Halloween party ideas 2015
.

01.03.2016   அன்று இரவு தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து விவாத அரங்கைப் பார்த்துக் கொண்டிருந்த நான் ஓரிடத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். பார்த்த பலரும் அந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

விஜயகாந்த்தின் தே.மு.தி.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து உரையாடல் நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் அருணன், வானதி சீனிவாசன், சீமான், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்குபெற்ற அவ்விவாதத்தைப் பாண்டே நடத்திக் கொண்டிருந்தார்.


வரும் தேர்தலில்  மக்கள் நலக் கூட்ட்டணியை விடக் கூடுதலாக  வாக்குகள் வாங்கவில்லையென்றால், தன் கட்சியைக் கலைத்துவிட்டு சி.பி.எம். கட்சியில் சேர்ந்து விடுவதாகச் சீமான் அறைகூவல் விட்டார். அந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதாக அருணன் கூறினார். இப்படித்தான் 'நகைச்சுவையாக' அந்த உரையாடல் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு கட்டத்தில், சீமான், பேராசிரியர் அருணனைப் பார்த்து, "யோவ், லூசு மாதிரிப் பேசாதே" என்றார். யாரும் எதிர்பார்க்கவில்லை. பொது இடத்தில், லட்சக் கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியில், ஒரு கட்சியின் தலைவர் இப்படிப் பேசுவார் என்று நினைத்தும் பார்க்க முடியவில்லை. அருணனும் சினம் கொண்டு, "டேய், நீதாண்டா லூசு" என்று திருப்பிச்  சொன்னார். மக்கள் இனி நம்மையெல்லாம் எப்படி மதிப்பார்கள்?

பொது விவாதங்களில் அநாகரிகத்தின் உச்சம் தொட்ட நிகழ்வு  என்று இதனைச் சொல்லலாம். பேராசிரியர் அருணன் வெளியிட்ட கருத்துகள் சில எனக்கும் உடபாடில்லாதவைதான். ஆனாலும் அவருடைய கல்வித் தகுதி, ஆய்வுத்  திறன் எல்லாம் எவ்வளவு உயர்ந்தவை. தமிழகத்தின் இரு நூற்றாண்டு வரலாறு, தமிழர் தத்துவ மரபு, காலந்தோறும் பார்ப்பனியம், கடவுளின் கதை என்று எவ்வளவு அறிவார்ந்த நூல்களை அவர் தமிழ் மண்ணுக்குத் தந்துள்ளார். அவரைப் பார்த்து தடித்த  சொற்களைப் பயன்படுத்துவது எவ்வளவு இழிவானது.

ஒருவேளை, அருணனுக்குப் பதிலாக , ஒன்றுமே படிக்காத இன்னொருவர் அந்த இடத்தில்  அமர்ந்திருந்தாலும் உரிய மதிப்போடு பேசுவதுதானே "தமிழர் பண்பாக" இருக்க முடியும். தமிழரை விடுங்கள், மனிதப் பண்பு அதுதானே!

ஆனால்   "நாம் தமிழர்" பண்பாடு இதுதான் போலிருக்கிறது.  தோழர் அருணனும் தன்  தரத்தை விட்டுக் கீழே இறங்கிப் பேசியதற்குப் பதிலாக, அந்த அரங்கை விட்டு வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும்.

சீமான் அல்லது அவர் சார்பாக தந்தி தொலைகாட்சி வருத்தம் தெரிவித்தால் நாகரிகம் சற்றுப் பிழைக்கும்!  
http://subavee-blog.blogspot.in/2016/03/5.html

Post a Comment

Powered by Blogger.