Halloween party ideas 2015
.

சென்னை, மார்ச் 2-
தொலைக்காட்சி விவாதத்தில் பேராசிரியர் அருணனை இழிவுபடுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதற்கும், ஊடக நிறுவனம் அதை விமர்சிக்கத் தவறியதற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:அரசியல், சமூகம், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் பலவகையான கருத்தோட்டங்களையும் மக்களிடையே கொண்டுசெல்வதில் தொலைக்காட்சி விவாதங்கள் இன்று முக்கிய இடம் வகிக்கின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்போர் தங்களுடைய கொள்கை நிலைபாடுகளில் உறுதியாக நிற்கிற அதே வேளையில், மாற்றுக் கருத்துடையோரை மதித்து மரியாதையோடு பேசுகிற பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘தந்தி தொலைக்காட்சியில்’ மார்ச் 1 திங்கட்கிழமையன்று அரசியல் கூட்டணிகள் பற்றிய விவாதத்தில் தமுஎகச கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன், பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன், திமுக சார்பில் சரவணன் தொலைவிலிருந்தபடி ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் சீமான் திடீரென பேராசிரியரை ஒருமையில் பேசத் தொடங்கி, கடைசியில் மிகவும் கீழ்த்தரமான சொற்களைக் கையாண்டார். இதன் மூலம் தனது விவாதத்தரம் எத்தகையது என்பதை அவராகவே அம்பலப்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.சீமான் திரைப்படத்துறையில் முழுமையாக ஈடுபட்டிருந்த நாட்களில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் கலை-இலக்கிய இரவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மேடைகளில் பேசத்தொடங்கியது அவருக்கு ஒரு முக்கிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது என்றால் மிகையல்ல.
பேராசிரியர் அருணன் தலைவராகவும், பின்னர் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டுக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது சங்கத்தின் நிலைபாடுகளுக்கு நேரெதிரான கருத்துகளைக் கூட சீமான் பேசியதுண்டு. அவருடைய கருத்துச் சுதந்திரத்தை மதித்து, அதற்கு இடமளித்த அமைப்பு தமுஎகச. அதற்காக இப்போது அவர் சங்கத்தின் கவுரவத் தலைவர் சொல்லும் கருத்துகளை மறுக்கக்கூடாது என்று யாரும் கூறவில்லை. ஆனால், அப்படி மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதில் ஒரு குறைந்தபட்ச நாகரிகத்தை கடைப்பிடிக்கப்பட வேண்டாமா என்பதே கேள்வி.அரசியல் களத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பேராசிரியர் அருணனோடு கூர்மையாக முரண்படுகிறவர்களும் அவரது ஆழமான ஆய்வுத்திறனை மதிக்கிறவர்களாக, தமிழ் வாசக உலகிற்கு அவர் அளித்துள்ள ஏராளமான முக்கியமான புத்தகக் கொடைகளைப் போற்றுகிறவர்களாக, அவரோடு விவாதிப்பதில் பெருமிதம் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். எதிர்வாதம் செய்கிறவர்கள் சான்றோர்களாக இல்லாமல் எளிய மக்களாக இருந்தாலும் கூட அவர் மதிக்கப்பட வேண்டும் என்பதே உன்னதமான பண்பாடு. இதையெல்லாம் பொருட்படுத்தாத அளவுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவரின் கண்ணை மறைத்தது எது?இது ஒருபுறமிருக்க, சீமான் அவர்களின் தாக்குதல் வரம்பு மீறிச் செல்கிறது என்று பளிச்சென்று எல்லோருக்கும் தெரிந்த நிலையிலும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் குறுக்கிடவே இல்லை. ஒரு பொது மரியாதைக்குக்கூட சீமானின் அத்துமீறிய சொற்களை சுட்டிக்காட்டவோ, தடுக்கவோ முன்வரவில்லை.
பேராசிரியர் அருணன் வேறு வழியின்றி தானே எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தை ஒருங்கிணைப்பாளர் ஏற்படுத்தியது அக்கறையின்மையாலா அல்லது இது நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்திற்குத் துணையாக இருக்கும் என்ற எண்ணத்தாலா என்ற கேள்வியே எழுகிறது. அவரோ, தந்தி தொலைக்காட்சி நிறுவனமோ நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதே ஊடக நெறிக்கு உகந்ததாக இருக்கும். ஜனநாயக இயக்கங்களும், கலை-பண்பாட்டு அமைப்புகளும் சீமானின் வரம்புமீறிய பேச்சையும் ஊடக நிறுவனத்தின் பொறுப்பின்மையையும் விமர்சிக்க முன்வருமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு தமுஎகச அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமுஎகச விமர்சனம்
நன்றி தீக்கதிர்

Post a Comment

Powered by Blogger.