Halloween party ideas 2015
.


சினிமா ஒரு கலர்புல்லான உலகம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும். ஆனால், சற்று உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும், மார்க்கெட் இருக்கும் வரை மட்டுமே இங்கு மனிதர்களாக நடத்தப்படுவார்கள். பீல்ட் அவுட் என்று சொல்லப்படும் வார்த்தை ஒருவரின் மீது வந்துவிட்டால் அவரின் நிழல் கூட அவரை விட்டு விலகிவிடும்.

நிறைய பணம், சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நாம் நினைக்கலாம், ஆனால், மன அழுத்தம், குடும்ப பிரச்சனை பண பற்றாக்குறை என சமீப காலமாக நாம் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என நினைக்கும் பலர் தற்கொலை என்ற முடிவை தேடி வருகின்றனர்.

படாபட் ஜெயலட்சுமி

யார் இவர்? என்று இன்றைய தலைமுறையினர் கேட்கலாம், சூப்பர் ஸ்டார் நடித்த முள்ளும் மலரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த படாபட் ஜெயலட்சுமி, இது மட்டுமின்றி ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை படத்திலும் நடித்தவர், இப்படி உச்ச நடிகர்களுடன் நடித்தாலும் ஒரு நாள் சடலமாக மட்டுமே இவர் கண்டெடுக்கப்பட்டார். இவர் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதே தற்போது வரை மர்மமாக உள்ளது.

ஷோபா

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் அச்சானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்து பெயர் பெற்றவர். பசி படத்திற்காக தேசியவிருது பெற்ற இவர் இயக்குனர் பாலு மகேந்திராவை திருமணம் செய்துக்கொண்டார். இவர் பாலு மகேந்திரா இயக்கத்தில் மூடு பனி படத்திலும் நடித்திருந்தார். ஆனால், ஒரு சில குடும்ப பிரச்சனைகளால் 17 வயதிலேயே தற்கொலை செய்துக்கொண்டார். இவரின் தற்கொலையும் இன்று வரை மர்மமாக தான் உள்ளது.

திவ்யா பாரதி

நிலா பெண்ணே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானாலும் ஒரு சில தென்னிந்திய படங்களில் மட்டுமே தான் தலை காட்டினார். ஆனால், பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர். சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெரப் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் ஒரு நாள் மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் பிணமாக தான் கண்டெடுக்கப்பட்டார். எத்தனை முன்னணியில் இருந்தாலும் மன அமைதி ஒன்று வேண்டுமல்லவா???.

சில்க் ஸ்மிதா

ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையே உலுக்கிய ஒரு தற்கொலை தான் சில்க்கின் மரணம். தென்னிந்தியாவில் யாரும் இதுவரை இப்படி ஒரு கவர்ச்சியின் உச்சத்தை தொட்டதில்லை, பாலிவுட் நடிகைகளே அசந்து பார்த்த தருணம், ஆனால், படத்தை தாண்டியும் சில்க்கின் நிஜ வாழ்க்கையிலும் பல இன்னல்கள் அவரை சூழ்ந்தது, வாழ்வில் நரக வேதனையை அனுபவித்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாமல் தன் உயிரை தானே மாய்த்துக்கொண்டார்.

விஜி

தமிழ் சினிமாவில் கோழி கூவுது படத்தின் மூலம் அறிமுகமானவர், கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்தவர், இதில் மிஸ்டர் பாரத், சூரியன், உழைப்பாளி ஆகிய படங்களும் அடங்கும், ஒரு முன்னணி இயக்குனர் காதல் வலையில் விழ வைத்து இவரை ஏமாற்றியதால் இவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது.

மோனல்

சில்க்கின் தற்கொலைக்கு பிறகு இந்திய சினிமாவில் பல தற்கொலைகள் நடந்தாலும், சிம்ரனின் தங்கை, பிரபு, பிரபுதேவா, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை என மோனலின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பணத்திற்கு பஞ்சமே இல்லாத குடும்பம் அப்படியிருந்தும் ஏன் இந்த முடிவு என்றால் ஒரு நடிகரின் மீது கொண்ட காதல், பின்னாளில் தோல்வி என தற்கொலை செய்துக்கொண்டார்.

ப்ரேத்யூசா

கடல் பூக்கள், சூப்பர் குடும்பம் என பல படங்களில் நடித்தவர் ப்ரேத்யூசா, தமிழ் சினிமாவில் இரண்டாம் கட்ட நாயகிகளில் முன்னணியில் இருந்தவர். ஆனால், இவர் காதலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

குணால்

மும்பையில் ஒரு முன்னணி ஹீரோ அப்பார்ட்மெண்டில் தற்கொலை என ஒரு செய்தி, ஏதோ வட இந்திய நடிகர் என்று நினைத்து பார்த்தால், காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே கலக்கிய குணால். திருமணமாகி வேறு ஒரு பெண்ணுடன் காதல் இப்படி பல குடும்ப பிரச்சனை கடைசியில் இவர் கழுத்தை நெருக்கியது.

ஜியா கான்

பாலிவுட்டின் மிகப்பெரிய ஹிட் படமான கஜினியில் அமீர் கானுடன் நடித்தவர் ஜியா கான். தன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட காதல் பிரச்சனையால் வழக்கம் போல் மும்பை அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தற்கொலை செய்து பிணமாக கிடந்தார்.

டோனி ஸ்காட்

ஆஸ்கர் விருதுகளை அறுவடை செய்த கிளாடியேட்டர் படத்தின் இயக்குனர் ரெட்லீ ஸ்காட்டின் சகோதரர் தான் இந்த டோனி ஸ்காட் (Tony Scott). இவரும் Loving Memory, Enemy of the State, Man on Fire என்ற பல ஹிட் படங்களை எடுத்தவர். ஆனால், மன அழுத்தம் காரணமாக Vincent Thomas Bridge-லிருந்து கீழே குதித்து இறந்தார்.

ராபின் வில்லியம்ஸ்

தன் நகைச்சுவை நடிப்பால் உலக சினிமா ரசிகர்களையே சிரிக்க வைத்தவர், நம்மூர் ரசிகர்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால், ஜுமான்ஜி படத்தின் ஹீரோ. இவரின் பல படங்களை கோலிவுட்டில் கமல் படங்களாக பார்க்கலாம். தன் நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைத்த இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தேடிக்கொண்டது தற்கொலை மட்டுமே.

இவர்களை விட மிகவும் பாவப்பட்டவர்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள் தான், சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலும் காதல், குடும்ப பிரச்சனை மட்டுமே தற்கொலைக்கு காரணமாக இருந்தது, ஆனால், நாடக நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பணமே முதல் காரணம். ஏனெனில் ஒரு தொலைக்காட்சியில் நடித்தால், வேறு எந்த தொலைக்காட்சிக்கும் நடிக்க செல்லக்கூடாது என்ற அக்ரிமெண்டால் பலர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால், கடந்த சில வருடங்களில் மட்டும் வைஷ்ணவி, ஷோபனா, பாலமுரளி மோகன் (ஹார்லிக்ஸ் மாமா) வரை பல சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்கொலை செய்துள்ளனர். அதிலும், தமிழ் சினிமா ரசிகர்கள் முதல் சின்னத்திரை ரசிகர்கள் வரை பலருக்கும் அறியப்பட்ட முகம் சாய் பிரசாந்த். தன் மிமிக்கிரி கலகல பேச்சால் அனைவரையும் ரசிக்க வைத்த இவர், நிதி நெருக்கடியால் சில வருடம் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இவை காலப்போக்கில் குடும்ப பிரச்சனையாக மாற, இந்த இளம் வயதிலேயே ரக்‌ஷிதா என்ற குழந்தை இருந்தும் யாரை பற்றியும் கவலைப்படாமல் இறந்து விட்டார்.

அனைவரும் இந்த சோகத்தில் இருந்து மீளாத நிலையில் இன்று ஆந்திர மீடியாவுலகின் ஸ்டார் தொகுப்பாளர் நிரோஷா தற்கொலை பலரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்படி தொடர் தற்கொலைக்கு காரணம், காதல், குடும்ப பிரச்சனை, நிதி நெருக்கடி என எத்தனை கதை சொன்னாலும், நாம் ‘இவர்கள் நடிகர்கள் தானே, இதற்காக தான் தற்கொலை செய்தார்கள்’ என ஒரு புதுக்கதையை உருவாக்கி அவர்களின் உணர்வுகளையும் கொலை செய்கிறோம். நடிகர், நடிகைகள் சினிமா வாழ்க்கை மட்டுமே கலர்புல்லாக தெரியும், அவர்கள் படும் கஷ்டம் இங்கு பலரும் அறியமாட்டார்கள். ஆனால், எந்த ஒரு பிரச்சனைக்கும் எப்போதும் தற்கொலை தீர்வாகாது. இனி வரும் காலங்களிலாவது இதுப்போல் தவறான முடிவுகளை யாரும் எடுக்காமல் இருக்க, திரையுலகம் கண்டிப்பாக சில முடிவுகளை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!.

Post a Comment

Powered by Blogger.