Halloween party ideas 2015
.

தமிழினி
விடுதலைக்கு விழுதாய் நின்றவளே!

போர்தின்ற நிலத்தில் பொய்யான வாழ்வு கண்டு
உண்மை சொல்ல உன்வாய் துடித்திருக்கும்
உரத்து சொல்லி நின்றால் இருந்தகுரலையும் எப்போதோ இழந்திருப்பாய்.

ஆனால்
எருக்கலம்செடிகளுக்கு விருட்சங்களின் விளக்கம் எப்படி தெரியும்?
அவர்கள் இல்லை என்ற இறுமாப்பில்
எல்லாம் நடக்கிறது.

இந்தமண் சொந்தமண் எனச்சொல்லி
வந்தபடை எதிர்க்க வரியோடு நின்றவளே
கந்தகம் கொண்டு கரியவர் போகையில்
கரமசைத்து விட்டவள் நீ!

துணைவன் துரோகம் செய்தபோது
வேண்டாம் இனி அவன் என விலகிய
அக்னிகளை கண்டவள் நீ
ஆனால் பார் தோழி
மீண்டும் துரோகம் உன் வாழ்வில்.

இருந்தவை எல்லாம் இல்லாதபோது
விசும்பல் வரும்
வேதனை வரும்
வெம்மை சூழும்
கைவிட்டு விட்டாயே கடவுளே என
கதறி அழும்

இது துக்கங்கள்
ஆருக்கு என்று இல்லாமல்
அனைத்துக்கும் வரும்

ஆனால்
உன் விம்மலை விற்று
விலைபேசி நிற்கின்றார் தோழி!

காலப்பெருவெளியில் நீ கரம்பிடித்த
ஈழத்து விடுதலையை எடுத்தெறிந்து பேசுதற்கு
நாலு எழுத்துக்களை நன்றாக போட்டு
கால்குறுக்கே போட்டு கவிட்டோரின்
கருத்துக்களை இடைச்செருகி
கூர்வாளின் கருத்துக்களாய்
கூவி விற்கின்றார்.

தமிழினி என்ற உன்பெயர் வேண்டும்
வரிபோட்ட உன்உடுப்பு படம் வேண்டும்
ஆனால் நீ நடந்த
போராட்டம் ஒரு கோளாறு
இப்படி எல்லாம் இடைச்செருகி
ஏலம்போட்டு விற்கின்றார்

நாளை வரும்
முடிமக்கள் காப்பியக்காலம் போய்
குடிமக்கள் காப்பியங்கள் வெளித்தெரியும்

இழந்தவன் எழுவதற்கும்
அதனை எழுதுவதற்கும்
காலம் வரும்
காத்திருப்பாய் தோழி!

அப்போது
உந்தன் நிமிர்வும்
உடையாத உறுதியும்
வெளித்தெரியும்
காத்திருப்பாய் தோழி!!

– கீதன் இளையதம்பி –

Post a Comment

Powered by Blogger.