Halloween party ideas 2015
.

பேராசிரியர் மு.நாகநாதன் -அவர்களின் செய்தி
என்றும் நம் நினைவில் நிலைத்து இருக்கும் புரட்சியாளர்கள் பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் வீரச் சாவினைத் தழுவிய நாளில் பலர் தங்களின் புகழஞ்சலியைப் பதிவு செய்துள்ளனர்.
காந்தி -ராஜாஜியின் -பேரன் கோபால கிருட்டிண காந்தி ஆங்கில இந்து ஏட்டில்(23-3-16) பகவத்சிங்கின் வீரம் செறிந்த செயல்களை நினைவுக் கூர்ந்துள்ளார்.
எதிலும் நல்ல அறம் சார்ந்த உணர்வுகள் மேலோங்கி நல்லிணக்கத்தைக் காண வேண்டும் என்று விரும்புபவர் பேரன் காந்தி.
 எனவே தாத்தா காந்தியைப் பேரன் கோபல கிருட்டிண காந்தி பகவத்சிங் விடயத்தில் காபாற்ற முற்பட்டுள்ளாரா?
 ஆனால் நடந்ததுதான் என்ன?பிரித்தானியா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக லாலா  லஜபதிராய் களம் கண்டு, ஊர்வலமாகச் சென்றபோது அன்றைய காவல்துறையினர் அவரது மண்டையை உடைத்தனர்.
 லாலா மருத்துவமனையில் உயிர் இழந்தார். நாடே உணர்வு பிழம்பானது. லாலாவின் மனைவி இந்த அநீதியைத் தட்டிக் கேட்க ஆண்மகன் யாரும் இல்லையா? என்று புலம்பினார்.
அந்த ஊர்வலத்தில் பங்கேற்ற வீர இளைஞன் புறப்பட்டான். களம் கண்டான் போர்மறவன் பகவத்சிங். இதன் தொடர்ச்சியாகப் பல வழக்குகளை பகவத்சிங்கும், அவரது நண்பர்களும் சந்தித்தனர்.
 பகவத்சிங்கின் மீது பொய் வழக்கு புனையப்பட்டபோது சிறந்த வழக்கறிஞரான ஜின்னா மத்திய சட்டமன்றத்தில் -"தீர்ப்பை ஏற்கனவே இங்கிலாந்தில் முடிவு செய்துவிட்டு நீதிமன்ற விசாரனை நாடகத்தை பிரித்தானிய அரசு அரங்கேற்றி வருகிறது. நீதி புதைக்குழிக்கு அனுப்பபடுகிறது "-என்று முழங்கினார்.
 நாடே துடித்தபோது காந்தி அமைதி காத்தார். காங்கிரசு நடத்திய ஏட்டில் எவ்வித செய்தியும் வெளியிடக்கூடாது என்றார்.
தூக்கு தண்டனை கைதியாகச் சிறைக் கொடுமைகளைக் கண்டித்து  பகவத்சிங் உண்ணாநிலை மேற்கொண்டார்.
தற்போது கிடைக்கும் சான்றுகள் அடிப்படையில் காந்தியை விட அதிக நாட்கள் பகவத்சிங்தான் உண்ணாநிலை மேற்கொண்டார்  என்ற  உண்மை சுட்டப்பட்டுள்ளது.
" நான் ஏன்  நாத்திகன் ஆனேன்?"என்ற நூலில் -அவர் தீட்டிய கருத்துகள் -பகுத்தறிவின் தேன் துளிகள்.
அக்காலக்கட்டத்திலயே ஜீவாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு -தந்தை பெரியாரால் வெளியிடப்பட்டது.
 பகவத்சிங்கின் சமத்துவ-நாத்திக நெறிகளைப் பெரியார் வழியில் காங்கிரசும் பின்பற்றியிருந்தால் நாம் சந்தித்து வரும்-அரசியல் -சமுதாய -பொருளாதாரச் சீரழிவுகள் இந்த அளவில் ஏற்பட்டிருக்காது.
 இதைப்பற்றி பகவத்சிங்கே-கணித்துள்ளதுதான்-நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது-
"அம்மா, என்னுடைய நாடு ஒரு நாள் விடுதலை அடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் வெள்ளைத்துரைமார்கள் விட்டுச் செல்லப் போகும் நாற்காலிகளில் பழப்பு நிறத்துரைமார்கள் அமரப் போகிறார்களே என்பது பற்றிதான் எனக்கு அச்சமாக இருக்கிறது. மக்களின் துன்பம் ஓரு போதும் மாறப்போவதில்லை. பழைய முறைகளை முற்றாக அழித்தாலொழிய எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என நான் உறுதியாக நம்புகிறேன்". .. என்று தனது தாயாருக்கு எழுதிய மடலில் கூறிப்பிட்டுள்ளார்.
அய்யகோ! நமது "தேசியத்" திருடர்கள்  எப்போது உண்மையை உணரப்போகிறார்கள்?
எத்தனை காலம்தான் நம்மை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவார்கள்?

Post a Comment

Powered by Blogger.