Halloween party ideas 2015
.


முதன்மை பட்டி
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!
சாதி வன்மத்தைத் தூண்ட தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தினமலரில் “அவசரம் வேண்டாம் பெண்களே!” என்ற தலைப்பில் ” விசித்திர சித்தன், சமூக ஆர்வலர்” என்ற பெயரில்வெளிவந்துள்ள கட்டுரை இது. எழுதியவர் உண்மையிலே சமூகத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தால் உண்மையான பெயரைப் போட்டு எழுதியிருக்க வேண்டும். விசித்திர சித்தன் என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதுவது இப்படி விசித்திரமானதாகத்தான் இருக்கும். எத்தனை வன்மம். வெகுஜென நாளிதழ் என்ற போர்வையில் சாதிய வன்மத்தை, வர்ணாசிரமத்தை நிலைநிறுத்த கதை சொல்லுகிறது தினமலர்.
*****
*****
எடுத்த எடுப்பிலே சாதிய படுகொலைகளை ‘விவகாரக் கொலை’கள் என்கிறது தினமலர். என்ன விவகாரம் என்றால் அழுக்கும் நாற்றமுமான வீட்டில் வாழும் ஒருவனுக்கு வசதியாக வாழும் எண்ணம் வருகிறதாம். கூலிங்கிளாஸும் ஜீன்ஸும் மாட்டிக்கொண்டு கல்லூரி வாசலில் நில் என்று அவனுடைய ‘தலைவர்’ ஐடியா கொடுக்கிறாராம். உடனே அப்படி செய்து அவனைப் பார்த்து மயங்கும் பெண், அவளுடைய உயர்ந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நாற்றம் பிடித்த வாழ்க்கைக்கு வருகிறாளாம்.
அந்தப் பையன்கள் எல்லாம் பிறக்கும்போதே கிரிமினல்களாகப் பிறந்தவர்களா என்ன? தரத்தை உயர்த்திக் கொள்ள பணக்காரப் பெண்களைத் தேடுவதே வேலையா அவர்களுக்கு? ஒடுக்கப்பட்டவனுக்கு அடுத்த வேளை உணவே பிரச்சினையாக இருக்கும் போது, வீட்டுக்கு இண்டீரியர் டெகரேஷன் செய்து வாழமுடியுமா? அவனை ஒடுக்கி, எல்லா மட்டத்திலும் தீண்டத்தாகதவனாக வைத்திருந்ததே நீங்கள் தானே? நீங்கள்தானே எல்லா சலுகைகளையும் முன்னேற்றங்களையும் உடனே அனுபவிக்கிறீர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இந்த தலைமுறை இளைஞர்களுக்குத்தான் படிப்பு வாய்த்திருக்கிறது.
நீங்கள் சொல்வதுபோல எந்த இளைஞனும் சும்மா சுற்றிக்கொண்டிருக்கவில்லை. பட்டப்படிப்பு படிப்பவர்கள், சமூகத்தைத் தாண்டி கல்வி நிறுவனங்களில் சக மனிதர்களாக பார்க்கப்படும் சூழல் இருப்பதால்தான் அதுவரை தீண்டப்படாத சமூகமாகப் பார்க்கப் பட்ட ஒரு ஆண் மீது, அன்பு கொள்கிறாள் ஒரு பெண். இது இருவருடைய தனிப்பட்ட முடிவு. இதில் மூக்கை நுழைக்கும் அவசியம் ஏன் ஏற்படுகிறது என்றால், பெண்ணை ஒரு உடமையாகப் பார்க்கும்போதுதான்.
பெண் படிக்கக்கூடாது; பெண் படிதாண்டக் கூடாது; பெண்ணுக்கு சுயமாக சிந்திக்கும் அறிவு இல்லை(அதே வயதில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதி ஆண் கிரிமினலாக யோசித்து திட்டமிடுகிறான். அதே நேரத்தில் பெண் அறிவற்றவளாக, நல்லது கெட்டது தெரியாதவளாக இருக்கிறாள்); பெண், அவள் வீட்டு ஆண்கள் சொல்லும்படிதான் நடக்க வேண்டும்; அதாவது ஒரு பொம்மையாக இருக்க வேண்டும். கடைந்தெடுத்த இந்த பிற்போக்குத் தனத்தைத்தான் பூசி மெழுகி சொல்கிறது தினமலர்.
ஒடுக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை அப்படியேதான் இருக்கும்; அவர்களால் உழைத்து மேலே வர முடியாது என்ற தினமலரில் கட்டுரை எழுதியவரின் உள்மன விருப்பத்தை அறிய முடிகிறது. ‘அப்படியே இருந்து சாவுங்கடா’ என சாதிய மனம் வெதும்பி உள்ளுக்குள் ஏளன சிரிப்பு சிரிப்பதை உணர முடிகிறது.
******
இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இன்று சாதிய வன்மம் பேசும் குடும்பங்கள் பெரும்பான்மை வசித்தது ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில்தான். கட்டுரை எழுதியவரின் முன்னோர் எப்படி ஒற்றை அறையில் கூடி அவர்களுடைய சந்ததிகளைப் பெற்றார்களோ அதுபோலத்தான் பெரும்பான்மை சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. டபுள் பெட்ரூம் வீட்டில் வாழ்வதால் கட்டுரையாளருக்கு அந்த விஷயங்கள் மறந்துபோயிருக்கலாம்.
சாதிய வன்மத்துடன் ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் ‘இப்படித்தான்’ என அவர்களை ‘கிரிமினல்களா’க குற்றப்பத்திரிகை வாசிக்கும் தினமலர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதுபோல சட்டம் பாயும் என்று தெரிந்திருப்பதால்தான் இந்தக் கட்டுரையை எழுதிய அந்த கிரிமினல் விசித்திர சித்தன் என்கிற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதியிருக்கிறது.

Post a Comment

Powered by Blogger.