Halloween party ideas 2015
.

முழக்கங்களும் முகங்களும்!!

தோழர் பகத்சிங்கிற்கு வீர வணக்கம்!

“நாங்கள் பயங்கரவாதிகளோ,மனநோயாளிகளோ அல்ல. நாங்கள் புரட்சியாளர்கள். புரட்சி என்ற மகத்தான கடமைக்காக நாங்கள் செய்யும் தியாகம் பெரிதல்ல நாங்கள் இறந்து விடுவோம். எங்கள் கருத்தும்,ஆவேசமும் உங்களைத் தட்டி எழுப்பும்!”

“புரட்சி நீடூழி வாழ்க!”

என வீரமுழக்கமிட்ட பஞ்சாப் தேசிய இன புரட்சியாளன் பகத்சிங்  நம்மை விட்டுப் பிரிந்து 84 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவன் தூக்குமேடை ஏறியபோது அவனுக்கு வயது 23. சமுதாய மாற்றத்தை, தேசிய விடுதலையை, புரட்சியை நேசிக்கும் இளைஞர்களின் நெஞ்சங்களில் தோழர் பகத்சிங்கின் புகழ் சுடராக ஒளிவீசும்!

தோழர்களே !

முழக்கம் என்பது குறிப்பிட்ட சமுக நிலையை மாற்றி அமைக்க தான் முன் வைத்துள்ள நோக்கத்தை மக்களுக்கு எளிதில் புரியும்படி சுருக்கமாகவும், தெளிவாகவும் உருட்டி திரட்டி ஒரு சூத்திரமாக முன் வைப்பதாகும்.இதனை அமைப்புகளோ, தலைவர்களோ, ஆன்மிகவாதிகளோ தங்களது நோக்கத்தை நிறைவேற்ற முன் வைக்கின்றனர். அக்காலச் சூழலுக்கு பொருத்தமானதாக மக்களை அணி திரட்டுவதாக அமையும் முழக்கங்கள் மாபெரும் வெற்றியளிக்கின்றன.

1789ல் பிரெஞ்சு முதலாளி வர்க்கத்தால் முன்வைக்கப்பட்ட “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கமும், 1917ல் ரசியப் பாட்டாளி வர்க்கத்தால் முன் வைக்கப்பட்ட “ஜார் எதேச்சதிகாரம் ஒழிக! அனைத்து அதிகாரமும் சோவியத்துகளுக்கே!”என்ற  முழக்கமும், 1945ல் சீனப் பாட்டாளி வர்க்கத்தால் முன் வைக்கப்பட்ட “ஜப்பானிய ஏகாதிபத்தியம் ஒழிக! மக்கள் குடியரசு!” என்ற முழக்கமும், 2008ல் நேபாள பாட்டாளி வர்க்கத்தால் முன் வைக்கப்பட்ட
“மன்னராட்சி ஒழிக! குடியாட்சி மலர்க!” என்ற முழக்கமும் மாபெரும் புரட்சிக்கு வித்திட்டன.சமுதாயத்தில் மண்டிக் கிடந்த இருளை அகற்றி மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க அடித்தளமிட்டன.

  இந்திய-தமிழக அளவிலும் எண்ணற்ற முழக்கங்கள் வைக்கப்படுகின்றன. அவை பெருமளவு சமுதாயத்தை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டவையாக இருப்பதில்லை. நிலவும் சுரண்டலமைப்பை பாதுகாப்பது அல்லது தனது
இருத்தலை பாதுகாப்பது என்பதே முழக்கங்களின் நோக்கமாக அமைகிறது.

“கதவைத் திறந்து வையுங்கள் காற்று வரட்டும்!” என்ற சாமியார் நித்தியானந்தனின் முழக்கம் அவரது பாலியல் சீரழிவால் “கதவைத் திறந்து வையுங்கள் ரஞ்சிதா வரட்டும்!” என இழிவான கேலி முழக்கமாக மாறிப் போனது.

“கருவாடு மீனாகாது! கறந்தபால் மடி புகாது! உதிர்ந்த ரோமம் தலை புகாது!” என்ற முன்னாள் சட்டமன்ற அவை நாயகர் காளிமுத்துவின் வீரமுழக்கம் அவர் செயலலிதா காலில் விழுந்ததும் உயிர் இழந்து போனது.

“உன்னால் முடியும் தம்பி!” என்ற எம்.எஸ்.உதயமூர்த்தியின் தன்னம்பிக்கை  முழக்கம் திரைப்படமாக  வெளிவந்த பிறகு முடங்கிப் போனது.

“கனவு காணுங்கள்!” இது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் முழக்கம். ரொட்டி இல்லா விட்டால் என்ன? கேக் சாப்பிடுங்கள் என்ற கொடுங்கோல் மன்னனின் குரல் இது. பட்டினி கிடந்த தஞ்சை விவசாயிகளை எலிக்கறி தின்னச் சொன்ன காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் தங்கவேலுவின் குரல் இது. வறுமைக் கோடுகளை ஏழைகளின் வயிற்றிலே பார்க்காமல் அலுவலக தாள்களில் மட்டுமே பார்க்கும் ஊதாரிக்கூட்டத்தின் கேலி முழக்கம் இது. அப்துல்கலாமின் அக்கினிச் சிறகுகளோடு பொசுங்கிப் போனது இந்த முழக்கம்!

    “கெட்டதைப் பார்க்காதே! கெட்டதைப் பேசாதே! கெட்டதைக் கேட்காதே!” இது காந்தியின் முழக்கம். ஆங்கில ஏகாதிபத்தியம் செய்த கெட்டது எதையும் இவர் பாக்கவோ, பேசவோ, கேட்கவோ இல்லை. மாறாக ஆங்கிலேயர் செய்த கொடுமைகளை எதிர்த்தவர்களை தனது அகிம்சை என்ற ஆயுதத்தால் அழித்தொழித்தவர் காந்தி. தோழர் பகத்சிங்கை தூக்கிலேபோட ஆங்கிலேயருக்கு நாள் குறித்துக் கொடுத்தவர் காந்தி. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய மலபார் இஸ்லாமிய விவசாயிகளுடன் இணைந்து கொண்டதற்காக  இந்திய [இந்து] ராணுவ வீரர்களை ஏசியவர் காந்தி. தங்கள் மீது பாலியல் ஒடுக்குமுறை, வன்கொடுமைசெய்து வந்த காவலர்களையும், சௌரி சௌரா காவல் நிலையத்தையும் தீக்கிரையாக்கிய மக்களைக் காட்டுமிராண்டிகள் என்றவர் காந்தி.
ஜாலியன்வாலாபாக்கில் 300 விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற ஜெனரல் டயரை  கடமை வீரனென்று பாராட்டியவர் காந்தி. காந்தியின் சாவுக்குப் பின் அவரது முழக்கமும் செத்துப் போனது. மூன்று குரங்கு பொம்மைகள் மட்டும் நினைவுச் சின்னங்களாக உள்ளன.

“கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!” என முழங்கினார் அம்பேத்கர்.
அம்பேத்கர் சாதிகளற்ற இந்தியாவை விரும்பினாரே ஒழிய சுரண்டலற்ற இந்தியாவை அல்ல. ஏக இந்தியா உருவாக தேசிய இனங்கள் தடை என்ற கருத்துடனும்மார்க்சிய மெய்மம் தவறானது என்ற கண்ணோட்டத்துடனும் இருந்தார். இயங்கியலுக்கு மாறான இவரது கண்ணோட்டத்தால் இவரது முழக்கம் “ஓட்டுக்காக கூட்டுப்போடு!” எனறு  மாறிப் போனது.

“வறுமையே வெளியேறு!” [கரிபீ கட்டாவ்] என முழக்கமிட்டார் இந்திரா காந்தி. வறுமை என்ன விருந்தாளியா போ என்றால் போவதற்கு? ஏகாதிபத்தியங்கள், இந்திய தரகு முதலாளிகள், பார்ப்பனிய நிலக்கிழாரிய சக்திகளால் உழைக்கும்  மக்கள் மீது திணிக்கப்பட்ட கொடிய நோய் இது! அவர்களோடு கூடிக் குடித்தனம் செய்து கொண்டே மக்களை ஏய்க்க முன் வைக்கப்பட்டதே இந்த முழக்கம்! “நாட்டுக்கு ஆபத்து!” இதுவும் இந்திரா காந்தியால் முன்  வைக்கப்பட்ட முழக்கமே! 1970களில் உலக நாடுகளில் உருவான பொருளாதார மந்தநிலை இந்தியாவிலும் பிரதிபலித்தது. மக்களை ஒட்டச் சுரண்டியும் இந்திய தரகு முதலாளிகள் நெருக்கடியிலிருந்து மீளமுடியாத நிலை!
தரகு முதலாளிகளுக்குள் குத்து வெட்டு. அவர்களுக்குள் ஒருபிரிவு மற்றொரு பிரிவை ஒடுக்கியது. ஒடுக்கும் பிரிவின் பகராளியாக இருந்து 1975ல் இந்திராகாந்தி அவசரநிலையை கொண்டு வந்தார் தரகு முதலாளிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடியை மறைத்து “நாட்டுக்கு ஆபத்து” என நாடகமாடினார். அதுவரை பெயரளவில் இருந்த குடிநாயக உரிமைகள் குழிதோண்டிப் புதைக்கப் பட்டன. தொழிற்சங்க உரிமைகள்  மறுக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் வேட்டையாடப் பட்டனர். சிறை அல்லது தலைமறைவு இதுதான் குடிநாயக ஆற்றல்களின் கதி!      

                                        திமுகவின் முன்னணியாளர்கள் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டனர்.திமுக பாராளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையில் அடித்துக் கொல்லப்பட்டார். ஆற்காடு வீராச்சாமிக்கு காது செவிடானது. அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி அரியணை ஏறியது ஜனதா கட்சி. உள் முரண்பாடுகளால் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாமல் கவிழ்ந்தது. இதனை அடுத்து “நிலையான ஆட்சி” முழக்கத்துடன் தேர்தல் களம் இறங்கியது காங்கிரசு. “நேருவின் மகளே வா! நிலையான ஆட்சி தா!” என முழங்கி காங்கிரசுடன் கூட்டமைத்துக் கொண்டார் கருணாநிதி. ஏன் இந்த மாற்றம்?        ஜனதா கட்சி என்பது ஒரே கட்சியல்ல. பிச்சைக்காரனின் ஒட்டுத்துணி போல பல  கட்சிகளின் கூட்டுக்கலவை. பல தலைவர்கள், தலைமைக்கான போட்டிகள், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் என்ற தொடர் நிகழ்வுகளால் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. இந்நிகழ்வுகள் தமிழ்த் தரகுமுதலாளிகளையும் தடுமாற  வைத்தது. உற்பத்தி, விநியோகம், லாப விகிதங்களில் பெரும் பின்னடைவை சந்தித்தனர். எனவே நிலையான ஆட்சி அவர்களுக்கும் தேவையாக இருந்தது. இந்த சூழலில் அவர்களின் பகராளியான கருணாநிதி கொலைகாரக் காங்கிரசுடன் கூட்டமைத்துக் கொண்டார். “தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என ஊழலுக்கே வியாக்கியானம் தந்த வித்தகர் இதே கருணாநிதி! அவர் எங்கிருந்து கற்றார் இந்த கலையை? “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமிருக்கும்” என அண்டை வீட்டை மோப்பம் பிடித்த அறிஞர் அண்ணாதுரையிடமிருந்து. “கடமை. கண்ணியம், கட்டுப்பாடு” என்பது அண்ணாத்துரையின் ஆழ்ந்த முழக்கம். கடமையைச் செய் முதலாளிகளுக்கு. கண்ணியத்தைக் காப்பாற்று ஊழல் செய்தாலும். கட்டுப்பாடோடு இரு பித்தலாட்டம் வெளியே தெரியாமல். என்பதே அவரது அருள் வாக்கு. வீராணம் ஊழல் தொடங்கி 2 ஜி அலைக்கற்றை ஊழல் வரை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.            

   “அடங்க மறுப்போம்! அத்து மீறுவோம்!” இது திருமாவளவனின் கிளர்ச்சி முழக்கம். “பாராளுமன்றம் பன்றித் தொழுவம் அங்கு பழம் சாப்பிட்டாலும் மலமே வரும்” இது திருமாவளவனின் கொள்கை முழக்கம். சாதி வெறியன் மூப்பனார் ஆட்சி  அமைப்பதற்காக செயல்பட்டதும், ஓட்டுப் பொறுக்க பாராளுமன்றத்துக்கு ஓடிப் போனதும் மேற்கண்ட முழக்கங்களை வெற்று முழக்கமாக்கி விட்டது.      கருணாநிதியின் பொட்டலச் சாராயத்தை உடனிருந்து விரிவுபடுத்திய வைகோ சாராயத்துக்கு எதிராக “மது அரக்கனை ஒழிப்போம்” என கால்நடைப் பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார்.     ராமதாசின் “புலிகள் ஆதரவு, ஈழ ஆதரவு”  முகமூடி அவரது வன்னிய சாதி வெறியால் கிழிந்து தொங்குகிறது                பிஜேபியின் “தூய்மையான இந்தியா” வின் பின்னால் புனிதமான கங்கை, புனிதமான பசுமாடு, புனிதமான சமஸ்கிருதம், புனிதமான கார்பரேட் நிறுவனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. அயோத்தியில் ராமர் கோவில், அஜ்மல் கசாப்புக்கு இந்திய மனசாட்சிப்படி தூக்கு, மாட்டிறைச்சிக்கு தடை, ஜல்லிக்கட்டுக்கு தடை, தமிழக மீனவர்கள் மீதான சிங்கள ராணுவ தாக்குதலுக்கு இசைவு, ஈழத்தமிழின அழித்தொழிப்புக்கு துணை, விவசாய நிலப்பறிப்புச்சதி, கெயில், மீத்தேன், அணுமின் நிலையங்கள், அணுத்துகள் ஆய்வுக்கூடம் மற்றும்    சொந்தக் குண்டு வைப்பு நிகழ்வுகள் என பி.ஜே.பி யின் தீவிரவாத எதிர்ப்பு முகமூடி கிழிந்து தொங்குகிறது.

“கம்யூனிசம், பாட்டாளி வர்க்க ஒற்றுமை” என்ற சிபிஐ. சிபிஎம் முழக்கம் தரகு முதலாளிய கட்சிகளுடனான  சீட்டுப் பேரங்களாலும், தமிழகத்தின் காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழம், கச்சத்தீவு. கூடங்குளம் அணு உலை பிரச்சனைகளாலும் பல்லிளித்து விடுகிறது.                      இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கே என்று தேர்தல் கள்த்தில் குதித்த தே.மு.தி.க தங்களால் இயன்ற சட்ட மன்ற நாற்காலிகளை கைப்பற்றிக்கொண்டது.                               “தமிழ்நாடு தமிழருக்கே” என இந்திய தேசியத்திற்கு  எதிராக முழங்கினார் தந்தை பெரியார். ஆனால் தனித் தமிழ்நாடு குறித்துப் பேசினால் கட்சிக்கு தடைவரும் என்றஞ்சிய அண்ணாத்துரை திமுக வின் கொள்கையை “மாநில சுயாட்சி” என்று மாற்றினார். பிராந்தியக் கட்சிக்கு தடை வரும் என்றஞ்சிய எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை அகில இந்திய அ.தி.மு.க.வாக மாற்றினார். எம்.ஜி.ஆரின் வழித் தோன்றலான செயலலிதாவின் நான்காண்டு சாதனையின் பின்னணியில் அரசு பள்ளிகளை ஆங்கில மயமாக்கல், டாஸ்மாக் விரிவாக்கம்,  ஈழத்தமிழின அழிவுக்கு துணை. நதிநீர் சிக்கல்களில் வஞ்சகம், ஜல்லிக்கட்டு, கெயில், மீத்தேன், கூடங்குளம் பிரச்சனையில் இரண்டகம், என தொடருகிறது அவரது சதிவேலைகள்!

      தமிழின உணர்வாளர்கள் மீது ஒடுக்குமுறை. பார்ப்பனிய சாதிவெறி, இந்துமதப் பித்து இவையின் மொத்த உருவான இவரை ஆதரித்து “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என முழங்கினார் சீமான். “வாக்குச் சீட்டை ஆயுதமாக்குங்கள்” “தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும்” என தேர்தல் களமிறங்கி ஆட்சி பிடிக்கும் நோக்கோடு தொண்டர்களை உசுப்பேற்றி வருகிறார்.                                                           “ஓட்டுப் பாதையுமல்ல: வேட்டுப் பாதையுமல்ல: மக்கள் பேரெழுச்சிப் பாதை” என முழங்குகிறது பெ.மணியரசனின் தமிழ்த் தேச பொதுவுடமைக்  கட்சி. முதலாளி வர்க்கம் தனது ஆட்சி அதிகாரமாக பாராளுமன்றத்தை முன்வைக்கிறது அதற்கான வழிமுறையாக ஓட்டுப் பாதையை முன் வைக்கிறது. அதன் வழியே ஏகாதிபத்தியங்களுக்கான தரகு உற்பத்தி முறையை பாதுகாக்க நிற்கிறது. பாட்டாளி வர்க்கம் உழவர் தொழிலாளர் அதிகாரத்துக்காக சோவியத் ஆட்சி அதிகாரத்தை முன் வைக்கிறது. அதை நிறுவும் வழிமுறையாக [அரசியல் ஆயுதப் போராட்டங்களை] புரட்சிப் பாதையை முன் வைக்கிறது. அதன் வழியே தேசிய, தற்சார்பு உற்பத்தி முறையை மீட்டமைத்து சோசலிசத்தை, கம்யூனிசத்தை நிறுவுவதை இலக்காக கொண்டுள்ளது. எனவே முதலாளி வர்க்கத்தின் பாராளுமன்ற ஓட்டுப் பொறுக்கும் பாதை, பாட்டாளிவர்க்கத்தின் சோவியத்துக்கான புரட்சிப் பாதை என இருபாதைகள் மட்டுமே உள்ளன. இதில் புரட்சிப்பாதையை ஏற்காத நிலையில் இக்கட்சி பாராளுமன்றக் கட்சியாக சீரழியும் திசை வழியில் உள்ளது. தனது கையாளாகத் தனத்தை மூடிமறைக்கவே ஓட்டுப்பாதை வேட்டுப் பாதை  என குதர்க்கம் பேசுகிறது.

“ஓட்டுப் போடாதே: புரட்சி செய்!” என்கிறது ம.க.இ.க. பாராளுமன்ற தேர்தல் ஆனாலும், சட்டமன்றத் தேர்தலானாலும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஓட்டுக் கட்சிகளை விட தீவிரமாக  களமிறங்குகிறது ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்ற முழக்கத்தை எடுத்துச் செல்கிறது. ஓட்டுப் போடும் மனநிலையில் உள்ள மக்களின் அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பதோ, பாராளுமன்ற  சட்டமன்றத்திற்கு மாறாக சோவியத் ஆட்சிமுறை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதோ இல்லை. சில சமயம் கிராமப்புற சர்வாதிகார மன்றங்களை அமைப்போம் என்று கூறுகிறது. இப்போது மக்கள் அதிகாரம் நிறுவுவதாக பம்மாத்து செய்கிறது. மக்கள் அதிகாரத்தை எவ்வாறு நிறுவுவது, எவ்வாறு வளர்த்தெடுப்பது, அதனை தமிழக அளவில் செய்து தமிழக மக்கள் அதிகாரத்தை நிறுவுவதா,  இந்திய அளவில் செய்து இந்திய மக்கள் அதிகாரத்தை நிறுவுவதா  என விழிபிதுங்கி நிற்கிறது. ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற தனது லட்சிய மாநாட்டிற்கு சாராய ஆலைகளின் புரவலர், பொட்டலசாராய விற்பன்னரான கருணாநிதியை கும்பிடு போட்டு அழைக்கிறது.

===========

இந்நிலையில் இந்திய பாராளுமன்ற, சட்ட மன்ற மாயையில் வீழ்ந்து கிடக்கும் மக்களிடம் பாராளுமன்ற ஆட்சி முறையை அம்பலப்படுத்தி உழவர் தொழிலாளர்களின் சோவியத் ஆட்சிமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தமிழ் தேசிய பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும் அதன் அடிப்படையில் புரட்சிகர இளைஞர் முன்னணி  . மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வைத்து செயல்பட்ட-செயல் படும் முழக்கங்களில் சில:-

   தேர்தல் மற்றும் அரசு குறித்து..  

-* பாசிச இ.காங்கிரசு மற்றும் சாதி மதவெறி வேட்பாளர்களை    துரத்தியடிப்போம்!        

 -*  போலி பாசிச எதிர்ப்பு வேடதாரிகளை புறக்கணிப்போம்!          

-*  பாசிச எதிர்ப்பு தேசிய சனநாயக அரசமைக்கப் போராடுவோம்!

==============

யாருக்கு ஓட்டு?

*மசூதியை இடித்த மதவெறிக் கும்பலுக்கா? 

 * கொள்ளைக்காரி செயலலிதாவுக்கா?                       

*முந்தானையில் முடங்கிப் போன வைகோவுக்கா?          

*சீட்டுக்கு விலைபோன இராமதாசுக்கா?               

*கணவனின் திருட்டை மறைக்கப் புறப்பட்ட சோனியாவுக்கா?    

*பீரங்கித் திருடனின் எடுபிடி மூப்பனாருக்கா?   

*இந்திவெறியனுக்கு மண்டபம்கட்டிய கருணாநிதிக்கா?    

*புரட்சியைக் கை விட்ட போலி கம்யூனிஸ்டுகளுக்கா?    

*தேர்தலைப் புறக்கணிப்போம்!

===============

தமிழீழ விடுதலையையும் தமிழ்நாட்டு விடுதலையையும் உறுதியாகவும், வெளிப்படையாகவும்ஆதரிக்காத வேட்பாளர்களை இனம் கண்டு புறக்கணிப்போம்!

===============

சிங்கள பாசிஸ்டுகளுடன் சேர்ந்து ஈழத்தில் தமிழினத்தைக் கொன்றொழிக்கும் சோனியா- கருணாநிதி- செயலலிதா கும்பலுக்கு தேர்தல் ஒரு கேடா?

*தமிழினத்தின் எதிரிகளையும், துரோகிகளையும் புறக்கணிப்போம்! *சந்தர்ப்பவாதிகளை இனம் காண்போம்!  
*தமிழக இறையாண்மை உரிமைக்குப்…போராடுவோம்!
===============

*பாராளுமன்ற சனநாயகம் போலி சனநாயகம்!       

  *சோவியத் சனநாயகமே மக்கள் சனநாயகம்!           

=============

*அதிகார வர்க்க ஆட்சிமுறை ஒழியட்டும்!                      

*மக்கள் சோவியத்துகள் மலரட்டும்!

===============
*டெல்லியில் இருப்பது தரகுமுதலாளிய பார்ப்பனிய வல்லரசு!   

*சென்னையில் இருப்பது டெல்லியின் அடிமை எடுபிடி அரசு!    

*தமிழ்நாட்டுக்கு வேண்டும் தமிழ்த் தேசிய மக்கள் சனநாயகக் குடியரசு!                              ==============
*இந்திய தரகு முதலாளிய பார்ப்பனிய வல்லரசை வீழ்த்துவோம்!
*தமிழ்நாடு விடுதலைப் புரட்சியை முன்னெடுப்போம்!

==============…
*ஏகாதிபத்தியம் எதிர்ப்போம்!
*பார்ப்பனியம் எதிர்ப்போம்!
*புரட்சித் தமிழ்த் தேசிய அரசமைப்போம்!          

==============                                              

சாதி ஆதிக்கத்திற்கு எதிராக…          

*உயர்சாதித் திமிரை ஒழித்துக் கட்டுவோம்!                

*உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம்!         

===============

சுதந்திரப் பொன்விழாவை அம்பலப்படுத்தி..,

*தமிழ் தேசத்திற்கு ஆட்சி உரிமை இல்லை!
*தாழ்த்தப்பட்டோருக்கு குடியுரிமை இல்லை!
*இந்தியச் சிறைக்கு சுதந்திரப் பொன்விழா!..
===============
பெருஞ்சித்திரனார் விடுதலை இயக்கம்!
தடா நாயகி செயலலிதாவே!.
*தமிழறிஞரை விடுதலை செய்!
===============
*கொடுஞ்சிறையில்தமிழறிஞர்                                        

 *கொதித்தெழுவோம் தமிழர்களே!
*உடைத்தெறிவோம்..அடக்குமுறை!
===============
தஞ்சை தமிழ் மாநாட்டை அம்பலப்படுத்தி…
ஆங்கிலமும் இந்தியும்அரியணையில்:
தமிழறிஞர்களோ தடாச் சிறையில்:
கொள்ளைக்கும் விளம்பரத்திற்க்கும்
தமிழின் பெயரால் மாநாடு தஞ்சையில்!
===============
செம்மொழி மாநாட்டைக் கண்டித்து…              

ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கத் துணைபோன எட்டப்பன் கருணாநிதியை கட்டபொம்மனாகக் காட்ட செம்மொழி மாநாடா?

============

ஈழம் குறித்து…

இந்திய அரசே!                                          

இலங்கையில் இருக்கும் இந்திய ராணுவத்தை திரும்பபெறு       

தமிழக மக்களே!                                            

இந்திய அரசின் விரிவாதிக்க நோக்கத்தை முறியடிப்போம்!

===============

*அகதிகளை வெளியேற்றாதே!                              

*போராளிகளை இழிவுபடுத்தாதே!

===============

இந்திய அரசே!

*தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்து!

*இந்திய-சிங்கள கூலிப்படைகளை உடனே ஈழத்திலிருந்து வெளியேற்று!         

*தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!             

*விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!                          

*இந்திய மேலாதிக்கத்திற்காக தமிழர்களின்உரிமைகளையும் உயிர்களையும் பலியிடும் கொள்கையைக் கைவிடு!

தமிழக அரசே!

*ஈழவிடுதலை ஆதரவு எழுச்சியை ஒடுக்காதே!              

*தமிழினத்தை அழிக்கும் இந்திய அரசுக்குத் துணைபோகாதே! 

*சிங்களக் கடற்படை யிடமிருந்து காத்துக் கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் கொடு!                                    

*இந்திய – இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரி!               

*இந்திய இறையாண்மை நுகத்தடியைத் தூக்கி எறி!

தமிழக மக்களே!

*ஈழவிடுதலைக்கு துணை நிற்போம்!                                                         

*தமிழர்களின் உயிர்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் உரிமைக்குப் போராடுவோம்!                                                                                     

*இந்திய இறையாண்மை அதிகாரத்தை எதிர்ப்போம்!                      

*தமிழகத்தின் இறையாண்மை உரிமைக்குகுரல் கொடுப்போம்!        

*டெல்லியின் கால்நக்கிப் பிழைக்கும் கருணா – செயா கும்பலை இனம் கண்டு புறக்கணிப்போம்!                                                                               

*ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு எனக்கூறி ஈழவிடுதலையை எதிர்க்கும் இந்திய சிங்களக் கைக்கூலிகளை இனம் கண்டு புறக்கணிப்போம்!

தோழர்களே!

முழக்கங்கள் நமது கையில்!

முகங்கள் அரசியல் களத்தில்!

“இனம்” காணுவோம் வர்க்கங்களை!

(நன்றி :செந்தூவல்)

Post a Comment

Powered by Blogger.