Halloween party ideas 2015
.

சென்னை அடையாறு ஸ்டேட் வங்கியில் பணி புரிபவர் எம்.கவுரிசங்கர். இவர், ஸ்டேட் வங்கி எஸ்.எஸ்டி. ஊழியர்கள் நலச் சங்க உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், வங்கியின் அலுவலக அறையில் டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டியுள்ளார்.

இதையடுத்து, அவரை பணி நீக்கம் செய்து கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி வங்கி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு, மத்திய அரசு தொழிலாளர் தீர்ப்பாயத்தின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கவுரிசங்கரை பணியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வங்கி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பணி நீக்கம் செய்த உத்தரவு சரியானதுதான் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கவுரிசங்கர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், டி.அரிபரந்தாமன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

டாக்டர் அம்பேத்கர் படத்தை வங்கி அலுவலக அறையில் வைத்தது சட்டவிரோதம் கிடையாது.

இந்த விஷயத்தை வங்கி உயர் அதிகாரிகள் முறையாக கையாளவில்லை.

எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்தச் செய்தியை நினைக்கும் பொழுது அதிகார வர்க்கத்தின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்!

சில நீதிபதிகளின் பார்வையும் எந்தத் திசையில் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

2006ஆம் ஆண்டில் ஸ்டேட் வங்கியில் இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பியான அண்ணல் அம்பேத்கர் படத்தை வைத்ததற்காக அந்த வங்கியில் பணியாற்றிய ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டு 2016இல் தான் நீதிமன்ற உத்தரவுப்படி மறு பணியமர்த்தம் செய்யப்படுகிறார் என்றால், கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்டவரின் மனநிலை எந்த அளவு பாதிக்கப்பட்டு இருக்கும்?

வருமான இழப்பின் காரணமாக அந்தக் குடும்பம் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியான அண்ணல் அம்பேத்கர் படம் வங்கியில் மாட்டப்படுவதற்கான அரசு ஆணை இருக்கவே செய் கிறது.

அதன்படி படம் வைத்தால், அது எப்படி குற்ற செயலாகும்?

உரிய அனுமதி பெற்று வைக்கவில்லை என்பது அவ்வளவுப் பெரிய குற்றமா? வேலையை விட்டு நீக்க வேண்டி அளவுக்குச் செய்யப்பட்ட மாபெரும் குற்றம் என்று வங்கியின் அதிகாரிகள் முடிவுக்கு வந்து விட்டார்களா?

அது சரி அரசின் ஆணைப்படி வங்கி அதி காரி அம்பேத்கர் சட்டத்தை வங்கியில் ஏன் மாட்ட வில்லையாம்?

அதே வங்கிகளில் கடவுளர்களின் படங்களை மாட்டி வைத்துள்ளார்களே, எந்த அரசு உத்தரவின்படி அவை மாட்டப்பட்டுள்ளன?

மக்களுக்குச் சேவை செய்த - அரசமைப்புச் சட்டத்தையே உருவாக்கிய குழுவின் தலைவருடைய படம் வைப்பது குற்றமாம் (இவ்வளவுக்கும் அம்பேத்கர் படம் வைக்க அரசின் ஆணை இருக்கவே செய்கிறது).

மதச் சார்பற்ற அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதச் சார்புடைய கடவுள் படங்களை மாட்டுவது குற்றமில்லையாம்.

இந்த நிலை எப்படி தொடர்கிறது? அதிகார வர்க்கத்தின் மனப்பான்மை எந்த நிலையில் உள்ளது? என்பதை இதன் மூலம் நன்றாகவே அறிய முடிகிறது.

ஒன்றை வெளிப்படையாகவே சொல்லியாக வேண்டும். வங்கிகள் இன்னும் உயர் ஜாதியினரின் ஆதிக்கக் கிடங்காகவே இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களை எந்த பார்வையில் பார்க்கின்றனர் என்பதுதான் முக்கியமாகும்.

விவேகானந்தர் பெயரிலும், வால்மீகியின் பெயரிலும், அரே கிருஷ்ணா அரே ராமா என்ற பெயரிலும் அமைப்புகள் இருந்தால் குற்றமில்லை; அவை அதிகாரப் பூர்வமானவை;

அதே நேரத்தில் பெரியார் அம்பேத்கர் பெயரில் வாசகர் வட்டம் வைத்தால் சட்ட விரோதம் என்று நினைக்கிற மனப்பான்மையை சென்னை அய்.அய்.டி.யில் சில மாதங்களுக்கு முன் பார்த்தோமா இல்லையா?

ஸ்டேட் வங்கியில் அம்பேத்கர் படத்தை மாட்டி யற்காக பழி வாங்கப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட எம். கவுரிசங்கருக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஈடு செய்யப்பட்டாக வேண்டும்.

இதற்குப் பிறகாவது அரசு வங்கிகளுக்குத் தேவை யான ஆணைகளும், சுற்றறிக்கைகளும் தெளிவாக உரிய காலத்தில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். சோதனைக்கு வரும் மேலதிகாரிகளும் அவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

கலி. பூங்குன்றன்

Post a Comment

Powered by Blogger.