Halloween party ideas 2015
.

காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளியான கோபால் கோட்சேவை, மாராட்டிய மாநில அரசு அவரது சிறைவாசம் 15 ஆண்டுகள் முடிந்த நிலையிலேயே, 1964ல் விடுதலை செய்தது. இத்தனைக்கும், அவர் பேரறிவாளன் போல், 'நடந்த குற்றத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' என்று மறுத்தவர் கிடையாது. '

தேர்தல் ஆதாயமாக இருந்தாலும் பரவாயில்லை. ஏழு பேர் விடுதலை ஆனால் எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். - இது ஒரு தீவிர தி.மு.க.காரரின் முகநூல் பதிவு.

என்னை தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களை விடுவித்து விடலாம். - இது ஒரு தீவிர பி.ஜே.பி காரரின் கருத்து.

ஆம். தமிழகத்தின் பெருவாரி மக்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

அனைத்து தளங்களிலும் அ,தி.மு.க வை கடுமையாக விமர்சித்து வரும் ஒரு தீவிர தமிழ் தேசிய மூத்த இடதுசாரி ஒருவருடன் பேசி கொண்டிருந்தபோது சொன்னார்,  ஜெயலலிதா எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. அவர் மட்டும் அந்த ஏழு பேரை விடுவித்தால், பெருவாரி தமிழ் சமூகம், அவர் பின்னால் இருக்கும்.

கருணாநிதி செய்த பிழையை அம்மாவும் செய்து விடக் கூடாது. தன் குடும்ப நலத்தை முன்னிறுத்தாமல், கருணாநிதி மட்டும் ஈழப்போரின் போது, ஒரு காத்திரமான முடிவை எடுத்து, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்திருந்தார்கள் என்றால். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அவர் பின்னால் நின்று இருப்பார்கள். பெருவாரி மக்களின் உணர்வுகளை தாண்டி, அவர் மகளையும் கைது செய்திருக்க முடியாது. அம்மாவும் தன் வழக்கை மனதில் கொள்ளாமல், அந்த எழுவரையும் விடுவிக்க வேண்டும்.

அப்படி விடுவிக்கும் பட்சத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக வந்தாலும், தமிழ் சமூகம் அவரை காக்கும். காலத்தை தாண்டி எம்.ஜி. ஆர் கொண்டாடப்படுவது போல், அம்மாவும் கொண்டாடப்படுவார்..." - இது ஒரு அ.தி.மு.க நண்பரின் கருத்து.

ஆம். பெருவாரி தமிழ் சமூகம், எழுவர் விடுதலையை ஆதரிக்கிறது. அவர்களை விடுவிக்காமல் இருப்பது, தமிழர் விரோத போக்கை மத்தியில் ஆண்ட காங்கிரசும், பி.ஜே.பி யும் கடைப்பிடிக்கிறது என்று நினைக்க வைக்கிறது. ஒரு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சமூகம், தன்னை இனப்பாகுபாடுடன் தன் அரசை நடத்துகிறது என்று நினைப்பது, வலுவான ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

மத்திய அரசு அடிக்கடி குறிப்பிடுவது போல், 'இது அனைவருக்குமான அரசு. நாங்கள் யாரையும் இன, மத, மொழி பாகுபாடுடன் நடத்தவில்லை' என்பதை தன் செயலில் காட்ட வேண்டுமென்றால். அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே பெருவாரி தமிழ் சமூகத்தின் எண்ணமாக இருக்கிறது.

நிறுத்துங்கள். கையில் கீபோர்டும், மெளசும் இருக்கிறது என்பதற்காக, நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா...? உணர்ச்சி வசப்படுவது வேறு, சட்ட எதார்த்தம் வேறு. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இந்த ஏழு பேருக்காகவெல்லாம் அதை வளைக்க முடியாது.

அப்படி நாம் வளைப்போமென்றால், அதுதான் ஜனநாயகத்தை வலுவிழக்க செய்யும்...' என்று சட்டத்தை மதிக்கும் மனிதராக நீங்கள் சொல்வீர்கள் என்றால், நாங்களும் அதைதான் குறிப்பிடுகிறோம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது,

கோபால் கோட்சேவுக்கு ஒரு சட்டம், பேரறிவாளனுக்கு ஒரு சட்டம் கிடையாது என்கிறார்கள் பேரறிவாளன் விடுதலைக்காக் தொடந்து போராடி வரும் செயற்பாட்டாளர்கள்.

யாருக்காகவும் சட்டம் வளைந்து கொடுக்க கூடாது

காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளியான கோபால் கோட்சேவை, மாராட்டிய மாநில அரசு அவரது சிறைவாசம் 15 ஆண்டுகள் முடிந்த நிலையிலேயே, 1964ல் விடுதலை செய்தது. இத்தனைக்கும், அவர் பேரறிவாளன் போல், 'நடந்த குற்றத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' என்று மறுத்தவர் கிடையாது.

நான் ஏன் காந்தியை கொன்றேன்? என்ற தலைப்பில் புத்தகமாகவே வெளியிட்டவர் இவர். ஆனால், பேரறிவாளன் உள்ளிட்டோர் தங்களுக்கும் ராஜீவ் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருபவர்கள்,

22 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தவர்கள். ஏன் கோட்சேவுக்கு ஒரு மாதிரியும், பேரறிவாளனுக்கு ஒரு மாதிரியும் சட்டம் நடந்து கொண்டிருக்கிறது....?

முட்டாள்தனமாக பேசாதீர்கள். தமிழர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அவர்களுக்கு எதார்த்தம் புரிவதில்லை. அப்போது இருந்த சட்டம் வேறு, இப்போது அதில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்க பழகுங்கள்' என்பது உங்கள் வாதமா...?

ஆம். மறுப்பதற்கில்லை. பல சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், எந்த சட்டமும் இவர்கள் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இல்லை என்கிறார் ஏழு தமிழர் விடுதலை நூலின் ஆசிரியர் கி.வெங்கட்ராமன்.

காந்தியார் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே , 14 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அதனால், தன் வாழ்நாள் தண்டனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் வாதாடினார்.

இவ்வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 53வுடன் இணைந்த பிரிவு 45-ன் கீழ், வாழ்நாள் சிறை என்பது அச்சிறையாளியின் மீதியுள்ள வாழ்நாள் முழுவதையும் குறிக்கும் என்று வரையறுத்தது. ஆனால் அதே நேரம், தொடர்புடைய அரசாங்கத்தின் தண்டனை குறைப்பு அதிகாரம் தற்சார்பானது என்றும் விளக்கம் அளித்தது.

அதாவது காந்தியார் வழக்கு, ஒரு கொலை வழக்கு. அது இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ், மராட்டிய அரசால் பதியப்பட்ட வழக்கு. இப்போது மராட்டிய அரசு அவரை விடுவிக்க விரும்பினால், அவரை விடுவிக்கலாம் என்பதே ஆகும். அதன்படி மராட்டிய அரசு அவரை விடுதலை செயதது.

இன்னொரு வழக்கில், ஒரு வாழ்நாள் சிறையாளிக்கு தண்டனை குறைப்பு வழங்கும் போது ஒர் கணக்கீட்டுக்காக உச்சபட்ச சிறைக்காலம் என்பதை 20 ஆண்டுகள் தண்டனை காலமாக வைத்துக் கொள்ளலாம் என்று அறிவுரையை வழங்குகிறது.

எப்படி பார்த்தாலும், பேரறிவாளன் உள்ளிட்டோர் 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார்கள். அவர்களை விடுதலை செய்வதுதான் நீதி" என்கிறார் கி. வெங்கட்ராமன்.

இல்லாத சட்டத்தின் கீழ் தண்டனை:

ஆம். சரி தான். காந்தி வழக்கு கொலை வழக்காக 302 IPC பதியப்பட்டது. அது மாநில அரசின் முழு அதிகாரத்திற்குட்பட்டது. ஆனால், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மத்திய அரசின் வெடிமருந்துத் தடைச் சட்டத்தின் கீழும் அல்லவா கைது செய்யப்பட்டார்கள். இது எப்படி அவர்களுக்கு பொருந்தும்...? என்ற கேள்வியை எழுப்புகிறீர்களா..?

தடா சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டத்தின் கீழும் அவர்கள் கைது செய்யப்பட்டது உண்மையே! தடா சட்டமே ரத்தாகிவிட்டது. தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சொல்லிவிட்டது. இது சாதாரண தண்டனைச் சட்டத்தின் கீழுள்ள கொலைக்குற்றம்தான் என வரையறுத்துக் கூறிவிட்டது.

வெடிமருந்து சட்டப்படி உச்சபட்சமாக ஒருவரை 7 ஆண்டு காலமே சிறை வைக்க முடியும். ஏழாண்டுகளைக் கடந்தும் அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விட்டதால், மத்திய அரசின் வெடிமருந்து சட்டத்தின் கீழ் அவர்கள் தண்டனையை அனுபவித்து முடித்து விட்டனர்.

தற்போது, மத்திய அரசின் எந்த சட்டத்தின் கீழ் அவர்களை ஆயுள் முழுக்க சிறை வைக்க நினைக்கிறார்கள் என்பதே இங்கு விடையளிக்கப்பட வேண்டிய கேள்வி!

மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட 302 IPC யின் கீழ்தான் அவர்கள், தற்போது சிறையில் இருக்கின்றனர். எனவே, இப்போது மாநில அரசு நினைத்தால் அவர்களை விடுவித்துவிடலாம் என்பது சட்ட நிபுணர்களின் வாதம்!

ஜனாதிபதியே கருனை மனுவை நிராகரித்த பின், எப்படி விடுதலை சாத்தியம்...?

ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் குடியரசு தலைவரின் மன்னிப்பு அதிகாரமும் (அரசமைப்புச் சட்டப் பிரிவு 72), மாநில ஆளுநரின் மன்னிப்பு அதிகாரமும் (அரசமைப்புச் சட்டப் பிரிவு 161) இணையானவை, சம அதிகாரம் உடையவை.

தமிழக அரசு தன் அமைச்சரவையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தால். அவர்களை விடுதலை செய்தே ஆக வேண்டும். தமிழக அரசு எதற்கும் அஞ்சாமல், மத்திய அரசை கேட்காமல் சட்டப் பிரிவு 161 ஐ பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும்.

மீண்டும் புரியாமல் பேசுகிறீர்கள் சட்டப்பிரிவு 435 (1)ன் படி, மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு ஆனால் அதன் விசாரணை மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்பால் நடத்தப்பட்டிருந்தால், சிறையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கடைசியாக இவ்வழக்கில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது" என்பது உங்கள் வாதமா...?

ஆம். உண்மைதான். ஆனால், அதே தீர்ப்பில் அரசியலைமைப்பு சட்டம் 161 ஐ பயன்படுத்த, மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதே மிக முக்கிய செய்தி! தமிழ்நாடு அரசு 161 ஐ பயன்படுத்தி தாராளமாக விடுதலை செய்யலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

சட்டங்களை எல்லாம் தாண்டி, பெருவாரி மக்களின் உணர்வு நிலை, அந்த எழுவரும் விடுதலை பெற வேண்டும் என்பதே. மத்திய அரசுக்கு எழுவரின் விடுதலை நிறுத்த சட்ட அதிகாரம் இல்லை என்றாலும், இப்போது தமிழக அரசு மத்திய அரசிடம் கருத்து கேட்டுள்ளது.

தமிழக மக்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறார்கள். மத்திய அரசும் அப்படி தான் நினைக்கிறது நம்புகிறோம். நாங்கள் காங்கிரஸ் போல் அல்ல, தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த பழிவாங்கும் எண்ணமும் இல்லை என்று மத்திய அரசு நினைக்குமானால். எழுவரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

கட்டுரையை எப்படி தொடங்கினேனோ அப்படியே முடிக்கிறேன். தேர்தல் ஆதாயமாக இருந்தாலும் பரவாயில்லை. ஏழு பேர் விடுதலை ஆனால் எல்லோருக்குமே மகிழ்ச்சிதான் - இது ஒரு தீவிர தி.மு.க காரரின் முகநூல் பதிவு. தமிழ் சமூகத்தின் எண்ணமும் இதுதான். இதை மத்திய அரசு மதிக்க வேண்டும்!

Post a Comment

Powered by Blogger.