Halloween party ideas 2015
.

முகநூலில் தோழர் எவிடென்ஸ் கதிர்:
தலித் இளைஞர் பத்ரகாளியும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு ஸ்ரீபிரியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு. ஸ்ரீபிரியாவை அவரது குடும்பத்தினர்கள் கடுமையாக அடித்து சித்திரவதை செய்தனர். வேறு வழியில்லாமல் காதலர்கள் இருவரும் 29.09.2009 அன்று திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன் உங்கள் இருவரையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். உயிருக்கு பயந்த ஸ்ரீபிரியா தமக்கும் தம்முடைய கணவர் பத்ரகாளிக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் 05.10.2009 அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர் ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசனும் அவரது குடும்பத்தினர்களும். காவல்நிலையத்தில் சீனிவாசன், இனி நாங்கள் ஸ்ரீபிரியாவையும் பத்ரகாளியையும் தொந்தரவு செய்ய மாட்டோம். ஸ்ரீபிரியா என் மகளல்ல. அவள் இறந்துவிட்டாள். ஆகவே அவள் கழுத்தில் இருக்கக்கூடிய நகைகளை கழட்டிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று கூற, ஸ்ரீபிரியாவும் நகைகளை கழட்டி கொடுத்துள்ளார். 

ஆனாலும் தினந்தோறும் தொலைபேசியில் பத்ரகாளி மிரட்டப்பட்டார். இதனால் பயந்து போன ஸ்ரீபிரியாவும் பத்ரகாளியும் பழனியை விட்டு மடத்துகுளம் பகுதியில் குடியேறினர். அவர்களது வீட்டை கண்டுபிடித்த ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், உறவினர்கள் ராஜ்கண்ணன் (எ) ஆசைத்தம்பி, பன்னடியான் ஆகிய மூவரும் 04.11.2009 அன்று மதியம் 2.00 மணிக்கு வந்துள்ளனர். வருகின்றபோது ஸ்ரீபிரியாவிற்கு பழமும் பூவும் வாங்கி வந்துள்ளனர். அப்போது வீட்டில் பத்ரகாளி இல்லை. அங்கிருந்த ஸ்ரீபிரியாவிடம் நம்ம சாதி என்ன? நீ கல்யாணம் செய்திருக்கிறாயே அவன் சாதி என்ன? கீழ்சாதி பையனுடைய குழந்தை உன் வயிற்றில் வளரலாமா? மரியாதையாக எங்களுடன் வந்துவிடு. உன்னால் நம்ம சாதி கௌரவம் கெட்டுப்போய்விட்டது என்று கூறியிருக்கின்றனர். அதற்கு ஸ்ரீபிரியா மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் வீச்சரிவாளால் ஸ்ரீபிரியாவை வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவத்திற்கும் சங்கர் படுகொலை சம்பவத்திற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. இரண்டும் மடத்துக்குளம் பகுதியில் நடந்திருக்கிறது. ஸ்ரீபிரியாவும் சங்கரின் மனைவி கௌசல்யாவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சங்கரும் பத்ரகாளியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் நடந்த திருமணம், காவல்துறையில் நடந்த பேச்சுவார்த்தை, பெண்ணின் வீட்டாரின் மிரட்டல், படுகொலை எல்லாம் ஒன்றாகவே நடந்திருக்கிறது. முதல் சம்பவத்தில் தம் மகள் கொல்லப்பட்டார். இரண்டாம் சம்பவத்தில் தம் மகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர் கொல்லப்பட்டார்.

இதில் கொடுமை என்னவென்றால் ஸ்ரீபிரியா படுகொலை வழக்கினை நீதிமன்றம் அடுத்த வருடமே உண்மை நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்துவிட்டது. நான் பத்ரகாளியிடம் பலமுறை கெஞ்சினேன். மேல்முறையீடு செய்து இந்த வழக்கினை நடத்தலாம் என்று கேட்டுக் கொண்டேன். பத்ரகாளி உயிர் மீது உள்ள அச்சத்தினால் வழக்கை நடத்த முன்வரவில்லை. ஆனால் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வழக்கை நடத்த உறுதியாக இருக்கின்றனர் அவரது குடும்பத்தினர். கண்டிப்பாக குற்றவாளிகள் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கை உள்ளது. 

சாதிய வறட்டு கௌரவக் கொலைகளுக்கு ஏன் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்றால், ஒரு வேளை பையன் தலித்தாக இருக்கிறபட்சத்தில் அவரது குடும்பத்தினர் வழக்கை நடத்துகின்றனர். தம்முடைய பெண்ணை கொலை செய்த வழக்கில் யாரும் எதிர்த்து வழக்கை முன்வருவதில்லை. இதில் ஒரு இயக்கமோ அமைப்போ வழக்கை நடத்துவதும் இயலாத காரியமாக இருக்கிறது. ஆகவே இதுபோன்று மகள்களை குடும்ப உறுப்பினர்களே கொல்கிற வழக்கில் அரசு புகார்தாரராக இருப்பதனால் அவர்களை எளிதாக குற்றவாளி தரப்பினர் விலைக்கு வாங்கிவிடுகின்றனர். சென்னையில் உள்ள தலித் இளைஞர் டேனியல் மட்டும் தான் தன்னுடைய காதல் மனைவி அவரது குடும்பத்தினரால் கொல்லப்பட்டதற்கு தொடர்ந்து 8 ஆண்டு காலம் சட்ட ரீதியாக போராடி வருகிறார். 

அதுமட்டுமல்ல சாதி வறட்டு கௌரவக் கொலைகளில் சாட்சிகளை கண்டறிவதில் ஏகப்பட்ட சிரமங்கள் உள்ளன. அதனால் தான் இதற்கென்று தனி சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2007ம் ஆண்டு முதல் இதுவரை சாதிய கௌரவக் கொலைக்கு எதிராக 160 சம்பவங்களில் சட்டத் தலையீடு செய்திருக்கிறோம். அவற்றை கொண்டு செல்வது பெரும் போராட்டமாக இருக்கிறது. ஆயினும் நீதியின் மீதான நம்பிக்கை குறைந்தபாடில்லை. இதற்காக போராடுபவர்கள் தங்களுக்கான நீதிக்காக மட்டும் போராடவில்லை. மற்றவர்களுக்கு அநீதி நடக்கக்கூடாது என்பதற்காக போராடுகிறார்கள். அந்த தியாக குடும்பத்தினரோடு இணைந்து போராடுவது பெரும் செயலாக கருதுகிறோம். நீதி கிடைக்கிறதோ இல்லையோ நீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் இப்போதைய முதல் தேவை. பயணிப்போம்.

Post a Comment

Powered by Blogger.