Halloween party ideas 2015
.

பூமிக்கும், நிலவுக்குமான தொலைவு 3,84,400 கி.மீ. அங்கு மனிதர்கள் சென்றுவந்துவிட்டனர். ஊருக்கும், சேரிக்குமான தொலைவு அதிகப்பட்சம் 1/2 கி.மீட்டர்தான். ஆனால் இன்னமும் ஊர் கிணற்றின் தண்ணீர், சேரி வந்து சேரவில்லை. ஊரைக் காக்கும் கடவுளின் தேர் பல்லாயிரம் ஆண்டுகளாக அசைந்து நகர்ந்தாலும், சேரிக்கு வர சாமிக்கும் வழி தெரியவில்லை. ஒரு கொடிய மிருகத்தைப்போல நம்மை சுற்றி வளைத்திருகிறது சாதி. அதிலும், அண்மை காலமாக சாதியத் தாக்குதல்கள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மம் மற்ற உயர்சாதியினரிடையே திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்றால் அனைவரும் அறிவார்கள். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் கழுகுமலை நகரச் செயலாளர். சிறு தீப்பெட்டி உற்பத்தி சங்கத் தலைவர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர். 65 வயதான ராதாகிருஷ்ணன் இந்த பகுதியில் மக்களின் மதிப்பைப் பெற்றவராக இருந்தார். அருகில் உள்ள அவரது சொந்த கிராமமான வேலாயுதபுரத்தில் சுமார் 100 ரெட்டியார் குடும்பங்களும், சுமார் 60 அருந்ததியர் குடும்பங்களும் வசிக்கின்றன. சாதிய அடிக்கின் அடிநிலையில் அழுத்தப்பட்டிருக்கும் அருந்ததியர்கள் மீது, ரெட்டியார் சாதியினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

ஊருக்குள் செருப்புப் போட்டுக்கொண்டு போகக்கூடாது. வேட்டியை இறக்கிவிட்டு நடக்கக்கூடாது. துண்டு போடக்கூடாது. வாகனங்களை ஓட்டிச் செல்லக்கூடாது. பேருந்தில் இடம் இருந்தாலும் தங்களுக்கு முன்பு நின்றுகொண்டுதான் வர வேண்டும். ரேஷன் கடையில் தாங்கள் பொருள் வாங்கிய பிறகுதான் அருந்ததியர்கள் வாங்க வேண்டும்… என்று பல கட்டுப்பாடுகள். அவை மீறப்படும்போது எல்லாம் தாக்குதல் நடக்கும்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாதிப் பிரச்னையை முன்னிட்டு ஊரில் முதல் உயிர்ப்பலி நிகழ்ந்தது. சுபா என்ற 13 வயது அருந்ததியர் சிறுமி ஊர் வழியே சைக்கிள் ஓட்டிக்கொண்டுப் போனார். ‘சக்கிளிச்சி எங்க முன்னாடி சைக்கிள் ஓட்டுறியா?’ என்று சைக்கிளை எட்டி உதைத்தனர். அலங்கோலமாக ஆடை கலைந்து கீழே விழுந்தாள் அந்த சிறுமி. அழுது எழுந்து ஓடியவள் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு செத்துப்போனாள். எட்டி உதைத்து எக்காளமிட்டு ‘மேல்சாதி’ பெருமக்கள் இப்போதுவரை அந்தக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை.

‘‘அதன்பிறகு வேலாயுதபுரம் ஓர் அமைதியற்ற ஊரானது. பல அருந்ததியர் குடும்பங்கள் ஊரை காலி செய்தன. மிச்சம் இருக்கும் குடும்பங்களையும் தனிமைப்படுத்தும் நோக்கத்தில் ஊருக்கும் சேரிக்கும் இடையில் ஓர் தடுப்பு வேலி அமைத்தார்கள். உத்தபுரம் தீண்டாமைச் சுவர் போல, அது தீண்டாமை வேலி. அதை அகற்ற வேண்டி போராட்டங்கள் நடந்த நிலையில், கருப்பசாமி என்ற அருந்ததியர் இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு இப்போது வரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை’’ என்கிறார் கோவில்பட்டி சி.பி.எம். நகரச் செயலாளர் சீனிவாசன்.

அந்த சமயத்தில் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அந்த தீண்டாமை வேலி அகற்றப்பட்டது. இப்படி ஆறேழு ஆண்டுகளாக தொடர்ந்து வந்த சாதிப் பிரச்னையில் ஆரம்பத்தில் அருந்ததியர்களுக்கு மறைமுக ஆதரவளித்து வந்த ராதாகிருஷ்ணன், கருப்பசாமியின் கொலைக்குப் பிறகு வெளிப்படையாக அதைக் கண்டித்தார். ஆனால் அந்த ஊரில் அவர் மட்டுமே கம்யூனிஸ்ட். அவருடையது ஒற்றைக்குரல் எடுபடவில்லை.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வேலாயுதபுரத்தில் ஊர்க் கூட்டம். ‘ஊர்’ என்றால் அது ஆதிக்க சாதியைத்தான் குறிக்கும். அதுதான் தமிழ் கலாசாரம். அதன்படி கூடிய ரெட்டியார்கள், கருப்புசாமி கொலை வழக்குச் செலவை ஊர் பொதுப்பணத்தில் இருந்து பகிர்ந்துகொள்வது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு ராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எனினும் ஊரின் பெரிய மனிதர் என்ற அடிப்படையில் முகத்துக்கு நேராக அவருக்கு பெரிய எதிர்ப்பு எழவில்லை. இதன்பிறகு, ‘உங்கள் தோட்டத்தின் வழியே அருந்ததியர்களை நடக்கவிடக்கூடாது’ என்று ஊர்மக்கள் சேர்ந்து வலியுறுத்தியுள்ளனர். ‘அப்படி எல்லாம் செய்ய முடியாது. நீங்களும் நடந்துகொள்ளுங்கள். அவர்களும் நடந்துகொள்ளட்டும்’ என்று அவர் சொல்லிவிட்டார். இதுதான் கடைசியாக நடந்தப் பிரச்னை. இதன்பிறகு ராதாகிருஷ்ணன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகத்தான் கிடந்தார்.

‘கொலைப்பழி எப்படியும் அருந்ததியர்கள் மீதுதான் விழும்’ என்பது அவர்களின் கணக்கு. ஆனால் உடன் இருந்த ஒருவர் தப்பித்துவிட்டதால் கொலையாளிகள் யார் என்பது தெரிந்துவிட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஐந்து பேரில் ராதாகிருஷ்ணனின் ரத்த உறவினர்கள் இரண்டு பேர் என்பது அதில் இன்னும் கொடுமையானது. இப்போது ராதாகிருஷ்ணனின் மகன், மகள்கள், மனைவி என மொத்த மொத்த குடும்பமும் கடும் மன உளைச்சலிலும் உயிர் பயத்திலும் இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேசக்கூட அஞ்சுகின்றனர். வட இந்தியாவின் ‘காஃப்’ பஞ்சாயத்துகளை போல, ஊர்கூடி பேசி திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ளது உடைப்பன்கிளம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த தலித்களுக்கும், கோனார்களுக்கும் சுடுகாட்டுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த ஜனவரியில் பிரச்னை. இந்நிலையில், உடைப்பன்குளத்தில் இருந்து கோவைக்கு சென்று பணிபுரிந்த இரண்டு தலித்களும், கோவையைச் சேர்ந்த அவர்களுடைய உறவினர் ஒருவருமாக மொத்தம் மூன்று பேர், கடந்த மாத ஆரம்பத்தில் கோயில் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தனர். மறுபடியும் கோவை திரும்ப டூ-வீலரில் சென்றுகொண்டிருக்கும்போது மூன்று பேரையும் துரத்தி, துரத்தி வெட்டி கொன்றார்கள் ஆதிக்க சாதியினர். சுடுகாட்டு பாதை தொடர்பாக எழுந்தப் பிரச்னை இறுதியில் மூன்று உயிர்களை சுடுகாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ்குமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் பனியன் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தார். இவர் ஒரு தலித். உடன் பணிபுரிந்த ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியைச் சேர்ந்த பவானியை காதலித்தார். இவர் தேவர் சாதியைச் சேர்ந்தவர். இருவருக்கும் திருமணம் முடிந்து 2 குழந்தைகளும் பிறந்துவிட்டன. பெண் வீட்டுத் தரப்பில் அச்சுறுத்தல் தொடர்ந்து வந்தாலும் பவானி அவ்வப்போது சொந்த வீட்டுக்கு சென்று வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு முன்பு மலேசியாவில் வேலை கிடைத்ததால் சதிஷ்குமார் மனைவி, குழந்தைகளை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு சென்றார். கடந்தவாரம் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணை, அவரது குடும்பத்து ஆட்களே சேர்ந்து கொலை செய்துவிட்டனர். பதறித் துடித்து மலேசியாவில் இருந்து வந்துள்ள சதிஷ்குமார், இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நிராதரவாக நடுரோட்டில் நிற்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா-இளவரசன் காதல் பிரச்னையைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைத் தீ வைத்து எரித்தார்கள். மொத்த ஊரும் எரிந்து கரிக்கட்டையானது. ஒருசில மாதங்களில் கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாளையத்தில் தலித் குடியிருப்புக்கு தீ வைத்து எரித்து எட்டு வீடுகள் நாசமாக்கப்பட்டன. பிறகு மரக்காணத்தில் தலித் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டது. 11 வீடுகளை தீ தின்றது. பெரியகுளம் அருகே மேல்மங்களம் கிராமத்தில் அருந்ததியர் பையனுக்கும், அம்பலக்காரர் பெண்ணுக்கும் காதல். இரு    மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர். உடனே ஊரில் வசிக்கும் மற்ற ஆதிக்க சாதியினரும் ஒன்றிணைந்துகொண்டு, தலித் குடியிருப்புக்கு தீ வைத்து கொழுத்தினார்கள். 10-க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள தெற்கு மணக்கரை கிராமத்தில், கோயில் திருவிழாவில் எழுந்த ஒரு சிறு பிரச்னையை சாக்காக வைத்து தலித்களின் குடியிருப்பை துவம்சம் செய்தது தேவர் தரப்பு. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. மதுராந்தகம் அருகே உள்ளது நுகம்பல் கிராமம். இதற்கு முன்பு பெரிய பிரச்னை எதுவும் இல்லாத ஊர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘வன்னியர் மண்ணில் அந்நியருக்கு இடம் இல்லை’ என்று ஒரு ஃப்ளெக்ஸ் போர்டு வைக்க… பிரச்னை வெடித்தது. இறுதியில் நொளம்பூரின் 22 தலித் மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

‘திருமங்கலம் ஃபார்முலா’ போல, இப்போது தலித் மக்களை அடக்கி ஒடுக்க ஆதிக்கச் சாதியினர் கையில் எடுத்திருப்பது ‘தர்மபுரி ஃபார்முலா’. மொத்த ஊரையும் எரித்து நாசமாக்கி, தலித்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து கஞ்சிக்கு தங்களிடமே கையேந்த வைக்கும் குரூரம் இது. ராமதாஸின் ‘அனைத்து சமுதாய பேரியக்கத்தின்’ வருகைக்குப் பிறகு சாதி வெறி மேலும் இறுக்கத்தன்மையை அடைந்திருக்கிறது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உயர்ந்த தத்துவத்தைப் பின்பற்றி, தலித்களை ஒடுக்கும் பொதுநோக்கத்தில் மற்ற ஆதிக்க சாதியினர் ஒன்று சேர்ந்துகொள்கின்றனர்.

‘‘இது தலித் மக்களின் எழுச்சிக் காலம். கடந்த பத்தாண்டுகளாக தலித்கள் தங்களின் கடுமையான உழைப்பின் மூலமும், கல்வியின் மூலமும் பொருளாதார ரீதியில் மேல் எழுந்து வருகின்றனர். இது மற்ற சாதியினரின் கண்களை உறுத்துகிறது. காலம், காலமாக தனக்கு கை கட்டி, அடிமைச் சேவகம் செய்தவர்கள் தங்கள் கண் முன்னாலேயே வசதியாக வாழ்வதையும், வாகனங்களில் செல்வதையும், ‘ஜீன்ஸும்-கூலிங்கிளாஸும்’ அணிவதையும்… அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஏதாவது ஒரு சிறு பிரச்னை வரும்போது அதையே காரணமாக வைத்து மொத்த வன்மத்தையும் தீர்த்துக்கொள்கின்றனர்’’ என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். தலித்களுக்கு நிலம் சொந்தம் இல்லாத சூழலில் சாதிப் பிரச்னையில் பலி ஆடுகளாக எப்போதும் தலித்கள்தான் இருக்கின்றனர். தர்மபுரி, நத்தம் காலனியில் காதலித்த குற்றத்துக்காக இளவரசன் உயிர் பறிபோனது. ஊரே எரித்து நாசமாக்கப்பட்டது. இப்போது கடந்த வாரம் ஆறு தலித் இளைஞர்களை போலீஸ் பிடித்துச் சென்றிருக்கிறது. பாதிப்பின் சுமையை தொடர்ந்து தலித்களே சுமக்க வேண்டியுள்ளது. இங்கு மட்டுமல்ல… தமிழ்நாடு முழுவதுமே இதுதான் நிலை.

‘கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதைத் தடுப்பது தண்டனைக்கு உரிய குற்றம்’ என்கிறது சட்டம். ஆனால் எந்த ஊரிலாவது தலித்கள் ஆலயத்துக்குள் நுழைய சென்றால், ‘பொது அமைதிக்கு கேடு விளைவிப்பதாக’ தலித்களைதான் கைது செய்கின்றனர். அதாவது யார் சட்டப்படி நடப்பவர்களோ அவர்களை கைதுசெய்து, சட்டத்தை மதிக்காதவர்களை பாதுகாக்கிறது அரசு. இந்த லட்சணத்தில் தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் என்ற பெயரில் ஊருக்கு ஊர் ஓர் அரசு அலுவலகம் இயங்கிக் கொண்டிருப்பது எதற்கு என்றுதான் தெரியவில்லை.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற பத்து வயது சிறுமியை பா.ம.க.வின் கிளைக் கழகச் செயலாளர் பூபதி உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்து, கழுத்தை நெறித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். கொலையாளிகள் சுதந்திரமாக வெளியில் திரிய, தன் அன்பு மகளை பறிகொடுத்த அந்த ஏழைத் தந்தை பரதேசியைப் போல அலைகிறார்.

கடந்த வாரம் கரூர் மாவட்டம் குளித்தலையில் 10-ம் வகுப்புப் படிக்கும் ஒரு தலித் மாணவியை, பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஓர் ஆதிக்க சாதி வெறிநாய் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து வந்த செய்திகள் மேலும் அதிர்ச்சி அடைய வைக்கின்றன. கடந்த ஓர் ஆண்டில் குளித்தலை காவல் நிலைய எல்லையில் மட்டும் மொத்தம் 5 தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். எட்டாம் வகுப்புப் படிக்கும் சிறுமி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி.. என்ற வரிசையில் நான்கு வயது பெண் குழந்தை கூட இருக்கிறது. அந்த சின்னஞ்சிறு தளிர்களை சீரழிக்கும் குரூர மனநிலை இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?வாழத் தகுதியற்ற இத்தகைய இழிபிறவிகள், மற்றநேரத்தில் சாதிப் பெருமை பேசுகிறார்கள். தலித் வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தால் தங்கள் சாதி கௌரவத்திற்கு இழுக்கு என கருதும் இவர்களின் கால்கள், காம அரிப்பு எடுத்தால் காலனிக்குதான் நடக்கின்றன. இது குளித்தலையின் கதை மட்டும்தான் என்றால், மாநிலம் முழுக்க உள்ள யதார்த்தத்தின் பிரமாண்டத்தை எண்ணிப் பாருங்கள். சாதி இழிவுடன் சேர்த்து ஆண் வக்கிரத்தின் அபாயத்தையும் இந்த பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது வேலாயுதபுரம், உடைப்பன்குளம், மேல்மங்களம், மணக்கரை, குளித்தலை போன்ற ஊர்களில் மட்டும்தான் சாதிவெறி இருக்கிறது என்பது அல்ல. இந்தியாவில் உள்ள 6,38,000 கிராமங்களும் ஊர் என்றும், சேரி என்றும் பிரிந்துதான் இருக்கின்றன. அனைத்து இடங்களிலும் சாதி ஆதிக்கம் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் வடிவங்கள், கொலை, கௌரவக் கொலை, வீடுகள் எரிப்பு என்பதாக மட்டுமல்ல… சாதிவெறியின் வடிவங்கள் நமது யூகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் டி.சண்முகாபுரம் என்ற கிராமத்தில் ‘தலித்கள் ஆண் நாய் வளர்க்கக்கூடாது’ என்ற கட்டுப்பாடு இப்போதும் இருக்கிறது. தலித்கள் ஆண் நாய் வளர்த்தால் அது உயர் சாதியினரின் பெண் நாய்களுடன் சேர்ந்துவிடுகிறதாம். அவர்கள் வளர்க்கும் ஆண் நாய்கள், தலித்கள் வளர்க்கும் பெண் நாய்களுடன் சேர்ந்துவிட்டால் அது சாதிக் கலப்பில் வராது போலும். எத்தனையோ பேர் அசிங்கம், அசிங்கமாக கழுவி ஊற்றியும் அந்த ஊர் இந்தப் பழக்கத்தை தொடரத்தான் செய்கிறது.‘‘இவை எல்லாம் வெறும் நகைச்சுவைகள் அல்ல. இத்தனை ஆண்டுகள் நாம் பெற்ற கல்வி நம்மை எந்த வகையிலும் பண்பாடு உள்ளவர்களாக மாற்றவில்லை என்பதன் வெளிப்பாடு. நாம் வாய்கிழிய பேசும் ஜனநாயகம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதன் அடையாளம். சாதிவெறி நடவடிக்கைகளில் ஈடுபடும் பலர் படித்தவர்களாக இருக்கின்றனர். அதுதான் இன்னும் அச்சத்தைத் தருகிறது. இந்த சூழலை மாற்ற நாம் உடனடியாக கல்வியில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும்.

தன் சொந்த வீட்டில் சாதி பார்க்கப்படுவதை எதிர்த்துப் பேசும் மனநிலை உடைய மாணவர்களை உருவாக்க வேண்டும். அதற்கேற்ற ஆசிரியர்கள், வகுப்பறைகளை கொண்டு வர வேண்டும். நாம் உண்மையில் மிகப்பெரிய சமூக சிக்கலின் விளிம்பில் நிற்கிறோம். இதைப் புரிந்துக்கொண்டு தொடர்ந்து வினையாற்றினால் அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகேனும் இந்த நிலையை கொஞ்சம் மாற்றலாம். அரசு, சமூக இயக்கங்கள், கட்சிகள் அனைவரும் இத்தகைய கல்வி மாற்றத்திற்காக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.

சாதிப்பற்று கொண்டோர் சிந்திக்க வேண்டியது என்னவெனில், அது எந்த சாதி வெறியாக இருந்தாலும் தன் சொந்த சாதிக்கே எதிராகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பெரும் வன்முறை நடந்தது. அதில் காயம்பட்டோரை மதுரையின் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனை உரிமையாளரும், அடிபட்டவர்களும் ஒரே சாதிதான். ஆனால், ‘பணம் கட்டாமல் மருத்துவம் கிடையாது’ என்று கறாராக கைவிரித்துவிட்டனர் தன் சொந்த சாதியில் உள்ள ஏழை மக்களை அழைத்து வந்து ஜவுளி கடைகளிலும், முறுக்குக் கம்பெனிகளிலும் குறைந்த கூலிக்கு உழைப்பை உறிஞ்சுவது யார்? உங்கள் சொந்தக் சாதிக்காரன் நடத்தும் கல்லூரி என்பதற்காக உங்கள் பிள்ளைக்கு நன்கொடை வாங்காமல் சீட் தருவார்களா? உங்கள் சாதிக்காரன் பள்ளியில் ஒரே ஒரு எல்.கே.ஜி. சீட் இலவசமாக பெற்றுவிடுங்கள் பார்ப்போம். செத்தால் மாலையுடன் வரும் சாதி சங்கம், வாழ வழியில்லாமல் ரோட்டில் நிற்கும்போது பச்சைத் தண்ணீர் கூட தருவது இல்லை. சாதியால் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்துகொள்ள உலக அறிவு தேவையில்லை. தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவத்தை சற்றுத் திரும்பிப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். தொடர்ந்து சாதிவெறியுடந்தான் இருப்பீர்கள் என்றால் உங்களுக்கு மிஞ்சப்போவது தலைக்கு ஒரு வழக்கும், நிம்மதியற்ற வாழ்க்கையும்தான்!

Post a Comment

Powered by Blogger.