Halloween party ideas 2015
.

உடுமலையில் 13.03.2016 அன்று சங்கர் - கௌசல்யா என்ற ஜாதிமறுப்புத் திருமண இணையர்கள் - தேவர் ஜாதியைச் சேர்ந்த கௌசல்யாவின் பெற்றோராலும், கூலிப்படையினராலும் வெட்டப்பட்டுள்ளனர். தலித் மணமகன் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். செய்தி அறிந்த உடுமலையிலுள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளும் குற்றவாளிகளைக் கைது செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டங்களையும், மறியல்களையும் நடத்தியுள்ளனர். காட்டாறு குழுவின் சார்பாக தோழர் மலரினியன், குணசேகரன் உள்ளிட்ட தோழர்களும் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள்.


திராவிடர் கழகத் தலைவர் மானமிகு தோழர் கி.வீரமணி விடுதலையில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். திராவிடர் விடுதலைக்கழகம் தீண்டாமை ஒழிப்புப்பிரிவு காவல் பிரிவை முற்றுகையிடும் போராட்டத்தையும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது. தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில் ம.க.இ.க என்ற பார்ப்பனத் தலைமையிலான அமைப்பு சந்தடி சாக்கில், “ஆணவக் கொலை செய்யும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்” என்ற முழக்கத்தை முன்வைத்து சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் இயங்கும் ம.க.இ.க வின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இச்சுவரொட்டி போடப்பட்டுள்ளது.


ஆணவக் கொலையை எந்த ஜாதி செய்யாமல் இருக்கிறது? பத்திரிக்கை, டி.வி போன்ற மீடியாக்களுக்கு வந்த ஆணவக்கொலைகளை விட வெளிவராத ஆணவக்கொலைகள் ஏராளமாக உள்ளன. தாழ்த்தப்பட்டோர் உட்பட பெரும்பாலான ஜாதிகள் ஆணவக்கொலையைச் செய்துள்ளன. அப்படியானால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய அனைத்து சாதியினருக்கும் உரிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடலாமா?


ஹரியானாவில் ஜாட் பிரிவினர் நடத்தும் இடஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் - படேல்களின் இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் - ம.க.இ.க வின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு முழக்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை.


ஏதோ ஒரு இடத்தில் ஒரு முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவன் குண்டு வைத்துவிட்டால், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் போலச் சித்தரிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் சுக்கும், ம.க.இ.க வுக்கும் என்ன வேறுபாடு?


ஆணவக்கொலைகள் இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுத்தான் வருகிறது. அண்மைக்கால வரலாற்றில் நாம் அறிந்த கீழ்வெண்மணி தொடங்கி இன்று உடுமலை வரை ஏராளமான ஜாதியப் படுகொலைகளைப் பார்த்துவிட்டோம். இவற்றில் வன்னியர்களும், தேவர்களும், கவுண்டர்களும், நாயுடுக்களும் சில இடங்களில் பறையர்களும் தாக்குபவர்களாக - படுகொலை செய்தவர்களாக இருந்துள்ளனர்.


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் பல அமைப்புகளில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும் ஒன்று. இந்த ஆணவக்கொலைகள் செய்யும் ஜாதிகளுக்கு அர்ச்சனை உரிமை எதற்கு? ஏன் போராடினீர்கள்? அப்படியானால் அந்தப் போராட்டங்களில் நீங்கள் நேர்மையாக இருந்திருக்க மாட்டீர்கள் என்பது உறுதியாகிறது.

சில நாட்களுக்கு முன்பு, தஞ்சையில் சோழகன்குடிக்காட்டில் கோடக் மகேந்திரா வங்கியில் கடன் வாங்கி ட்ராக்டர் வாங்கிய விவசாயி பாலன் ஆணவக்கொலை செய்த ஜாதியைச் சேர்ந்தவர்தான். அவருக்காக கடந்த 14.03.16 ல் தஞ்சையில் மறியல் போராட்டம் நடத்தினீர்களே? ஏன்? ஆணவக்கொலை செய்யும் ஜாதிக்காரனுக்கு எதற்காகக் கருணை காட்டுகிறீர்கள்?


தஞ்சை டெல்டாவைப பாலைவனமாக்கும் திட்டங்களான மீத்தேன் திட்டம், ஷெர் ஆயில் திட்டம் போன்றவற்றையும் கொங்குப் பகுதியில் செயல்படுத்த உள்ள கெயில் திட்டம் உட்பட பல திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களையும் அறிக்கைகளையும் விடுகிறீர்கள். தஞ்சை மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் இதனால் பலன் அடையப் போகிறவர்கள் பெரும்பகுதி ஆணவக் கொலை செய்த ஜாதியினர் தானே? ஏன் அவர்களுக்காகப் போராடுகிறீர்கள்?


‘மக்கள் அதிகாரம்’ என்ற அமைப்பை வைத்து, டாஸ்மாக் ஒழிப்புப் போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினீர்கள். ஆணவக்கொலைகள் செய்யும் ஜாதிக்காரன் இருந்தால் என்ன? குடித்துச் செத்தால் என்ன?ஆணவக்கொலைகள் செய்த - செய்யும் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் டாஸ்மாக் நடத்தலாம் என்று இதுவரை நீங்கள் ஏன் முழங்கவில்லை?


உழைக்கும் மக்களுக்கு என்ற பெயரில் ஆணவக்கொலை செய்யும் ஜாதி மக்களுக்கு இவ்வளவு அமளி துமளிகளை நடத்தும் ம.க.இ.க வுக்கு, அதே ஆணவக்கொலை செய்த ஜாதிகளுக்கு இடஒதுக்கீட்டை மட்டும் ரத்து செய்ய வேண்டுமாம். ஆர்.எஸ்.எஸ் பார்ப்பானுக்குக் கொண்டையைத் தான் மறைக்கத் தெரியவில்லை. ம.க.இ.க வுக்கு பூணூலையும் மறைக்கத் தெரியவில்லையே?- காட்டாறு

Post a Comment

Powered by Blogger.