Halloween party ideas 2015
.

டென்மார்க் சண்ணின் திரைக்கதை, கதை, இயக்கம், இசை, தயாரிப்பிலும் ஜெயசாந்த், முகுந்தன், பிரகாசினி மற்றும் பலரின் நடிப்பிலும் செல்வனின் ஒளிப்பதிவிலும் நிலானின் படத்தொகுப்பிலும் சித்திரை-30 டென்மார்க்(கொல்ரபுறோ) திரையரங்குளில் பிரமாண்டமாக வெளியிடவுள்ளது.

யார் இந்த டென்மார் சண்

யாழ்ப்பாணத்திலுள்ள கோப்பாய் என்னும் ஊரில் மருத்துவர் சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலை, கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பட்டப் படிப்புக்கு தேர்வு பெற்றார்.

சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். திரைப்படத் துறையில் பணியாற்றுவதற்காக 1960 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது பட்டப்படிப்பை பாதியில் துறந்து கொழும்பு சென்றார்.

கொழும்புவில் அக்காலத்தில் இருந்த சிலோன் ஸ்டூடியோ நிறுவனத்தில் இரண்டு வருடகாலம் திரைப்பட நுட்பங்களை கற்றார். பின்னர் இம்பீரியல் டாக்கீசில் சுமார் ஒரு வருடம் பணியாற்றினார்.

1971 ஆம் ஆண்டு “ஷான்ஸ் இண்டர்நேஷனல்” என்ற நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக இவரது இசை அமைப்பில் சிங்கள மொழியில் நான்கு பாடல்கள் கொண்ட ஒரு இசைத்தட்டு தயாரிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. இதற்கான பாடல்களை எழுதியவர் கருணாரட்ன அபேசேகர. தமிழ் திரைப்பட உலகில் கவிஞர் கண்ணதாசன் கவியரசராக விளங்கியது போல சிங்கள திரைப்பட உலகில் கருணாரட்ண அபேசேகர கவியரசராக விளங்கினார். பாடல்களை சிங்கள திரையுலகின் பிரபல பாடகரான ஹெச். ஆர். ஜோதிபால பாடியிருந்தார்.

இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற “நீல தாச புரா” என்ற பாடல் மிகப் பிரபலமடைந்தது. சிங்கள ஊர்களில் திருமணங்களின் போது இந்தப் பாடலை ஒலிபெருக்கியில் போடுவார்கள்.  1972 இல் இதே கூட்டணியை வைத்து “ஒன்சிலி சிலி சில்ல மலேய” என்ற சிங்கள மொழி பாடல் இசைத்தட்டை வெளியிட்டார். இதுவும் ஒரு வெற்றிப் பாடலாக அமைந்தது. இதேபாடலை தமிழில் “குளிரடிக்குது கண்ணே பொன்னம்மா” என சண் பாடியுள்ளார்.

1970களின் பிற்பகுதியில் “ஷிராணி” என்ற சிங்கள மொழி திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இந்தப் படத்துக்கு அவரே இசை அமைத்தார். இந்தத் திரைப்படம் 1983 க்குப் பின்னரே வெளியிடப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட “கலியுக காலே” என்ற திரைப்படமே இவர் இசையமைத்து முதலில் வெளிவந்த திரைப்படமாகும்.

இந்தப் படம் ‘பாடல்களுக்காக ஓடிய திரைப்படம்’ எனப் பிரபலமடைந்தது. இதே படம் கலியுக காலம் என தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இலங்கை வானொலி கலைஞர்களான ஜோக்கிம் பெர்னாண்டோ, விஜயாள் பீட்டர், எஸ். ராம்தாஸ், டி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், கே. எஸ். பாலச்சந்திரன், சுப்புலட்சுமி காசிநாதன் ஆகியோர் குரல் கொடுத்தனர். இப் படத்தில் அமுதன் அண்ணாமலை பாடிய ஒரு பாடல் மிகப் பிரபலமடைந்தது. மெல்லிசைப் பாடகர்களான எம். ஏ. குலசீலநாதன், எம். பி. பரமேஸ் ஆகியோரும் இப்படத்தில் ஷண் இசையமைப்பில் பாடினார்கள்.

1981 ஆம் ஆண்டில் “இளையநிலா” என்ற வண்ணப்படத்தை (Eastman Color) இலங்கையில் தயாரித்தார். இந்தப் படத்தில் தியாகராஜன், தீபா, (மீண்டும் கோகிலா புகழ்) ஸ்வப்னா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக எஸ். பி. பாலசுப்ரமணியம், சைலஜா ஆகியோர் இவரது இசையமைப்பில் பாடியுள்ளனர்.

1983 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு கலவரத்தில் கொழும்பிலிருந்த இவரது வீடு அழிக்கப்பட்டு உடமைகள் சூறையாடப்பட்டன. இவர் குடும்பத்துடன் உயிர் தப்பினார். 1985 ஆம் ஆண்டு சென்னை வந்து ஏவிஎம் நிறுவனம் மூலமாக “வசந்த கீதங்கள்” என்ற ஒரு ஒலிப்பேழை வெளியிட்டார். பாடல்களை எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.
ஷண் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு காட்சியை விளக்குகிறார். 1986 ஆம் ஆண்டு  தொடக்கத்தில் புலம் பெயர்ந்து டென்மார்க் சென்றார். அங்கு டேனிஷ் அரசு உதவியுடன் “தொடரும் துயரங்கள்” என்ற 20 நிமிட குறும்படத்தை இசையமைத்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டார். ஈழத் தமிழர்கள் ஏன் புலம் பெயர்கிறார்கள் என்பதை இப்படம் எடுத்துக் கூறியது. இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பெர்லின் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

தொடர்ந்து முன்னணி பாடகர்களை வைத்து அவரது இசையமைப்பில் பல ஆடியோ குறுந்தகடுகளை (Audio CDs) ஐரோப்பா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய இடங்களில் வெளியிட்டார். எழுத்தாளரும், இயக்குனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கே. எஸ். துரையை பாடலாசிரியராகவும் லாவண்யாவை பாடகியாகவும் அறிமுகம் செய்துள்ளார்.  கவிப்பேரரசு வைரமுத்து இவருக்கு 7 பாடல்களை எழுதியுள்ளார்.

டென்மார்க்கில் பல குறும்படங்களை தயாரித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு “தொண்டன்” என்ற தொலைக்காட்சி படத்தை நையாண்டி மேளம் புகழ் தயா, மற்றும் குணா, சுதா ஆகியோர் நடிப்பில் தயாரித்து வெளியிட்டார்.

2010 ஆம் ஆண்டு “மன்னிப்பாயா” என்ற படத்தை பிரியாலயம் துரை, லண்டன் அங்கிள் கிரி, லுமினா மற்றும் பலரின் நடிப்பில் இசையமைத்து, இயக்கி, தயாரித்துள்ளார்.

2013 இல் சென்னை வந்து “இரு கில்லாடிகள்” என்ற முழுநீள திரைப்படத்தை இசையமைத்து, இயக்கி, தயாரித்துள்ளார். வெண்ணிற ஆடை மூர்த்தி உட்பட பிரபல நடிகர்களும் புதுமுகங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இன்றும் இவரது திரைபயணம் தொடர்கின்றது.

Post a Comment

Powered by Blogger.