Halloween party ideas 2015
.

தமிழ்த் தேசிய இனம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலையானது “திரிசங்கு சுவர்க்கம்” என்ற அடைமொழியினால் வெளிப்படுத்தக் கூடிய இரண்டும் கெட்ட நிலை என்பதைப் பல செயற்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன.

நல்லாட்சி என்ற கோதாவில் அரசுக் கட்டேறியுள்ள கூட்டரசாங்கமானது தனது சகல வலுவையும் பயன்படுத்தி சர்வதேச சமூகத்தைத் திசைதிருப்பும் முயற்சிகளில் வெற்றி கண்டு வருகின்றது.

சிறீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட பிரேரணையை தானும் ஆதரித்தததன் ஊடாக சர்வதேச சமூகத்தினை திசைதிருப்பும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அவ்வாறு ஆதரவு தெரிவித்ததுடன் நிற்காமல் அப்பிரேரணையில் முன்மொழியப்பட்ட பல விடயங்களை நிறைவேற்றவும் உடன்பட்டது தற்போதைய அரசு.

அதேவேளை ஐக்கியநாடுகள் சபைக்கு வெளியே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் மீது செல்வாக்குச் செலுத்தத் தக்க நாடுகளுடன் நடைபெற்ற தனிப்பட்ட பேச்சுக்களின் போது கூட்டரசானது ஸ்திரமற்ற நிலையில் இருப்பதால், அவ்வரசைக் காப்பாற்றிக் கொண்டால் மட்டுமே மேற்குலகுடன் பொருந்திப் போகத்தக்க அரசு சிறீலங்காவில் நிலைத்திருக்கும் என்பதும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை மெதுவாகத் தீர்த்து வைக்கும் முயற்சிகள் எண்ணிக்கையில் பெருத்த சமூகத்தை அசூசைக்கு உள்ளாக்காமல் நடைபெறும் என்பதையும் அரசு வெளிப்படுத்தி தம்மீது மேற்குலகால் ஏற்படுத்தத்தக்க அழுத்தங்களையும் தற்போதைய அரசு குறைத்துக் கொண்டது.

அதன்பின்னரே சர்வதேசத்தில் பேசும் போது சிறீலங்கா அரசின் பேசவல்ல அதிகாரமுடையோர் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாகப் பேசிவந்தாலும் கூட அவைசார்ந்த எந்தச் செயற்பாடுகளையும் உள்நாட்டில் முன்னெடுக்கத் தவறி வருவதை அல்லது அவ்வாறு முன்னெடுக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் காணலாம்.

இதனைப் புரிந்துகொள்வதற்கு ஐநாவில் சிறீலங்கா அரசு உடன்பட்ட பல விடயங்களில் இரண்டு விடயங்களான பயங்கரவாதத் தடைச்சட்டதின் நீக்கம், செயற்றினற்ற காணாமலாக்கப்பட்டோரைக் கண்டறியும் சனாதிபதி ஆணைக்குழுவான பரணகம ஆணைக்குழுவிற்குப் பதிலான புதிய வகை அனுகுமுறை ஆகிய இரண்டு தொடர்பாகவும் அரசின் உள்நாட்டு நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்தாலே போதுமானது.

உலகில் எந்வொரு நாட்டிலும் கொண்டு- வரப்படாத, மனித உரிமைச் சட்டங்களை கடுமையாக மீறும் பயங்கரவாதத் தடைச்சட்டமே சிறீலங்காவில் தற்போதும் அமுலில் உள்ளது. ஆனால் அந்தத் தடைச்சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என ஏற்றுக்கொண்ட சிறீலங்கா அரசானது அம்மாற்றத்தைக் கொண்டுவரும் செயற்பாடுகளை ஆமை வேகத்தில் நிகழ்த்திவருகின்றது.

இதோ கொண்டு வருகின்றோம் என அடிக்கடி ஊடக அறிக்கைகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இம்மந்தகதிச் செயற்பாடானது சிறீலங்காவின் வலுமிக்க கூட்டு எதிரணியானது அச்சட்டத்தின் மாற்றத்திற்கு எதிராகச் சிந்திக்கவும் செயற்படவும் போதுமான கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

தற்போது இச்சட்டத்தை நீக்க அல்லது மாற்ற முயற்சிப்பதானது தமிழீழம் மலர்வதற்கான முதற்படி என்ற அறிக்கைகளை விடும் அளவிற்கு கூட்டு எதிரணியை தயாராக்கி விட்டுள்ளது.

அதே போலவே காணாமலாக்கப்பட்டோரைக் கண்டறியும் ஆணைக்குழுவானது தனது அமர்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருவதுடன் காணாமலாக்கப் பட்டோரைக் கண்டறியும் செய்ற்பாட்டை விடுத்து அவ்வாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நிவாரணங்கள் வேண்டுமா என்பதை அறிய முற்பட்டுள்ளது.

சர்வதேசத்திடம் சிறீலங்கா அரசு தான் செய்வேன் எனப் பல விடயங்களை ஏற்றுக்கொண்டபோது உள்நாட்டுத் தமிழ் மக்கள் சொர்க்கம் புகத் தயாராகி மண்ணிலிருந்து பறக்கத் தொடங்கினர்.

ஆனால் பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களின் இந்த மனோரதம் மண்ணிலும் இன்றி விண்ணிலும் இன்றி இடைநடுவில் நிற்கின்றது. இந்த ஏமாற்றத்திற்கு எதிராகப் போரிட முற்படும் மக்களின் முயல்வுகளையும் அடக்கி வாசிக்கத் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் முயல்கின்றனர்.

”தற்போதுள்ள அரசைக் குழப்பாதீர்கள் – கப்பலைக் கவிழ்க்காதீர்கள்” என அவர்கள் மக்களின் திரிசங்கு நிலையைத் தொடர்ந்தும் பேண முயற்சிப்பதை விடுதலை கோரி உண்ணாநோன்பிருப்போரைப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியிருப்பதில் இருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

– மலைமுரசு (திருமலையிலிருந்து வெளியாகும் வாராந்த பத்திரிகை)

Post a Comment

Powered by Blogger.