்டி, அடமானம் வைத்து பேரம் பேசும் முயற்சியில் இருந்தது பாமக. ஆனால் ஒரு சேர இந்த இரண்டு தீய சக்திகளையும் மக்கள் நலக் கூட்டணியின் சரியான முன்னெடுப்புகளால் மைய அரசியலிலிருந்து விலக்கி தனிமைப்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இருந்த பெரும் ஆபத்து இதனால் தவிர்க்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  பற்றி பலரும் எதிர்மறையான கருத்துக்களை விமர்சனமாக சொல்கிறார்கள். இன்று சாதி மத வெறியை முன்னிறுத்தும் கும்பல்களின் தலைவர்கள் தான் சிறந்த பேச்சாளர்களாகவும், கோடிகள் செலவழித்து படித்த ஜெண்டில்மேன்  என்று போலி பிம்பத்தில் உலாவுகிறார்கள். ஆனால் விஜயகாந்த் அவர்கள் திரைத்துறையில் இருந்த காலம் தொடங்கி இன்று ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வரை எந்த இடத்திலும் சாதிவெறியையோ, மதவெறியையோ தனிப்பட்ட ரீதியிலும், கட்சியிலும் முன்னிறுத்தியது இல்லை. ஈழம் கிடைக்கும்வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்று அறிவித்து அன்றைய நாளை வறுமை ஒழிப்பு நாளாக மட்டுமே கடைபிடித்து வருபவர். எல்லா சித்தாந்தங்களையும் பேசிவிட்டு அதற்கு மாறாக நடப்பவர்கள் மத்தியில் விஜயகாந்த் அவரளவில் நேர்மையாகவே இருக்கிறார்.

- வன்னி அரசு.

Post a Comment

Powered by Blogger.