Halloween party ideas 2015
.


முகிலன் ,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு சுற்றுசூழல்  பாதுகாப்பு இயக்கம் ,
சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்,
அலைபேசி : 94436-75048, 7502225658
மின் அஞ்சல் : mugilan1967@gmail.com 
14- 03-2016


அரியலூர் மாவட்டம்   ராம்கோ நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம் தற்போது  ரத்து ஏன்?

இன்று அரசு நிர்வாகத்தை மண்டியிட வைத்த நாள்!
மக்கள், மக்கள் மட்டுமே
வரலாற்றை படைப்பவர்கள் என
மீண்டும் நிரூபணம் ஆகிய நாள் !!
=====================================
பொதுமக்கள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களின்
சுரங்கபகுதி யில் வாழும் மக்களின் மிகுந்த
எதிர்ப்பு- தொடர் போராட்டத்தால்

அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர்
ராம்கோ நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க
கருத்து கேட்பு கூட்டம் தற்போது் ரத்து செய்யபட்டுள்ளது...

எங்களாலும்- அப்பகுதி மக்களாலும்,
தோழர்.ரமேசு கருப்பய்யா போன்ற
சுற்றுசூழல் செயல்பாட்டாளர்களாலும்,
குறிப்பாக தோழர்.அருள்மொழிவர்மன்
(Arulmozhivarman Rajamanikam)மற்றும்
அவரது நண்பர்களின் தொடர்ந்த முயற்சியாலும்...

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்.....
மாசுகட்டுப்பாடு வாரியம் ...
தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு
தொடர்ந்து புகார், நேரடி மனு
அனுப்பியதன் விளைவு

இன்று(14-03-2016)  திங்கள் மாலை
தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம்
நிர்வாக காரணத்தால்
கருத்துக் கேட்புகூட்டம்
ஒத்திவைத்ததாக அறிவித்து உள்ளது....

விழிப்போடு இருப்போம்...
தாய்மண்ணை பாதுகாப்போம்....

இது தொடர்பாக  நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள்-செய்திகள் இணைத்து உள்ளோம்.

இணைப்புகள்:

2.அரியலூரில் -15.03.2016 அன்று
கொலைகார ராம்கோ சிமெண்ட் ஆலையின் 
தேர்தல் விதிமுறையை மீறி ஒரு கருத்துக்கேட்புக் கூட்டம்

3. [3-அ, 3-ஆ] அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலையை எதிர்த்ததால் என்னை தாக்க முயற்சி வீடியோ

4. ஜுனியர் விகடன் செய்தி...(கருத்துக் கேட்புக் கூட்டத்தில் என்னை தாக்க முயற்சி)

5. ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் மக்கள் எதிர்ப்பு இன்றி நடத்தினால் 
மாவட்ட மாசுகட்டுப்பாட்டு பொறியாளர்கள் பெறும் பலன்கள்
(அறிவிக்கப்படாத லஞ்சம்)...

6-அ, 6-ஆ) கருத்துக்கேட்புக் கூட்டம் பதிவுகள்(மினிட்ஸ்)
அரியலூர் ஆலத்தியூர் ராம்கோ மின் ஆலை விரிவாக்க திட்டம் (14-10-2015) & 
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை விரிவாக்க திட்டம் (03-112015)

7.இதுவரை அரியலூரில் எதிர்ப்பே இல்லாமல்  இயங்கி வந்த சிமெண்ட் ஆலைகள்  முதன்முறையாக (14-10-2015) கடும்எதிர்ப்பை எதிர்கொண்டு அம்பலப்பட்டு போன கருத்துக்கேட்புக் கூட்டம் பற்றி- [அரியலூர் ஆலத்தியூர் ராம்கோ மின் ஆலை விரிவாக்க திட்டம் (14-10-2015) ]

8.சிமெண்ட் ஆலையின் பாதிப்பை பற்றி "ரௌத்திரம் பழகு இளமதி" அவர்களின் பதிவு & வீடியோ ..
மற்றும்

கருத்துக்கேட்புக் கூட்டம் ரத்து பற்றி மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒட்டியுள்ள சுவரொட்டி , பல பத்திரிக்கை செய்திகள்... 


(இந்த செய்தியை தங்கள் செய்தித்தாள் / வார இதழ் / காட்சி ஊடகங்களில் வெளியிட்டு உதவ அனைவரும் கேட்டுக் கொள்கிறோம்]

===================================================================================================================
2. அரியலூரில் -15.03.2016 அன்று
கொலைகார ராம்கோ சிமெண்ட் ஆலையின்
தேர்தல் விதிமுறையை மீறி ஒரு கருத்துக்கேட்புக் கூட்டம்
======================================================
M/s. The Ramco Cements Ltd.,
Manakudayan Village, Sendurai Taluk, Ariyalur District.
Proposed Expansion of South of South Limestone mine for production enhancement from 0.105 MTPA to 1.0 MTPA ROM/0.65 MTPA Clean limestone over an extent of 44.805 Ha at S.F.Nos parts of 83,84,91-94,110-112&115-118 of Manakudayan Village, Sendurai Taluk, Ariyalur District.
15.03.2016 @10.30 AM
S.F.No. 80 of Manakudayan Village,
Opposite to South of South Limestone mine of
M/s. The Ramco Cements Ltd.,
Sendurai to Kottaikadu Road,
Thamaraipoondi Village,
Manakudayan Panchayat,
Sendurai Taluk,
Ariyalur District.
The District Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, 99-A, Ethiraj Nagar, Railway Station Road, Rajaji Nagar (Po), Ariyalur - 621 713.
Ph: 04329 - 221555
Click here to view Executive Summary
=======================================================================================================================
3. அரியலூரில் சிமெண்ட் ஆலையை எதிர்த்ததால் என்னை தாக்க முயற்சி

3. அ) .தோழர் முகிலன் பேச அனுமதிமறுக்கப்படும்போது,எதிர்கேள்விகேட்டதற்கு எதிரில்இருக்கும் எம்எல்ஏ வுக்கு சைகை
செய்யும் பெண் அதிகாரி.....

https://www.youtube.com/watch?v=HuTXA4NHqH0&feature=share

(அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட் தொழிற்சாலை(TANCEM) சார்பில், புதிய தொழிற்சாலை தொடங்குவதற்காக நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் தோழர்.முகிலன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மேடையிலிருந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நளினா, கூட்டத்தைப் பார்த்து தலையசைத்து சைகை செய்யவும், ஆளுங்கட்சி எம்எல்ஏ தரப்பினர் எழுந்து கலாட்டா செய்து கூட்டத்தை கலைத்தனர்.)

===============================================
3. ஆ) .தோழர் முகிலனை மிரட்டி வெளியேற்றும் அரியலூர் எம்எல்ஏ .துரை மணிவேல்.

https://www.youtube.com/watch?v=s0HjFZRa8Sc&sns=fb&app=desktop

(VID 20151105 WA0007
Published on Nov 4, 2015
தோழர்.முகிலன் தொழிற்சாலை அமைவதால் ஏற்படுவதிலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பற்றி பேசியதால், எம்எல்ஏ தரப்பும், அதிகாரிகளும் முகிலனை மிரட்டி, காவல்துறையினரை வைத்து அப்புறப்படுத்தினர்…)
=======================================================================================
4. ஜுனியர் விகடன் செய்தி...
Posted Date : 06:00 (10/11/2015)
Last updated : 06:00 (10/11/2015)





"ஆலை வேண்டாம் என்றால், அடிக்கப் பாய்கிறார் எம்.எல்.ஏ!"
சிமென்ட் ஆலையால் சர்ச்சை
"சிமென்ட் ஆலைகள் ஆரம்பிக்க எங்களுடைய விளைநிலங்களைக் கொடுத்தோம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் இப்போது, வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்யப்போவதாகச் சொல்கிறார்கள். தற்போது செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால், ஆஸ்துமா உட்பட பல்வேறு நோய்களால் எங்கள் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்குத் தொழிற்சாலையே வேண்டாம் என்று சொல்கிறோம். அப்படிச் சொன்னால் அடிக்கப் பாய்கிறார்கள்" என்றார் சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா.
அரியலூரில் அரசு சிமென்ட் ஆலை 350 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படும் என்று 2011-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சிமென்ட் ஆலை விரிவாக்கம் தொடர்பாகக் கருத்துக்கேட்புக் கூட்டம் கடந்த 4-ம் தேதி அரியலூரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது. போலீஸார் மற்றும் டி.ஆர்.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான துரை.மணிவேல் உள்ளிட்டோர் முகிலனைத் தள்ள முயன்றனர். அதனால், கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முகிலனிடம் பேசினோம். "அரசு சிமென்ட் ஆலைகளில் ஆண்டுக்கு 5 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்காக, 10 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆலையை விரிவுபடுத்துவதன் மூலம், ஆண்டுக்கு 12 லட்சம் டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனால், கூடுதலாக 4 லட்சம் லிட்டருக்கும் அதிகமாகத் தண்ணீர் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில், 10-க்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும், ஏராளமான சுண்ணாம்பு சுரங்கங்களும் உள்ளன. இந்த நிலையில் ஆலையை இன்னும் விரிவுபடுத்தினால், தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள் அனைத்தும் இந்த மாவட்டத்தில் முற்றிலும் சீரழியும். ஒவ்வொரு சுரங்கத்திலும் 400 அடிகளுக்கு மேல் சுண்ணாம்பை வெட்டி எடுக்கிறார்கள். இதனால், விவசாயம் முற்றிலும் அழியும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஆலை விரிவாக்கம் செய்யக் கூடாது என்று கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசினேன். அப்போது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் அடிப்பதற்குப் வந்தனர்" என்றார்.
கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட செல்லப்பாண்டியன், "சிமென்ட் ஆலைகளால் சிறுநீரகக் கோளாறு, ஆஸ்துமா, புற்றுநோய், தோல் நோய்கள் என இந்த மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிமென்ட் ஆலைகளால் எங்கள் சந்ததியையே தொலைத்துவிட்டு நிற்கிறோம். மிச்சம் இருப்பவர்களையும் அழிக்க நினைக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது" என்றார்.
சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையாவிடம் பேசினோம். "சுற்றுச் சூழலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் அது, சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வேப்பமர இலைகள் மற்றும் ஆலையின் அருகில் வசிக்கும் மக்களின் ரத்தத்தில் காரியம், குரோமியம் போன்றவை கலந்துள்ளன. இதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. கருத்துக்கேட்புக் கூட்டத்தை முறையற்ற வகையில் நடத்துகிறார்கள். அரசியல் கட்சியின் கூட்டத்தைப்போல ஆட்களைத் திரட்டி வருகிறார்கள். சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தால், ஆட்களைவைத்து அடிக்கிறார்கள். போலீஸை வைத்துமிரட்டுகிறார்கள். சிமென்ட் ஆலை விரிவாக்கத்தால் ஏற்பாடுகள் பாதிப்புகள் குறித்தும், ஆலை நிர்வாகத்தின் தவறுகளையும், கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சுட்டிக்காட்டி முகிலன் பேசினார். அப்போது எம்.எல்.ஏ-வும் அவரது ஆதரவாளர்களும் முகிலனைத் தாக்க முயன்றனர். அதை டி.ஆர்.ஓ. உள்ளிட்ட அதிகாரிகளும், போலீஸாரும் கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். சிமென்ட் ஆலைகளால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, ஆலை விரிவாக்கத்தைக் கைவிட வேண்டும்" என்றார் காட்டமாக.
இதுதொடர்பாக கருத்துக் கேட்பதற்காக, மாசுக்கட்டுபாட்டுத் துறை அதிகாரி நலினாவை செல்போனில் தொடர்புகொண்டோம். அவர், தொடர்பைத் துண்டித்துவிட்டார். அரசு சிமென்ட் ஆலை தரப்பினரிடம் பேசியபோது, "உங்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் மேலே பேசிக்கொள்கிறோம்" என்றனர். எம்.எல்.ஏ-வான துரை.மணிவேலிடம் கேட்டதற்கு, "இது ஒரு அரசுத் திட்டம். அதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் யாரிடமும் விலைபோகவில்லை. முகிலன் பேசியதற்கு எதிராக மக்கள் பிரச்னை செய்தார்கள். அதனால், முகிலனை வெளியேற்றினோம். அவரை தாக்க முயற்சித்தேன் என்று சொல்வது தவறு" என்று முடித்தார்.
மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் ஆட்சியாளர்களே!
- எம்.திலீபன்
===================================================================================
5. ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் மக்கள் எதிர்ப்பு இன்றி நடத்தினால்
மாவட்ட மாசுகட்டுப்பாட்டு பொறியாளர்களுக்கு மட்டும்
ஆலை நிறுவனம் 50 லட்சம் ரூபாய் கையூட்டாக கொடுக்கிறது ....
========================================================
என்னை (முகிலன்) அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை
கருத்துக்கேட்புக் கூட்டத்தில் (03-11-2015)
சட்டமன்ற உறுப்பினர் -மாசுகட்டுப்பாட்டு பொறியாளர் -
காவல்துறை - ஆலை நிர்வாகம் ஆகியோர் திட்டமிட்டு
கூட்டுப் போட்டு தகராறு செய்து முழுமையாக பேசவிடாமல்
வெளியேற்றிய காட்சி ....
ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் எதிர்ப்பு இன்றி நடத்தினால்
மாவட்ட மாசுகட்டுப்பாட்டு பொறியாளர்களுக்கு மட்டும்
நிறுவனம் 50 லட்சம் ரூபாய் கொடுக்கிறது ....
அரியலூர் மாவட்ட சுற்றுசுழல் பொறியாளர் நளினாவுக்கு
எங்களால் ஏற்பட்ட இழப்பு (2014-2015இல் மட்டும் )
மூன்று கோடி ரூபாய் தான்....
அதன் விளைவு தலையால் சிக்னல் காட்டிய
அரியலூர் மாவட்ட சுற்றுசுழல் பொறியாளர் நளினா.
அடிக்கப் பாய்ந்த அரியலூர் ரவுடி எம் எல் ஏ
துரைமாணிக்கவேல்.....
மூன்று கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட
கருத்துக்கேட்புக் கூட்டங்கள் 6 ....
1.திருவாரூர் ஒ என் ஜி சி கருத்துக் கேட்புக் கூட்டம் ... (27-06-2014)
2. நாகபட்டினம் ஒ என் ஜி சி கருத்துக் கேட்புக் கூட்டம் ...(2014)
3. தஞ்சாவூர் ஒ என் ஜி சி கருத்துக் கேட்புக் கூட்டம் ...(2014)
4. அரியலூர் ஆலத்தியூர் ராம்கோ மின் ஆலை விரிவாக்க திட்டம் (2015)
5. அரியலூர்ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட் ஆலை விரிவாக்க திட்டம் (2015 )- ஒத்திவைப்பு
6.அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை விரிவாக்க திட்டம் (03-112015)

























































































.. 
======================================================================================================
6.  அ). [Minutes]
M/s. The Ramco Cements Ltd.,
Alathiyur Village, Sendurai Taluk, Ariyalur District.
Proposed addition of 6 MW Turbine to the existing 2x18 MW Captive Power Plant in Alathiyur Cement Plant, Alathiyur Village, Sendurai Taluk, Ariyalur District.


6.  ஆ). [Minutes]
M/s. Tamilnadu Cements Corporation Ltd.,
Kairulabad Village, Ariyalur Taluk, Ariyalur District.
Proposed expansion of M/s. Tamilnadu Cements Corporation Ltd., Kairulabad Village, Ariyalur Taluk, Ariyalur District by setting up a new production line with a capacity of 1.0 MTPA Clinker and 1.13 MTPA Cement plant.

==============================================================================

7.Mugilan Swamiyathal2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
இதுவரை அரியலூரில் எதிர்ப்பே இல்லாமல்
இயங்கி வந்த சிமெண்ட் ஆலைகள்
முதன்முறையாக இன்று (14-10-2015)
கடும்எதிர்ப்பை எதிர்கொண்டு அம்பலப்பட்டு உள்ளன. ..
கருத்துக்கேட்புக் கூட்டம்
===========================================
மின் ஆலையினால் ஏற்படும் பாதிப்பை பற்றி
நானும் (முகிலன்)
தோழர்.ரமேசு கருப்பையா
தோழர். அருள்
தோழர்.சின்னதுரை
தோழர். முருகன்
ஆலையின் கேடுகளால் பாதிப்புற்ற மக்கள்,
மக்கள் நல தொண்டர்கள் என சுமார் 30க்கும்
மேற்பட்டோர் அனைவரும்
ஆலையின் தீயவற்றை பட்டியலிட்டு
மறுக்க முடியாத ஆதாரங்களோடு பேசினோம்.
நிகழ்ச்சியில்
சிமெண்ட் ஆலையோடு
வணிக தொடர்புடையவர்கள,
ஒப்பந்தகாரர்கள்,
அரசியல்வாதிகள்,
விலைபோன ஊராட்சி தலைவர்கள்,
ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுக்கூலிகள்
அனைவரும் கண்மூடித்தனமாக ஆதரித்து பேசினர்.
=======================================================
8. மனசாட்சியோடு ஒரு நீண்ட பதிவை படிப்போம் !!
சிமெண்ட் ஆலையின் பாதிப்பை படித்தாவது பார்ப்போம்!!!
"ரௌத்திரம் பழகு இளமதி" அவர்களின் பதிவு இது ..

"தங்கம் போட்டா தங்கம் விளையும் இந்த ஊர்ல;
இன்னிக்கு தண்ணியில்லாம தவியா தவிக்கிறோம்"
==============================================
" இந்த ஊர்ல தங்கம் போட்டா தங்கம் விளையும்.
அப்படியாப்பட்ட ஊரு. அப்படியாப்பட்ட நிலத்தையெல்லாம் மண்ணாக்கிபுட்டானுவ.. என்னைக்கு இந்த கல்லுக்காரனுவ (சிமெண்ட் தொழிற்சாலைகள்) இந்த ஊர்ல அடியெடுத்து வச்சானுவளோ அன்னைக்கே எங்களுக்கு அழிம்பு வந்துடுச்சி.
கம்பெனியாலதான் எங்களுக்கு பிரச்சனையே.. அவன் வந்து நோண்டுனான். எங்களுக்கு தண்ணியில்லாம போச்சி… என் கல்யாணத்தப்பல்லாம் இந்த வயல்ல அம்மாந் நெல்லு விளையும், அம்மாங் கரும்பு விளையும்… ஒரு ஒரு கருது இம்மாந் நீட்டம் இருக்கும். இதோ இந்த இடத்துல… கரும்பு, கடலை, எள், கம்பு அத்தனையும் விளையும். தங்கம் போட்டா தங்கம் எடுக்கலான்றனே நாந்தான். அப்படியாப்பட்ட பூமிய மண்ணாக்கி புட்டாங்க. இப்போ புழைக்கறதுக்கு வழியில்ல… எங்க ஊர்ல ஒரு ஆளுக்கு வேலை கொடுத்தானுங்கன்னு சொல்லிப்புடச் சொல்லு பாப்போம்.. இங்கருந்து 500ரூ சார்ஜ் போட்டு கேரளாவுக்கு போயி வேலை செய்யிறோம்… "
- காசியம்மாள், ஆலத்தியூர்
……………………………………………….
- சிமெண்ட் தொழிற்சாலைகளிடம் விளைநிலங்களை விற்று, சுண்ணாம்பு சுரங்கங்களின் தொடர் செயல்பாடுகளால் நிலத்தடி நீருமற்று, கூடவே உடல் நலப்பிரச்சனைகளாலும் அவதிப்படும் அரியலூர் மாவட்ட, ஆலத்தியூர் பஞ்சாயத்து மக்களின் , முன்னாள் விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றி பேசுகிறது ரௌத்ரம் பழகு;
......................................................
• இப்பதிவை எழுதும்போது தொழிற்சாலைகளை மக்களின் எதிரியாக நிறுவுகிறோமோ என சந்தேகம் உடன் வந்து கொண்டேயிருந்தது. ஆனால் உண்மை அதுவல்ல... பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சாலைகள் நம் வாழ்வை மேம்படுத்தும், வேலை வாய்ப்பை வழங்கும், என்ற நம்பிக்கைக்கு மாறாக, மீளவே முடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், இழப்புகளையும் தொழிற்சாலைகள் ஏற்படுத்துகின்றன என்பதை மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அப்பிரச்சனையை வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். கண்முன்பே நிலம் பாழ்பட்டு போவதையும், நிலத்தடி நீர் குறைந்து போவதையும், அதைத் தொடர்ந்து வாழ்வாதாரம் பறிபோவதையும், பிழைப்புக்காக ஊர்ஊராகச் செல்ல வேண்டியிருப்பதையும் உணர்கின்றனர். செய்யும் வேலையை சரியாகச் செய், நேர்மையாகச் செய் என அதிகாரிகளை கேட்கத் தொடங்கியுள்ளனர். அதற்கான விலையையும் அவர்களே கொடுக்கின்றனர். சரியான இழப்பீடு கொடு என கோரிக்கை வைக்கின்றனர். மிகமிக போலியாக நடத்தப்படும் கருத்துக்கேட்பு கூட்டங்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் துயரம் கனன்று கனன்று மேலெழுகிறது. இவை அனைத்தையும் நாம்தான், பொதுசனம்தான் புரிந்து கொண்டு பாதிக்கப்படுபவர்களின் பக்கம் நிற்பதே நடுநிலைமை எனத் தோன்றுகிறது…
........................................................
இன்னும் சிறிது மிச்சமிருக்கும் ஊர் சின்னமலைக்குடிகாடு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தனியார் சிமெண்ட தொழிற்சாலையின் சுரங்கங்களுக்கு நடுவே எஞ்சியுள்ள ஊர். 20ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை வரும்போது, இவ்வூரிலிருப்பவர்களுக்கு இழப்பீடு கொடுத்து, 5 சென்ட் நிலமும் கொடுத்து வேறு இடத்திற்கு இடம்பெயர்த்தினர். சுமார் 200குடும்பங்கள் சின்னமலைக்குடிகாட்டை விட்டு அவ்விடத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் பத்து குடும்பங்கள் மட்டும் தகுந்த இழப்பீடு கேட்டும், வேலை கேட்டும் இன்றும் இவ்விடத்திலேயே குடியிருந்து வருகின்றன. தற்போது ஊரில்லை. ஒரு தெரு மட்டுமே இருக்கிறது. எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது. ஊரைச்சுற்றி வேலை அமைக்கப்பட்ட 200அடி ஆழ சுரங்கங்கள். ஆடு, மாடுகளைக்கூட மேய்க்க முடியாத. புறம்போக்கு நிலத்திலிருக்கும் முள்செடியைக் கூட வெட்டி விற்பதற்கு இம்மக்களுக்கு உரிமை கிடையாது. அனைத்தும் தொழிற்சாலையில் கட்டுப்பாட்டில் போய்விட்டதாக வருந்துகின்றனர் இம்மக்கள். இடம்பெயர்ந்த வீடுகள் அனைத்தும் முள்மரங்களினால் சூழப்பட்டுள்ளன. குளம் காய்ந்து கிடக்கிறது. நாங்கள் அங்கு சென்றபோது சரோஜா, அமரஜோதி, சின்னப்பிள்ளை, கந்தசாமி, தங்கம், பாக்கியலட்சுமி, பெரியசாமி, ராம்தாஸ் ஆகியோரைச் சந்தித்தோம்..
இவ்வளவு கஷ்டப்பட்டு எதுவுமே இல்லாம ஊர்ல ஏன் இருக்கீங்க..? இழப்பீடு வாங்கிட்டு போறதுல என்ன சிக்கல்ன்னு கேட்டதுதான்..?
படபடவென பொரிந்து தள்ளினார் அமரஜோதி. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தொழிற்சாலை நிர்வாகத்திடம் இழப்பீடு கேட்டு போராடி வருபவர்.
.........................................................
" நாங்க சக்கரை சாக்கு கட்டிக் கேக்கல, கோரிக்கையான இடத்ததான் கேக்குறோம். போட்ட லிஸ்ட் படிதான் தருவேன்னா ரெண்டு பிள்ளைங்கள்ல ஒரு பிள்ளை எங்க போய் தங்குவான்..? ரோட்டுலயா விடறது? வேலை கேட்டா வேலை இல்லை, வீடு கேட்டா வீடு இல்லை, கொடுத்தத வாங்கிட்டு போன்னா எப்படிங்க போறது..? படிக்க இடம் கேக்குறீங்க, குந்த வீடு கேக்குறீங்க… புழைக்க வேலை கேக்குறீங்க அப்படின்றாங்க கம்பெனிகாரங்க. எங்க காணியெல்லாம் வித்துட்டோமே.. அப்ப புழைக்க வைக்க என்னங்க வழி? ஊர்ல எல்லாருக்கும் செஞ்ச மாதிரி செய்ங்கன்னுதான் கேக்குறோம். என்ன ஆனாலும் சரி இந்த இடத்த விட்டு போறதாயில்ல. கோழி முட்டையிடுது, ஒண்ணு குஞ்சு பொரிக்கணும். இல்ல எடுத்துக்கொண்டு கொட்டணும். அதமாதிரிதான்.. நாங்க இந்த கம்பெனிக்கு ஒரு முடிவு கட்டாம போறதில்ல..
……………………………………………………………………………
• அரியலூர் மாவட்டம் இயற்கையாகவே சுண்ணாம்பு பாறைகள் நிறைந்த பகுதி. அதை மையமாக வைத்து 20ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சிமெண்ட் தொழிற்சாலைகள் வரத்தொடங்கின். அம்மாவட்டத்தின் மையப் பொருளாதாரம் சிமெண்ட் தொழிற்சாலைகள்தான். அதே நேரம் வீட்டுக்கு ஒரு ஆளுக்கு வேலை என வாய்மொழி உறுதி கொடுத்ததை நம்பி, விளைநிலங்களை ஏக்கருக்கு 50ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் விற்ற விவசாயிகள் இன்று பிழைப்பற்று நிற்கின்றனர். தொழிற்சாலை பொருளாதாரம் நம் ஊரை வளப்படுத்தும்; வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் என நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வு இன்று சீர்குலைந்து போயுள்ளது. வேலைக்காக அவர்கள் கேரளாவிற்கும், சென்னைக்கும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயரும் சூழலை உருவாக்கியுள்ளது.
• இதைப்பற்றிய படபடிப்பிற்காக பெண்ணாடம் அருகிலுள்ள ஆலத்தியூர் பஞ்சாயத்திற்கு சென்றிருந்தோம். வெள்ளாறு கடந்துதான் ஆலத்தியூருக்குச் செல்லவேண்டும். ஆலத்தியூர் பஞ்சாயத்திற்குட்பட்ட நான்கைந்து கிராமங்களைச் சுற்றிலும் ஏக்கர் கணக்கில் சுண்ணாம்புச் சுரங்கங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சுரங்கங்கள் அனைத்தும் முன்பு விளைநிலங்களாக இருந்தவை.
ஊரின் இடதுபுறம் சுரங்கம், வலப்புறம் சுரங்கம், என கிராமங்கள் தீவுகளைப் போல தனித்துக் கிடக்கின்றன. ஊரைச் சுற்றியிருக்கும் கால்வாய்கள் அம்மக்கள் வாரிகள் என்று சொல்கிறார்கள், ஆற்றை சென்றடையாதபடிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஊரைச் சுற்றியிருக்கும் சுரங்கங்களுக்கு வேலிகள் போடப்பட்டுள்ளதால் மக்களும், அவர்கள் வைத்திருக்கும் ஆடுமாடுகளும் புழங்குவதற்கு அற்ற இடமாக கிராமங்கள் மாறியிருக்கின்றன. கால்நடைகள் வைத்திருக்கும் முன்னாள் விவசாயிகள் ஆடுமாடு மேய்ப்பதற்கும் வழியற்று தவிக்கின்றனர். சுரங்கங்களின் ஆழத்தால் ஏரி, குளங்களிலும் நீர் சேர்வதில்லை.. அனைத்தும் கருவைக்காடுகளால் சூழப்பட்டு வற்றிப்போய் கிடக்கின்றன.
• தொழிற்சாலைகள் இன்று அவ்வூரில் என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை அம்மக்களுக்கு யாரும் ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டியதில்லை. 200அடிக்கும் மேல் தோண்டப்படும் சுரங்கங்களால் நிலத்தடி நீர் இல்லாமல் போனது, சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து கிளம்பும் தூசியால் உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவது, சுரங்கம் தோண்டுவதற்கு போடப்படும் சக்திவாய்ந்த வெடிவெடிப்புகளால் வீடுகள் கீறல் விடுவது, விளைநிலங்களை அப்போது அடிமாட்டு விலைக்கு வாங்கியது, வேலை வாய்ப்பு உறுதியளித்த தொழிற்சாலைகள் இப்போது வரை நிறைவேற்றாதது என அனைத்தும் அம்மக்கள் அனுபவித்த துயரங்களாக அவர்களின் குரலில் வெடித்துக் கிளம்புகிறது.
• சிமெண்ட் தொழிற்சாலைகளுக்காக தோண்டப்பட்ட சுரங்கங்கள், தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் சுரங்கங்கள், தொடர்ந்து செயல்படும் சுரங்கங்களால் அவ்வூர் மக்கள் பலருக்கு ஆஸ்த்துமா நோய், சிறுநீரகக்கோளாறு போன்ற உடல்நல பிரச்சனைகள் வேறு அம்மக்களை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.
அங்கு நடந்தது;
..............................
• கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றிற்குள் சென்று பேசலாம் என அவ்வூர் மக்கள் ஒரு பெரும் சுரங்கத்திற்கு அழைத்துப் போயினர். வேலியிடப்பட்டு, அடைக்கப்பட்ட வாரியைக் கடந்து பிரம்மாண்டமான அச்சுரங்கத்திற்கு போனோம். சில வருடங்களுக்கு முன்பு இச்சுரங்கத்தை மூடச்சொல்லி மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டதாகவும், ஆனால் இன்றும் அது மூடப்படாமல் உள்ளதாகவும் எங்களுடன் வந்த இளைஞர்கள் தெரிவித்தனர். அங்கு நின்று பேசிக்கொண்டிருக்கையில் தூரத்தில் தெரிந்த சிமெண்ட் தொழிற்சாலையின் காவலாளி எங்களை படம் பிடிக்க விடாமல் தடுத்தார். சிறிது ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின்பு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். ஊருக்குள், தங்கள் விற்ற விளைநிலங்களில் கூட நிற்க அனுமதியற்றுப் போனது இளைஞர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வாக்குவாதத்தை தவிர்த்து, அந்த இடத்தை விட்டு அகன்று வேறு இடம் செல்ல முயன்றபோது ஒரு தனியார் தொழிற்சாலை நிர்வாகிகள் மூன்று பொலீரோ வாகனங்களில் வந்து எங்களை இடைமறித்தனர்.
• "எப்படி எங்கள் மைன்சுக்குள் நீங்கள் நுழையலாம். எடுத்த விசுவல்ஸை டெலீட் பண்ணாம இந்த இடத்தை விட்டு போகக்கூடாது. என்ன அராஜகம் பண்றீங்களா.. எங்க அந்த கேமராமேன்.. கூப்பிடுங்க. என தொடர்ந்து மிரட்டும் தொனியில் பேசிக்கொண்டிருந்தனர் இருவர். பதிலுக்கு நாங்களும் பேசிக்கொண்டிருக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திரண்டனர். " அவங்களை எதுக்கு வழி மறீச்சீங்க? அவங்களை படம்பிடிக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு? நீயெல்லாம் எடுத்த எதையும் அழிக்கக்கூடாது. நீ எதுக்கு அழிக்கிற? என்று என்னை நோக்கி சீறிய ஒரு ஊர் பெருசு ஒருவர் அங்கு கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்த கம்பெனி ஆளை நோக்கி " அவங்களை கேமரா எடுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ என்ன பப்ளிக்ல எடுக்கற.. கேமராவ உள்ளப் போடு என அதே வேகத்தில் அவர்களைச் சாடினார். சிறிதுசிறிதாக இளைஞர்களும், மக்களும் திரண்டதில் எங்களை மிரட்டிய கம்பெனி நிர்வாகிகள் பின்வாங்கினர். காவல் துறையினரும் வந்தனர். என்னவென்று கேட்கவே விஷயத்தை சொன்னோம். மக்கள் திரண்டதால் எங்களை மிரட்டிய அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.
• அதன் பின் நாங்கள் எங்களின் வேலை முடியும் வரை வண்டிக்கு முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் என பைக்கில் பாதுகாப்புக்கு வந்தனர் அவ்வூர் இளைஞர்கள். சந்தோஷமாக இருந்தது. முதன்முறையாக அவ்வூருக்கு மக்களின் பிரச்சனைகளை பதிவு செய்தோமென இத்தனை மரியாதை. என்ன ஒரு கவலையென்றால்.. இதற்கு முன் இதே போல் தொழிற்சாலை – கிராம மக்கள் பிரச்சனையை படம் பிடிக்க செல்லும்போதெல்லாம் ஊரே இரண்டாக மற்றும் சாதிவாரியாக பிரிந்து கிடப்பதை பார்க்கமுடியும். ஒரு முறை நம்மிடம் பேசும் ஆட்கள், மறுமுறை போகும்போது பேச வரமாட்டார்கள். கேட்டால் அவர்கள் கம்பெனி ஆளாகிவிட்டார்கள். பேச வரமாட்டார்கள் என பதில் வரும். அனைத்து பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் கனகச்சிதமாக செய்துமுடிப்பது கம்பெனி ஆட்கள்தான் எனக்கூறுவர் அங்கு களத்தில் வேலை செய்யும் தோழர்கள். அதே போல் ஆலத்தியூரில் பார்த்த இளைஞர்களின் துடிப்பும், எழுச்சியும் காலத்திற்கும் நீடிக்கவேண்டும் என்பதே நம் விருப்பம்.
காசியம்மாளின் ஆதங்கம்;
.......................................................
காசியம்மாள் குடியிருக்கும் தெருவிற்கு அருகில் உள்ள விளைநிலங்களை முன்னமே விற்றுவிட்டனர் விவசாயிகள். இன்னும் சில ஆண்டுகளில் அங்கு சுரங்கம் தோண்டப்பட உள்ளதாக தகவல் வந்ததையடுத்து கலங்கி போயுள்ளனர் அவ்வூர் மக்கள். ஏற்கனவே ஊரில் வலதுபுறம் ஒரு மிகப்பெரிய சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இப்போது இடதுபுறமும் சுரங்கம் தோண்டப்படுமானால் ஊர் முழுக்க சுரங்கத்தின் தூசியிலும், அதனால் வரும் தொடர் பிரச்சனைகளாலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயமுள்ளது
இதைப்பற்றி அத்தெருவைச் சேர்ந்த வளர்மதியுடன் பேசி பதிவு செய்து கொண்டிருந்தபோது வேகவேகமாக வந்த இடைமறித்தார் காசியம்மாள்;
" இதுல சுரங்கம் எடுத்தா என்ன பண்றது? மக்க, புள்ளெயல்லாம் சாவுறதா..?
சுரங்கம் எடுக்கறதனால அப்படி என்னதான் பிரச்சனை….?
........................................................................................
" என்ன பிரச்சனைன்னாக்க… பூமி வாங்கிக்கும். பூமி வாங்கிகிட்டா நாங்கல்லாம் உள்ளாற போக வேண்டியதான். என்னைக்கு கல்லுக்காரனுவ எங்க ஊர்ல அடியெடுத்து வச்சசானுவளோ அன்னைக்கே எங்களுக்கு அழிம்பு வந்துடுச்சி. இன்னிக்கு நேத்திக்கு இல்ல.. ஆடு மாடு மேயுறதுக்குக் கூட வழியில்லாம நோண்டி நிறைச்சி மண்ணாக்கிபுட்டானுவ. நாங்க எங்க போயி புழைக்கிறது. ஆடு, மாடெல்லாம் தண்ணியில்லாம தவியா தவிக்குது. இங்கதான் நோண்டிக்கிட்டே இருக்கானுங்க.. தண்ணி பாட்டுக்கு உள்ளாற போயிட்டே இருக்குது. இங்க பாருங்க.. நாலு நாளா தண்ணி வரல. தெருவு தெருவா அலையுறோம். பொம்பளைங்கதான் தண்ணி எடுக்கணும். ஆம்பளைங்கதான் பொழக்க ஓடிடுறானுவளே… எங்க ஊர்ல ஒரு ஆளுக்கு வேலை கொடுத்தானுங்கன்னு சொல்லிப்புடச்சொல்லு பாப்பம். இங்கருந்து கேரளாவுக்கு 500ரூ சார்ஜ் போட்டு போயி புழைக்கிறோம்…
" இந்த ஊர்ல தங்கம் போட்டா தங்கம் விளையும்., அப்படியாப்பட்ட ஊரு. அப்படியாப்பட்ட நிலத்தையெல்லாம் மண்ணாக்கி போட்டுட்டானுவ சாடுமாரி பயலவ. நிலத்தை போட்டுப்புட்டுதான் இன்னிக்கு தவியா தவிக்கிறோம். "
ஆமா.. பின்ன என்ன..?
என் கல்யாணத்தப்பல்லாம் இந்த கொல்லையில அம்மாந் நெல்லு விளையும், அம்மாங்க கரும்பு விளையும். ஒவ்வொரு கருது இம்மாம்மாம் நீட்டத்துக்கு இருக்கும் இந்த இடத்துல.. நாங்க எப்படி புழைக்கிறத…? எங்களுக்கு வழி சொல்லிபுட்டு இங்க கரண்ட் வைங்க. ( சுரங்கத்திற்கு நிறுவப்படுவது ) கரண்ட்டெல்லாம் இங்க இழுக்கவே முடியாது.. நான் ஒண்டி போதும் இந்தத் தெருவுக்கு… "
……………………………………………………………………………
அப்படி என்ன உங்க ஊரு செழிப்பா இருக்கும். ஆத்துலயெல்லாம் நிறைய தண்ணி போகுமா…?
..................................................................................................
"ஆத்துல தண்ணி எந்நேரமும் போயிட்டு இருக்கும். இந்நாள் பொறந்துச்சின்னா பெண்ணாடத்துக்கு நாங்க ஆறு மாசத்துக்கு போகமுடியாது. அம்மாந் தண்ணி போயிட்டே இருக்கும். ஷட்டர சுத்திதான் நாங்க போவோம். கரும்பு, கடலை, எள், கம்பு அத்தனையும் விளையும்.. தங்கம் போட்டா தங்கம் எடுக்கலான்றனே நாந்தான்.. அப்படியாப்பட்ட பூமிய மண்ணாக்கிபுட்டாங்க. இப்போ புழைக்கறதுக்கு வழியில்ல. கம்பெனினாலதான் எங்களுக்கு பிரச்சனையே.. அவன் வந்து நோண்டுனான். எங்களுக்கு தண்ணி வத்திப்போச்சி… குடிக்கிறதுக்கு நாலு நாளைக்கு ஒருக்க தண்ணி வருது. நாங்க எங்க போய் புழைக்கிறது…? நாங்க உசிர் வாழ்றது எப்புடி? பச்சைத் தண்ணி இல்லாம புழைக்கமுடியுமா..? நீங்களே சொல்லுங்க…
வருமானத்துக்கு என்ன பண்றீங்க..?
..................................................................................
" இங்கருந்து நக்கமுடி, வெல்லூரு, விம்மேலி, வேட்டைக்குடின்லாம்ல போறோம்… களைபுடுங்க.. காலையில ஆறரை மணிக்கு பஸ் பிடிச்சா, சாயந்திரம் எட்டரை மணிக்குதான் இந்த புள்ளங்க மூஞ்ச பாக்கமுடியும். அம்மாந் நேரம் நாங்க வர்றதுக்குள்ள இந்த புள்ளங்க என்ன ஆவுறது…? 110ரூபா தர்றான். அதை எடுத்துட்டு வந்து என்ன பண்றது…."
சிமெண்ட் கம்பெனிகளும் வேணுல்ல…?
" சிமெண்ட் கம்பெனிங்க வந்து எங்களுக்கு என்ன ஆகப்போகுது.. நாங்க மாடி மேல மாடி வச்சா கட்டப்போறோம். அவ்வளவு பணம் வந்தா அப்புறம் எங்களுக்கு என்ன இருக்குது…?
..........................................................................................
என்ன ஆனாலும் சரி; நிலத்தை விக்கமாட்டேன் – திருவேங்கடம்
..................................................................................................
திருவேங்கடத்தின் குடும்பம் கூட்டுக்குடும்பம். இன்றும் முப்பது ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இவரின் விவசாய நிலங்கள் அனைத்தும் அருகிலிருக்கும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலையொன்றின் சுரங்கங்களுக்கிடையே 18இடங்களில் தனித்தனியாக மாட்டிக்கொண்டுள்ளன. அதில் 3ஏக்கரில் கம்பு, 5ஏக்கரில் கரும்பு என விவசாயம் பார்த்து வருகின்றனர் இவரின் குடும்பத்தார். மிகப்பெரிய சுரங்கங்களுக்கு நடுவில், விவசாயம் செய்வது அத்தனை எளிதான ஒன்றல்ல. சுற்றிலும் சுரங்கத்திற்கான ஹைவோல்டேஜ் கேபிள் ஒயர்கள் போகின்றன. நாள் முழுவதும் சுண்ணாம்பு ஏற்றிச்செல்லும் லாரிகள் கிளப்பும் தூசிகள், இவர் வைத்திருக்கும் பயிர்களில் படிந்து கடுமையான பாதிப்பை ஏற்படூத்துகின்றன. பயிர் நிலங்களுக்கு நடுவில் திடீரெனத் தொடங்கும் 200அடி சுரங்கங்களில் இவரின் மாடுகள் வேறு விழுந்து செத்திருக்கின்றன. இவர் மீது தொழிற்சாலை நிர்வாகம் இரண்டு முறை காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கின்றனர். அத்தனையையும் தாங்கிக்கொண்டு, தொழிற்சாலையிடம் அவ்வப்போது கோரிக்கைகளையும், இழப்பீடுகளையும் கோரிக்கொண்டே விடாது விவசாயம் செய்து வருகின்றனர் திருவேங்கடம் குடும்பத்தினர். தற்போது ஐம்பது மூட்டை விவசாயக் கம்பு வரும் என்று எதிர்பார்த்திருக்கையில், பயிர்களில் தூசி படிந்ததால் 25மூட்டையே விளைந்திருப்பதாக கூறினார் திருவேங்கடம்.
இவ்வளவு தொந்தரவுக்கிடையில ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு விவசாயம் செய்றீங்க…?
" ஏன்னா எங்களுக்கு விவசாயந்தான் தொழில். அதை விட்டா வேற எதுவும் தெரியாது. இதை நம்பிதான் புள்ளங்கள படிக்கவெச்சோம். அவங்க காலத்துல எப்படி இருக்காங்களோ தெரியாது.. ஆனா நாங்க விவசாயத்த விடப்போறதில்ல. அவங்க கம்பெனில போய் கைகைட்டி சம்பளம் வாங்கில்லாம் புழைக்க முடியாது. என் நிலத்தை என்ன ஆனாலும் நான் விக்கறதாயில்ல."
……………………………………………………………………………
" தஞ்சை ஊரு எங்க ஊரு" - முள்ளுக்குறிச்சி கிராமமக்கள்
......................................................................................................
" கைவிடப்பட்ட சுரங்கங்களை மூடி மேய்ச்சல் நிலமாக்கித் தரணும்; அருள்மொழி வர்மன்
...........................................................................................
" செம்மண், கரிசல்மண், வெள்ளைமண், வண்டல் மண்ணுன்னு எங்க ஊர்ல இல்லாத மணலே கிடையாதுங்க. பல வகையான பயிர்கள் விளைஞ்ச ஊரு. வருஷத்துக்கு எத்தனையோ டன் சிமெண்ட் உற்பத்தி பண்ற தொழிற்சாலைகள் தினந்தோறும் லட்சம் லிட்டருக்கும் மேல எங்க ஊர்லருந்து தண்ணிய உறிஞ்சி எடுக்குறாங்க. வெள்ளாறுக்கு போற கால்வாய் 150மீட்டர் நீளம் இருக்கும். அதை வழிமறிச்சி திருப்பிவிட்டுட்டாங்க. இப்போ பத்துமீட்டர் அகலம்தான் இருக்கு. ஊரைச்சுத்தி மைனிங்க இருக்கு. அதை சுத்தி வேலி போட்டதுனால ஆடுமாடுங்கக் கூட மேய்க்க முடியல. நாங்களே எங்க சொந்த ஊருக்குள்ள முடக்கப்பட்ட மாதிரி இருக்கு. இந்த மைனிங்க மூடச்சொல்லி கலெக்டர் உத்தரவு போட்டு 3வருஷத்துக்கு மேல ஆகப்போகுது. இன்னும் மூடல. கைவிடப்பட்ட மைனிங்கெல்லாம் முறைப்படி மூடி எங்களுக்கு மேய்ச்சல் நிலமாக்கித் தரணும். ஒவ்வொரு முறையும் பிரச்சனைன்னு போறப்ப அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எல்லாரும் கம்பெனிகளுக்குத்தான் துணையா போயிடுறாங்க. காவல்துறையும் முதல்ல அவங்களுக்கு சப்போர்ட்டாதான் வந்து நிக்குறாங்க. எங்கப்போய் பிரச்சனையை சொல்றதுன்னு தெரியல.. எங்களால வெளியூர்ல போய் வாழமுடியாது. எங்க சொந்தபந்தங்கள் எல்லாம் இங்கதான் இருக்கு. "
.....................................
ரமேஷ் கருப்பையா - சமூக ஆர்வலர்:
........................................................................
தொழுதூரில் வசிப்பவர். பிசியோதெரபிஸ்ட். ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு எற்படுத்தி வருபவர். ஆலத்தியூரில் நாங்கள் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றின் அனல் மின் நிலைய தொடக்கத்திற்காக நடந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலத்தியூர் மக்களுக்கு சரியான நேரத்தில், தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களும் உடன் வந்தவர். சிமெண்ட் தொழிற்சாலை நபர்கள் தனியாக எங்களை படம் பிடிக்கவிடாமல் தகராறு பண்ணியபோது, ரமேஷ் கருப்பையாவிடம் சென்ற ஒரு நபர் " உங்களுக்கு என்னதான் வேண்டும்? ஏன் தொடர்ந்து பிரச்சனை செய்கிறீர்கள்? என தனியாக பேச முயற்சிக்கையில் அதை கடுமையா எதிர்த்தார் ரமேஷ் கருப்பையா...
ஆலத்தியூர் கணேசன்
..........................................................
அங்கிருந்த இரண்டு நாட்களாக சிறிதும் சுணங்காமல் உடன் பயணித்த இளைஞர். விற்றது போக ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை தொடர்பவர். ஊரிலிருக்கும் இளைஞர்களை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் துடிப்பான இளைஞர்.
………………………………………………………………………………………
ஆலத்தியூர், காலனி, கிருஷ்ணமூர்த்தி;
...............................................................................................
" இந்த ஊர்லயே ஒரு தெருவுக்கு எட்டு போர்வெல் இருக்குங்க. ஆனாலும் அடிச்சா தண்ணி வராது. முன்னல்லாம் தண்ணி தேங்கா தண்ணி மாதிரி இருக்கும. இப்போ டேஸ்டே இல்லங்க. ஒரே சுண்ணாம்பு வாடை. தண்ணி கீழ போகப்போக அப்படியாயிடுது. ஊர்ல ஆளாளுக்கு அல்சர்தான்.. ஒரே வயித்து வலி வயித்துவலின்னுதான் யாரை கேட்டாலும் சொல்லுவாங்க. யாரும் எதுவும் வந்து கேக்குறதில்ல. கேக்குறவங்கள தனியா ஆஃபீஸ்க்கு கூட்டிட்டு போயி சாமாளிச்சிடுவாங்க. இங்க நிலத்த வச்சிருக்கற நாங்க அத வித்துட்டு ஊர்ஊரா போயி சம்பாதிக்கிறோம். வெளியூர்ல போயி வேலை செஞ்சிட்டு ஊருக்கு வந்தா, இங்க குடிக்க தண்ணி கிடைக்கமாட்டேங்குது. மலைவாசி மாதிரி நாங்க இருக்கோம். தஞ்சை நகரம் மாதிரி இருந்த ஊரு… நெல், கரும்பு, கம்பு, எள்,கடலைன்னு அவ்வளவு விளையும். இந்த ஊர்ல கரும்பு வெட்டுறதுக்காக சுத்துபட்டு ஊர்ல அவ்வளவு சனங்க 8நாள் தங்கிருந்து கரும்பு வெட்டுவாங்க. இப்போ ஒரு துண்டு கரும்ப கூட காசு கொடுத்துதான் வாங்கித்தின்றோம்."
கம்பெனில கூலி வேலைக்கு போறாங்க எங்க அம்மா அப்பா; நடராஜ்
..................................................................................................
" எங்க ஊர்ல டிப்ளமோ, என்ஜினியரிங்க படிச்சிட்டு பசங்க வேலையில்லாம திரியிறோம். இளைஞர்களுக்கு இங்க இருக்கற கம்பெனில வேலை தரமாட்றாங்க. ஊரை சுத்தி இந்தாண்ட, அந்தாண்ட மைன்ஸ்தான். நாங்க நடுவுல தீவுல கிடக்குற மாதிரி கிடக்குறோம். ஒரே சுண்ணாம்பு தண்ணிதான் எங்களுக்கு கிடைக்குது. வெடிகள் போடுறதால வீடெல்லாம் கீறல் விட்ருது. தண்ணி குடிக்கவே முடியாது. எந்த சாமான் வாங்கறதுனாலும் வெளிலதான் வாங்கணும். போறபோக்குல தண்ணிய கூட வெளியூர்லருந்துதான் வாங்கிட்டு வரணும் போலருக்கு..
இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துலயெல்லாம் ஒரு பயலுகள பாக்கமுடியாது. எல்லாரும் வயக்காட்டுலதான் நிப்போம். எங்க அம்மா அப்பா இருந்த ஏக்கர் நிலத்த 50ஆயிரம் ரூபாய்க்கு வித்துபுட்டு கம்பெனிக்கு போனா கூலி வேலை கொடுக்கறாங்க. ஒரு ஏக்கருக்கு முதலாளியா இருந்தவங்கல்லாம் இன்னிக்கு கம்பெனில கார் கழுவுற வேலைக்கும், செடிக்கு தண்ணி ஊத்துற வேலைக்கும் போறாங்க.
ஊரைச்சுத்தி இருக்கற ஏரி, குளங்கள்ல தண்ணி கிடையாது. வாரியெல்லாம் அடைச்சிபுட்டானுங்க. எவ்வளவோ மரங்கள் இருந்துச்சி. இன்னிக்கு ஒரு மரம் கூட இல்லை.. எங்க ஊர்ல இயற்கையே இல்லாம போயிடுச்சி…
நாங்க வேணா வாங்குன காசுக்கு, எக்ஸ்ட்ரா கொடுத்து நிலத்த வாங்கிக்குறோம். நிலத்த கொடுக்கச் சொல்லுங்க. கம்பெனியெல்லாம் எங்களுக்கு வேணாம். அவுங்கள வெளிய போவச்சொல்லுங்க… எங்கள நாங்களே பாத்துக்குறோம்… "
.....................................................................
" விட்டோம் பாருங்க எங்க நிலத்த.. இப்ப கைய விட்ட மாதிரி நிக்குறோம்; "
...........................................................................................
அறுபது வயதிருக்கும் அந்த பாட்டிக்கு. பத்து ஏக்கர் நிலத்தை தொழிற்சாலைக்காக 50ஆயிரத்திற்கும், ஒரு லட்சத்திற்கும் விற்றவர். அவரின் இப்போதைய ஒரே வாழ்வாதாரம் நூறுநாள் வேலைத்திட்டம். இந்த தள்ளாத வயதிலும் அவர் மண்வெட்டி எடுத்து வெட்டினால்தான் சோறு. முதியோர் பென்சனும் அவருக்கு கிடைப்பதில்லை.
"பத்து ஏக்கர வித்தோம். இன்னிக்கு பாடுபட்டதான் புழைப்பு. அனாதைப் பணமும் இல்லை. 40வயது வரைக்குந்தான் கம்பெனில வேலைன்றாங்க. நாங்கல்லாம் எங்க போவம். இந்த மண்வெட்டுற வேலையும் இல்லன்னா நாங்க சாக வேண்டியதான். எங்க காடெல்லாம் நந்தவனம். இன்னிக்கு எல்லாம் சுடுகாடா மாறிப்போச்சி. இந்த வேலையும் எலக்ஷன் வந்தா கிடையாதுன்றாங்க. டில்லிலருந்து வர்றான், பம்பாய்லருந்து வர்றான், மதுரையிலருந்து வர்றான்.. நாங்க வித்த நிலத்தை கோடி ரூபாய்க்கு வாங்கி அவன் சோறு தின்றான். நாங்க புழைப்பில்லாம இருக்கோம். வுட்டோம் பாருங்க எங்க நிலத்த… கையவுட்ட மாதிரி நாங்க நிக்குறோம்.
எனக்கு கைகால்லாம் நடுக்கம் வந்துருச்சி.. ரொம்ப நேரம் நின்னு பேசமுடியாது. மயக்கம் வந்துரும். எனக்கு புறந்த இரண்டு பசங்க இறந்துபோயிட்டாங்க. ஒரு புள்ள இருக்கு. ரெண்டு வருஷமா இந்த மவராசன் மண்ணு வெட்ட கொடுத்தான் சாப்புடுறோம்"
அவ்வளவு விளையுமா இந்த ஊர்ல…?
பெருமூச்செடுத்தபடி மீண்டும் பேசத்தொடங்கினார் அந்த பாட்டி;
...............................................................................
"அய்யய்யோ… நந்தவனம் சார் எங்க காடு. இப்போ எல்லாம் கருவைக்காடாயிடுச்சி. இப்படி சுத்தி வந்தா ரெண்டு இளநி வெட்டி குடிச்சி பசியாறுவோம். நெல்லு, கரும்பு, கடலை, தட்டைப்பயறு, மொச்சைக்கொட்டை, கொண்டைக்கடலை, துவரை… எல்லாம் விளையும். சீமை எண்ணையும், உப்புந்தான் எங்க ஊர்ல விலைக்கு வாங்கணும். சொசைட்டி அரிசி கூட கிடைக்குறதில்ல.. தஞ்சை ஊரு நகரு எங்க ஊரு. இன்னிக்கு எல்லாம் விலைக்கு வாங்கவேண்டிருக்கு. அப்படி விளைஞ்ச நிலத்த ஏமாத்தி 50ஆயிரத்துக்கும், ஒரு லட்சத்துக்கும் வித்துட்டு நிக்குறோம். எங்க நிலத்த வித்துட்டு எங்க ஊட்டு புள்ளங்க பாடுபட்டு புழைக்குது. செல்வமா புழைச்ச பிள்ளைங்க இன்னிக்கு சீர்குலைஞ்சி நிக்குது."
"வீட்டுக்கு ஒரு ஆளுக்கு வேலை தரணும்"
......................................................................................
" நிலத்தையும், நீரையும் ஒருசேர இழந்து பரிதவிக்கும் மக்களை ஆலத்தியூர் முழுக்கவே பார்க்க முடிந்தது. "எங்க ஊர்ல தண்ணி தேங்கா தண்ணி மாதிரி இருக்கும். 40அடில தண்ணி வரும். இப்போல்லாம் 200அடிக்கும் கீழ போயிடுச்சி" என்பதான குரல்களை நிகழ்ச்சிக்காக சென்ற நிறைய தமிழக கிராமங்களில் கண்டும், கேட்டும் இருக்கிறோம்… அத்தகையதொரு குரல்தான் இதுவும்;
" எங்க ஊர்ல எல்லாம் விளையுங்க. கொத்தமல்லி விதைச்சிட்டு வந்தா முளைச்சிபுடுங்க.. நாங்க அதை பறிக்கறதுக்குதான் திரும்ப தோட்டத்துக்கு போவோம். கொத்தமல்லி, கடுகு, வெண்டைக்காய், கொத்தவரங்காய், எல்லாம் விளையும்… இது பூரை தென்னந்தோப்புதான். வீட்டுக்கு ஒரு ஆளுக்கு வேலை தர்றோன்றதனாலதாங்க வித்தோம். நிலத்தையும் குறைஞ்ச விலைக்கு வாங்கிட்டு வேலையும் தரலைங்க. இந்த ஏரில தண்ணி அப்படி நிக்குங்க. இங்கதான் குளிப்போம். தண்ணி சில்லுன்னு இருக்கு. இந்தப்பக்கம் போனா பத்து தேங்காய், அந்தப்பக்கம் போனா பத்து தேங்காய் பறிப்போம். இப்போ ஒரு தென்னைமரம் இல்லங்க. எல்லாம் கருவைக்காடாயிடுச்சி. ஒரு தேங்கா 20ரூவா குடுத்து வாங்குறோம்…
எங்க நிலத்தை 90ஆயிரத்துக்கு வித்துட்டு இப்போ என் வூட்டுக்காரர் சென்னையில போயி ஆட்டோ ஓட்டி புழைக்கிறாருங்க.
தண்ணியே இல்லங்க… முருங்கைக்கீரைய கூட பறிச்சி குழம்பு வைக்க முடியல. கொண்டைக்கடலை கீரை, காசினிக்கீரை, கொமுட்டி கீரைன்னு எல்லாம் சுண்ணாம்பு தூசி படிஞ்சி பொத்தல் பொத்தலா இருக்குங்க. கொள்ளைக்காடு ஒண்ணு விளையல..
வீட்டுக்கு ஒரு ஆளுக்கு வேலை கொடுத்தா போதும். அதுவும் படிச்சவங்களுக்கு மட்டும் கொடுத்தா போதும். 10/15பேருக்கு பெர்மணன்ட் வேலை கொடுத்துருக்காங்க. ஆனா அது அவங்க குடும்பத்துக்கு மட்டும்தானங்க நல்லது.. நாங்கல்லாம் எங்க போறதுங்க..? வீட்டுக்கு ஒரு ஆளுக்கு வேலை கொடுத்தா அந்த குடும்பமே புழைக்கும்ல…
ஒரு ஜாக்கெட் எடுக்க 50ரூ, தைக்க 50ரூவா ஆகுதுங்க.. எப்படிங்க நாங்க புழைக்கிறது..? முந்திரிக்காடு விளையல, கொள்ளைக்காடு விளையல.. இங்கருந்து வெளியூருக்கு போயி நிலம் வாங்கி விவசாயம் பண்ண முடியுமாங்க…?
35வருஷத்துக்கு முன்னாடி நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுல இந்த ஏரில (வடக்கு ஏரி) அவ்வளவு தண்ணி நிக்குங்க. வண்ணாருங்க இங்கதான் துணி துவைப்பாங்க. நாங்க இங்கதான் குளிப்போம். தண்ணி அவ்வளவு சில்லுன்னு இருக்குங்க… ஒரு மோட்டார் போட்டா உலகத்து சனமே தண்ணிக்குடிக்கும். இன்னிக்கு தெருவுக்கு 4போரு போட்டா கூட தண்ணி வர மாட்டேங்குதுங்க.. ஆடு, மாடெல்லாம் வச்சிருக்கோம் நாங்க..? இன்னிக்கு புண்ணாக்கு விலை 55ரூ. தவுடு மூட்டை 2500ரூவாக்கு விக்குது. பால்மாட்டுக்கு இதெல்லாம் வாங்கி போட்டு எவ்வளவ மிச்சம் எடுக்கறது..?
ஒரே கருவைதான்.. வடக்கு ஏரி, மாங்குளம்.. எம்மாம் மழை பெய்ஞ்சாலும் தண்ணி நிக்குறதல்லீங்க…
இந்த 100நாள் வேலை இல்லன்னா பொண்டுவ என்ன பண்ணுங்கன்னே தெரியலீங்க…? கம்பெனி கட்டுனதோட இருக்கட்டுங்க. இனிமேல் பாதிக்கக்கூடாது.. அரைமைலுக்கு அந்தாண்ட சுரங்கம் வெட்டப்போறாங்களா.. அதெல்லாம் வெட்டக்கூடாதுன்னு சொல்லுங்க. வெடி போடக்கூடாதுன்னு சொல்லுங்க.. கம்பெனிகாரங்க என்ன எங்கள ஊர்ல இருக்கக்கூடாதுன்னு சொல்லிடுவாங்களா…? நாங்க எங்கப் போய் இருக்கறது? மருமகப்புள்ள வீட்டுல போய் இருந்தா என்ன மரியாதையாவா இருக்கும். ஒரு நாள் ரெண்டு நாள் இருக்கலாம். அப்புறம் பெத்த மகளே நம்மள கேக்கமாட்டாளா..? சொந்தபந்தமெல்லாம் மூணு நாளைக்குத்தான்.
காரமணி பயிறு, கடுகு இதெல்லாம் நானே வித்துருக்கேன். கொத்தமல்லி 3ரூவாக்கு வித்துருக்கேன்.. மாகாணி இன்னிக்கு கொத்தமல்லி கட்டு 200ரூவாய்க்கு விக்குது. கடுகு 10ரூவாய்க்கு வித்துருக்கேன். இன்னிக்கு கிலோ 150ரூபாய்க்கு விக்குது.
ஏரில தண்ணி இல்ல, குளத்துல தண்ணி இல்ல, ஆத்துல தண்ணி இல்ல. மோட்டார் எல்லாம் அவுத்து அவுத்து கிடக்கும். இன்னிக்கு எத்தனை மோட்டார் போட்டாலும் தண்ணிக்கு அம்மாங் கஷ்டமா இருக்கு. காய்கறி வாங்க வெளியூருக்கு போகவேண்டியதாயிருக்கு. கலெக்டர் வந்து இங்கிட்டுருக்க குழிய மூடசொல்லி வருஷம் ஆச்சி.. 10ஆளு மட்டம் இருக்கும். குழிய மூடாம எப்படிங்க தண்ணி பூமில நிக்கும்..? சுத்தி வெட்டியாச்சி. நடுவுல ஊரு இருக்கு.. நாங்க வித்த விலைக்கு கூட வட்டியோட தர்றோம்.. எங்க கொல்லைய திருப்பித் தரச்சொல்லுங்க..
...................................................
பாதையற்று தவிக்கும் இருளர் குடும்பங்கள்:
அந்த நாளின் கடைசியில்தான் இரண்டு இருளர் இளைஞர்களை சந்திக்கமுடிந்தது. ஊரின் கடைகோடியில் இருக்கும் இருளர் குடும்பங்கள் பொதுவழியாக பயன்படுத்தி வந்த வாரியை, புறம்போக்கு நிலங்களை (கால்வாயை) சுண்ணாம்பு சுரங்கத்திற்காக தனியார் தொழிற்சாலை எடுத்துக்கொண்டதால் அவதிப்படும் மக்கள்.
" எங்க ஊரு கச்சிராயன்பேட்டைங்க. 60குடும்பங்கள் இருக்கோம். புள்ளங்க ஸ்கூலுக்கு கூட போகமுடியலீங்க. இப்பதாங்க எங்க புள்ளங்களே படிக்க ஆரம்பிச்சிருக்கு. இப்ப சுத்தி போகவேண்டியதால பள்ளிகூடம் போகமாட்டேன்னு அடம்பிடிக்குதுங்க.. ஆஸ்பிட்டல் போறதுக்கு வழியில்ல. ரேஷன் பொருள் வாங்குறதுக்கெல்லாம் எட்டு கி.மீட்டர் சுத்திதாங்க போகவேண்டியதாருக்கு. நாங்களும் எத்தனையோ மனு கொடுத்துட்டோம். கம்பெனிக்காரங்ககிட்ட பேசுனோம். எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டேங்கறாங்க. நாங்க இருளர் சனங்க.. இவ்வளவு பெரிய கம்பெனிக்கு எதிரா பேச பயம்மா இருக்குங்க.
ஆலத்தியூர் – சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
...........................................................................................................
• ஆலத்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் வளர்மதி – மருதமுத்து தம்பதிகள். இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு. கடந்த 3வருடங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வருகிறார் மருதமுத்து. வாரத்திற்கு ஒரு முறை டயாலிஸிஸ் செய்யவேண்டும். இதுவரை 8லட்ச ரூபாய் செலவு பண்ணியாகிவிட்டது. ஆனாலும் முழுமையாக குணப்படுத்த முடியாதென மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
" கஷ்டன்னா நினைச்சி பாக்க முடியாத கஷ்டம். கூலிக்குன்னாலும் நாந்தான் போகணும். இவரை கூட்டிட்டு போகணுன்னாலும் நாந்தான் போகணும். நாளைக்கு கூட்டிட்டு போனா வர 11மணி ஆகிடும். யார் இருந்தாலும், செத்தாலும் நாங்க டயாலிஸிஸ் பண்ண போயாகணும். அப்படி போகலன்னா இவருக்கு மூச்சுத்திணறல் வந்துடுது. நீர்ப்பிரியாது. அப்புறம் கார் வச்சிதான் கொண்டு போகணும். கூலி வேலைக்கு போயி சம்பாதிச்சிதான் அவரை பாத்துக்குறேன். அதை வச்சி மாசம் மாத்திரை வாங்கமுடியுமா.. வட்டிக்குத்தான் வாங்குறோம்.. இப்போ வீட்டுக்கு பக்கத்துலயே சுரங்கம் வரப்போகுதுன்றாங்க.. நாங்க என்ன பண்றது..? புழுதி படியும். வெடி போடுவாங்க. ஏற்கனவே செலவு பண்ணி கட்டுன காம்பவுண்ட் பாருங்க.. எப்படி வெடிச்சத்தத்துல உடைஞ்சி கிடக்குன்னு..? இப்போ இங்கன சுரங்கம் தோண்டுனாங்கன்னா பத்துநாள்ல சாவுறதெல்லாம், நாலுநாள்ல சாவ வேண்டியதான்.."
- வளர்மதி, மருதமுத்துவின் மனைவி
• அதே காலனியில் இருக்கும் வளர்மதி – கொலிஞ்சி தம்பதியர்கள். கடந்த ஒரு வருடமாக கொலிஞ்சி சிறுநீரகப்பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.
• அருந்ததியர் தெருவில் வசிக்கும் மற்றொருவர் பெயரும் கொலிஞ்சிதான். அவரும் சிறுநீரக நோயாளி. நாங்கள் சென்ற நேரம் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
• செட்டியார் – சிறுநீரக்கல் பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்தவர்
• அண்மையில் இரு சிறுநீரக நோயாளிகள் இறந்துபோனதாக ஆலத்தியூர் காலனி மக்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
……………………………………………………………………………
சிமெண்ட் தொழிற்சாலைகள்: அரியலூர்
.........................................................
சிமெண்ட் என்பது இன்று வளர்ச்சியின் குறியீடாக மாறியுள்ளது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சிமெண்ட்தான். இந்தியாவிலிருந்து சிமெண்ட் அதிகளவில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தென்னிந்தியாவில் சிமெண்ட் தொழிற்சாலைகள் ஆண்டுக்கு சுமார் 110மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறனுள்ளது. ஆனால் ஆண்டுக்கு சுமார் எழுபது மில்லியன் டன் சிமெண்ட் போதுமானதாக உள்ளது. எனவே தென்னிந்திய சிமெண்ட் ஆலைகள் 65சதவீத உற்பத்தித் திறனிலேயே இயங்குகின்றன. இவ்வாறு இயங்கினால் மட்டும்தான் சிமெண்ட் தொழிற்சாலைகளால் லாபத்துடன் இயங்கமுடியும். ஆனால் சந்தையில் தேவையும், பற்றாக்குறையும், விலையேற்றமும் தொடர்ந்தபடியே இருக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 55 சுண்ணாம்பு குவாரிகளும், டால்மியா சிமெண்ட்ஸ், அல்ட்ரா டெக், இண்டியா சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ், ராம்கோ சிமெண்ட்ஸ், ஜேப்பியார் சிமெண்ட்ஸ், அரசுக்கு சொந்தமான இரண்டு (TANCEM) சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட எட்டு சிமெண்ட தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் சுண்ணாம்பு குவாரிகளாலும், தொழிற்சாலைகளாலும் மாசடைந்துள்ளன. வெள்ளாறு, உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரால் நிரம்பியுள்ளன.
சிஎஸ்இ(CSE) நிறுவனம் இந்திய சிமெண்ட் தொழிற்சாலைகளை வகைப்படுத்திய போது தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு மூன்று நட்சத்திர அந்தஸ்து கொடுத்துள்ளது. மின் ஆற்றலை குறைவாக பயன்படுத்தியது, கார்பன்டை ஆக்ஸைடை குறைவாக வெளியேற்றியது, சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎஸ்இயின் கூற்றுப்படி சிமெண்ட் தொழிற்சாலைகள் அவர்களுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல் எடுக்கும் சுரங்கங்களில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை எனக் கூறியுள்ளது. ஒட்டுமொத்த செலவைக் குறைப்பதாகக் கூறிக்கொண்டு, இடுபொருள் உற்பத்தி செலவை குறைக்கிறார்கள். அதனால் சுரங்கம் தோண்டும் பகுதிகளில் புதிய தொழில்நுட்பத்தையோ, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளையோ எடுக்காமல் மிக மோசமாக நடப்பதாகவே கூறியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் 2011ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி சிமெண்ட் தொழிற்சாலை தூசிகள் மற்றும் சாம்பலில் கன உலோகங்களான நிக்கல், கோபால்ட், காரீயம், குரோமியம் போன்றவை தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என அறவிக்கப்பட்டுள்ளது…
2006ஆம் ஆண்டில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் சிமெண்ட் தொழிற்சாலைகளினால் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக வேப்பமரத்தின் இலைகளில் குளோரோஃபில் எனப்படும் பச்சையம் பாதிக்கப்படுவதை பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.
வேலூர் மற்றும் தஞ்சாவூர் கல்லூரி பேராசிரியர்களின் ஆய்வு முடிவுகளின் படி சிமெண்ட் தொழிற்சாலைகளினால் ஏற்பட்ட காற்று மாசு, தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
35சதவீத இளையவர்களும் 45சதவீத முதியவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொழிற்சாலையைச் சுற்றி அமைந்துள்ள பள்ளிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள குழந்தைகளுக்கும் அதேயளவு பாதிப்புகள் கண்டறியப்பட்டள்ளன.
இதே போன்று பல்வேறு ஆய்வுகள் சிமெண்ட் தொழிற்சாலைகளினால் காற்று மாசடைவதையும், மனிதர்கள் பாதிக்கப்படுவதையும் உறுதி செய்துள்ளன.
இந்தப் பிரச்னை தமிழ்நாட்டுல பொதுமக்கள் கவனத்துக்கு வரல, கருத்துக்கேட்புக்கூட்டங்கள் நடத்துனதை ஒட்டிதான் ஓரளவுக்கு கவனத்துக்கு வந்திருக்குன்னு சொன்னாங்க.
இப்போ சிமெண்ட் ஆலைகள் அவங்க இடத்துலயே அனல்மின்நிலையம் நடத்துற முயற்சில இருக்காங்க. அது இன்னும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்தும்னு மக்கள் பயந்துதான் போராட்டம் நடத்தி அரியலூர் வட்டாரத்துல உள்ள பிரச்னை வெளியே தெரிய வந்திருக்கு.
தமிழ்நாட்டுல உள்ள சின்ன மாவட்டங்கள்ல ஒண்ணுதான் அரியலூர். சுண்ணாம்புப்பாறை தோண்டியெடுக்குறதுக்காக 55 சுரங்கங்கள் இயங்கிட்டிருக்கு. சுரங்கங்கள் விதிமுறைப்படி நடத்தப்படல. அதுலர்ந்து வெடி வைக்குற சத்தம் தொடர்ந்து கேட்டுட்டே இருக்கு. தூசு பிரச்னை இருந்துட்டே இருக்கு. சுரங்கங்கள்லர்ந்து வெளியே வர்ற தண்ணீரும் வெள்ளாறுல அப்படியே கலக்குது.
சுரங்கத்துல இவ்வளவு பிரச்னை இருக்குறப்போ, அங்கேயே சிமெண்ட் தொழிற்சாலைகளும் இயங்குறதுக்கு அவசியம் என்ன?
நடத்துற சுரங்கங்களையும் சிமெண்ட் கம்பெனிகளையும் அவங்க ஒத்துக்கிட்ட விதிமுறைப்படி நடத்துனாலே சுற்றுச்சூழல் கேடுகளைக் கணிசமா குறைக்க முடியும்.
ஒரு குறுகிய பரப்பளவுல இத்தனை சிமெண்ட் ஆலைகள் இயங்கி அந்தப் பகுதியையே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு உள்ளாக்குறதயும் ஏத்துக்க முடியாது.
ஆனா அரியலூர் வட்டார மக்கள்கிட்ட பேசுனது, நாம பார்த்தது வச்சு பார்த்தா இந்த சிமெண்ட் கம்பெனிகள் முறைப்படி நடக்குதாங்கிற ஒரு கேள்வி எழுது.
அரியலூரைச் சுற்றிலும் 8 சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தொழிற்சாலைகளை பட்டியலிடும்போது க்ரீன், ஆரஞ்ச், ரெட் அப்படின்னு மூன்று வகையாக பிரிக்கிறார்கள். சிமெண்ட் தொழிற்சாலைகளை RED CATEGORY யில்தான் பட்டியலிட்டுள்ளனர். அதிக அளவில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள்தான் இந்த வகையினுள் வரும். இதில் சிமெணட் தொழிற்சாகைள் அதிக அளவு மாசுப்படுத்தக்கூடியவை என்பது தெரிந்தேதான் நிறுவப்படுகின்றன. ஆனால் நமக்கு வரும் கேள்வி கிராமங்கள் அதிகமாக இருக்கும் பகுதியை சுற்றி, அடுத்தடுத்து சுண்ணாம்பு சுரங்கங்களும், தொழிற்சாலைகளும், புதிதாக தோண்டப்படும் சுரங்கங்களும் எப்படி செயல்படுகின்றன என்பதுதான்..?
இதனால ஏற்படும் பெரிய பிரச்சனை என்னவென்றால் நிலத்தடி நீர் இறங்கறதும், நிலத்தடி நீர் மாசுபடுறதும், கழிவு நீர் சுற்றியிருக்கற நீராதாரங்கள் கலக்கறதும்தான்…
இந்த தொழிற்சாலைகள் தனித்தனியாக முறைப்படி சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை கொடுத்துட்டு விட்டுதான் இயங்குகின்றன. ஆனால் ஒரு மாவட்டத்தில் ஒரு நகரத்தைச் சுற்றி மட்டுமே எட்டு சிமெண்ட தொழிற்சாலைகள் இயங்கும்போது ஒட்டுமொத்தமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கணக்கில் எடுத்துகொண்டு சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை தயார் செய்வதுதானே முறையா இருக்க முடியும்..? இதை ஏன் மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் செய்யவில்லை என்பதுதான் நாம் எழுப்பும் பிரதானக்கேள்வி…
Photos:
1. சுண்ணாம்பு சுரங்கம்
2. நிலங்களை விற்றவர்கள் - ஊரக வேலையில்
3 .சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மருதமுத்துவும், அவரது மனைவி வளர்மதியும்
4..தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு நடுவில் துண்டு துண்டாக விவசாய நிலங்களை வைத்திருக்கும் திருவேங்கடம் அவர் நிலத்தை காட்டுவதற்காக சென்றபோது...
5.ஆலத்தியூர் கிராமத்தில் உள்ள ராம்கோ நிறுவனம்,இந்தியா சிமெண்ட்ஸ்
=====================================================================












Post a Comment

Powered by Blogger.