Halloween party ideas 2015
.

பச்சைத் தமிழகம்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
பூவுலகின் நண்பர்கள்
10/11 அப்துல் ரசாக் இரண்டாவதுத் தெரு
சைதாப்பேட்டை
சென்னை 600 015

மார்ச் 14, 2016

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்

பச்சைத் தமிழகம் கட்சி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், மற்றும் பூவுலகின் நண்பர்கள் சார்பாக மார்ச் 14, 2014 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். போராட்டத்தின் கோரிக்கைகள் பின்வருவன:

[1] கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள முதலிரண்டு உலைகள் பற்றிய முழு உண்மைகள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்;
[2] அங்கே கூடுதல் உலைகள் கட்டக்கூடாது;
[3] போராடிய மக்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்;
[4] தமிழ் மக்களின் மீது “வளர்ச்சி” என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, மீத்தேன், கெய்ல், ஸ்டெர்லைட், வேதியியல் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள் போன்ற அழிவுத் திட்டங்கள் திணிக்கப்படக் கூடாது;
[5] சென்னையில் ஆற்றங்கரைகளில் வசிக்கும் ஏழைகளைக் கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகை ஆய்வுசெய்தபோது அதன் வடிவமைப்பில் குறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், எனவே இரண்டாவது அலகின் வடிவமைப்பு மாற்றப்படப் போவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் மார்ச் 1, 2௦16 அன்று ஒரு செய்தி வெளியாயிற்று. வேறு எந்த நாளிதழிலும், காட்சி ஊடகங்களிலும் இந்தச் செய்தி வரவில்லை. மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல மவுனமாக இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த மார்ச் 11 (ஃபுகுஷிமா நாள்) அன்று குஜராத் மாநிலம் காக்ரப்பார் அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்திருக்கிறது. இந்தியாவில் அணுஉலை விபத்து நடக்கவே நடக்காது, நடக்க விடமாட்டோம் என்று மார்தட்டியவர்கள், “அணுஉலை குளிர்விப்பானில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது” என்றும் “இந்தியாவில் இப்படி ஒரு விபத்து நடப்பது இதுவே முதல் முறை” என்றும் புலம்பிக் கொண்டிருகிறார்கள். அனைத்தும் கட்டுக்குள்ளிருக்கிறது என்றும், அணுஉலை வளாகத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் கதிர்வீச்சின் அளவு “இயல்பு நிலையிலேயே” இருக்கிறது என்றும் அணுசக்தித் துறை அதிகாரிகள் வழக்கமான பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

“அணுமின் நிலையம் தானாகவே மூடிக்கொண்டது” என்று இந்திய அணுமின் கழக இயக்குனர் திரு. நாகேஷ் சொல்ல, காக்ரப்பார் அணுமின் நிலைய வளாக இயக்குனர் திரு. லலித் குமார் ஜெயின் “அணுஉலை பலவந்தமாக மூடப்பட்டது” என்று சொல்லியிருக்கிறார். அணுசக்தி ஒழுங்காற்று வாரியச் செயலாளர் திரு. ஹரிகுமார் “காக்ரப்பார் நிலவரம் இயல்பு நிலைக்கு அருகில் உள்ளதாக” கருத்துத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் காக்ரப்பாரில் ஒரு பெரும் விபத்து நடந்துகொண்டிருப்பதாகவும், அதைப் பற்றிய முழு விபரங்களும் அணுசக்தித் துறை அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். உண்மையில் என்ன நடந்ததோ, காக்ரப்பார் அணுஉலையின் உண்மை நிலவரம் என்னவோ...நமக்குத் தெரியாது. சொல்லவும் மாட்டார்கள்.

கூடங்குளத்தில் முதலிரண்டு அணுஉலைகள் தோல்வியடைந்திருக்கும் நிலையில், மத்திய அரசும், கூடங்குளம் நிர்வாகமும் அந்த தரமற்ற, ஆபத்தான உலைகளை மூடியும், திறந்தும் மக்கள் உயிர்களோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். “உலகத்தரம் வாய்ந்த உன்னதமான அணுஉலை” என்று சில உலகப்புகழ் விஞ்ஞானிகளால் சான்றழிக்கப்பட்ட முதல் அணுஉலை இதுவரை 32 முறை தொழிற்நுட்பக் காரணங்களால் மூடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது உலைகளைக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசும், அதன் அணுசக்தித் துறையும் இறங்கியிருக்கின்றன. முதலிரண்டு உலைகளில் வேலைகள் முடியும் தருவாயில் இருப்பதால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் போல தன்னால் அணுஉலைக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க முடியாது என்று தெரிவித்த தமிழக முதல்வர் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளுக்கு எதிராக இப்போது ஒரு நிலைப்பாடு எடுக்காமல் இருக்கிறார். அ.தி.மு.க.வைப் போலவே ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படும் தி.மு.க.வும் இந்தப் பிரச்சினை குறித்த தங்கள் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்காமல் இருக்கிறது.

போராடிய மக்கள் மீது போடப்பட்டிருக்கும் 1௦5 பொய் வழக்குகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் கடவுச்சீட்டு பெற முடியாமல், வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லமுடியாமல் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும் தமிழர்கள் நலம் வேண்டாம் எனும் நிலைப்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்களுக்காகப் பேசுங்கள் கட்சிகளே, தலைவர்களே!!

https://www.facebook.com/spudayakumaran

Post a Comment

Powered by Blogger.