Halloween party ideas 2015
.

இன்று பாவலரேறு என்றும் தமிழ்த்தேசியத்தந்தை என்றும் போற்றப்படும் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த நாள்.
பெருஞ்சித்திரனாரின் காலம்: மார்ச் 10, 1933 - சூன் 11, 1995
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் என போற்றப்படுபவர்.
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான்.
அதே போல் இதர பல ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள் தமிழகத்தில் பயிற்சி எடுத்த காலங்களில் பலரை அரவணைத்து விருந்தோம்பி அரவணைத்து மகிழ்ந்தவர்கள் இணையர்கள் பெரும்சித்திரனார் ஐயாவும் அவரின் துணைவியார் தாமரை அம்மாவும். குறிப்பாக தாமரை அம்மாவை தேசிய தலைவர் பெரிதும் போற்றினார் என தோழமைகள் குறிப்பிடுவார்கள்.
இந்தியாவிடம் அடிமைப்பட்டு இருக்கும் தமிழர் தேசங்களின் விடுதலைக்காக அயராமல் துணிவோடு குரல் கொடுத்தவர் ஐயா அவர்கள்.
அந்த வகையில் தமிழ் நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தோழர் தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு உறு துணையாய் இருந்து ஆதரவு வழங்கியவரும் இவராவார்.
தமிழக தமிழீழ விடுதலைக்காக மொழி எடுத்து தளராமல் குரல் கொடுத்து போராடி சுமார்  20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது போராட்டங்கள் ஓய்ந்ததில்லை.
வாழ்க்கை வரலாற்று சுருக்கம்:
பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.
பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.
பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.
பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.
கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.
பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.
பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.
தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.
தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார்.
இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.
பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.
பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.
தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.
இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.
பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.
பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும்.
இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.
"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!"
என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.
1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.
பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.
1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.
1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.
இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்து சிறந்த பல கட்டுரைகளையும் நூற்களையும் ஆக்கியவர்.
பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.
ஐயா எழுதிய நூல்கள்:
அறுபருவத் திருக்கூத்து
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
இட்ட சாவம் முட்டியது
இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
இளமை உணர்வுகள்
இளமை விடியல்
உலகியல் நூறு
எண் சுவை எண்பது
ஐயை (பாவியம்)
ஓ! ஓ! தமிழர்களே
கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
கழுதை அழுத கதை
கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)
கொய்யாக் கனி (பாவியம்)
சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
சாதி ஒழிப்பு
செயலும் செயல்திறனும்
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
தன்னுணர்வு
தமிழீழம்
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
நமக்குள் நாம்....
நூறாசிரியம்
நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
பள்ளிப் பறவைகள்
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
பாவேந்தர் பாரதிதாசன்
பெரியார்
மகபுகுவஞ்சி
மொழி ஞாயிறு பாவாணர்
வாழ்வியல் முப்பது
வேண்டும் விடுதலை
கவிதைக்கீற்றுகள்[தொகு]
பெருஞ்சித்திரனாரின் சில கவிதைக்கீற்றுகள் கீழே தரப்படுகின்றன.
தமிழ்நாடு தமிழர்க்கே !
=================
தமிழர்க்கு திராவிடம் என்பதோ அயன்மை!
தமிழருக்(கு) இந்தியம் என்றுமே எதிர்மை!
தமிழர்க்குத் தமிழமே பொருந்திடும் இயன்மை!
'திராவிட உணர்வு' ஒரு மாயைஎன் பதற்கும்,
'தேசிய இந்தியம்' பொய்என் பதற்கும்,
கரவட மாகவே காவிரி நீரைக்
கருநா டகம்தர மறுப்பதே சான்றாம்!
கண்ணகி கோயிலில் வழிபடத் தமிழர்கள்
கால்வைத் திடவும் இசையாமல், கேரளம்
திண்ண மாகவே மறுப்பது இந்தியத்
தேசியம் பொய்யென்று காட்டும்!
ஒற்றுமை ஒருமை என்பன வெல்லாம்
உருப்படாக் கருத்துகள் என்பதைப் பார்ப்பான்
வெற்றுடல் பூணூலும் விளக்க வில்லையா,
வேறு வேறு இனம்நாம் என்பதை?
ஆகையால் இந்தியத் தேசியம் என்பதோ
'அடிமுட் டாள்தனம், அடிமை' என் றுணர்க!
சாகையில் எழுந்தோ உரிமை மீட்பது?
சாகாத் தமிழர்கள் விடுதலைக் கெழுகவே!
'பிராமணன்' என்றொரு பெயருள்ள வரைக்கும்
பீடிலா இந்தியே ஆள்கின்ற வரைக்கும்
இராதிங்கு ஒற்றுமை, ஒருமைப் பாடெல்லாம்!
எனவே முழக்குக 'தமிழ்நாடு தமிழர்க்கே'!
"உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?
உந்தன் குடும்பம் உந்தன் வாழ்க்கை
உந்தன் நலங்கள் உந்தன் வளங்கள்
என்று மட்டும் நீயும் ஒதுங்கி இருந்துவிடாதே!
நீ இறந்தபின்பும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே!
சொந்தம் பேசி சொந்தம் வாழ
சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க
என்று மட்டும் வாழ்ந்துபோக எண்ணிவிடாதே!
நீ இருந்து சென்ற கதையை மறக்க பண்ணிவிடாதே!
அன்னை நிலமும் அன்னை மொழியும்
அனைத்து மக்கள் வாழ நினைக்கும்
உன்னை உலகம் மறப்பதில்லை ஒதுங்கிவிடாதே!
நீ உழைக்கும் உழைப்பில்
உலகம் செழிக்கும் பதுங்கிவிடாதே!"
-----------------------
”கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!"
”இந்தியன் என்றால் என்னது தம்பி?
================================
சாதியும் இருக்கும்;
மதமும் இருக்கும்;
சாத்திரம் மக்களை
வேறெனப் பிரிக்கும்!
மோதலும் இருக்கும்;
முதலாளி இருப்பான்;
முன்னேற்றம் சிலர்க்கே
வாய்ப்பாக இருக்கும்!
குந்தியே தின்பான்
ஒருவன்; மற்றவன்
குடல்வற்றிச் சாவான்;
இவற்றிடை யாவரும்
இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சம்மென்றால்
எப்படித் தம்பி?
கொள்ளையன் ஆள்வான்;
கொடுமைகள் செய்வான்;
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான்!
வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபா டின்றி
விளங்கிடும் தம்பி!
முந்திய ஆட்சியை
அடிமைஎன் றார்கள்!
முன்னினும் இவர்கள்
அடிமைசெய் தார்கள்!
இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?
-பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1988
===============================
”இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன்
எனைச்சிறை செய்யினும் செய்க!
ஈழத்தமிழரை ஆதரிக்கின்றேன்
என் தலை கொய்யினும் கொய்க”
என்று அவர் பாடிய பாடல் எந்தச்சூழலில் எழுதப்பட்டது என்றால் இராசிவ் மரணத்தின் போது ஈழம் என்றோ தமிழென்றோ பேசினால் தடாவும், பொடாவும் பாய்ந்த காலத்தில் தான் எழுதப்பட்டது.
=============================
இட்ட சாவம் முட்டுக!
=======================
முண்டையின் மகனே ! முண்டையின் மகனே !
கொண்டையில் லாத ஒழுகிய முழக்குழல்
கூர்த்த கலுழன் வெவ்வாய் மூக்கின்
ஆர்த்த செருக்கோ டாண்மையின் தோற்றத்து
நாவலுந் தீவின் நாயகி யென்ன
மேவலந் திரிந்த அரசியல் மேனகை –
ஆரியக் கெளடிலி – இந்திரா என்னும்
பூரியை பிதுக்கிய முண்டையின் மகனே !
சிங்களக் கொலைஞன் செயவர்த் தனன்எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித் திடவே
முந்து‘இரா சீவ் – எனும் முண்டையின் மகனே !
உலகப் பந்தின் உயிர்ச்செறி எம்மினம்
விலகாக் குறியினன் ஆகி, விதிர்ப்புற
யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே !
நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் உலகத்து இருக்குநாள் தோறும்
எந்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதலால்
வெந்தழி யும்நாள் விரைந்துனக் கெய்துக !
இடும்பைப் பிறப்பே ! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே ! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக !
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க !
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுருக ! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக ! சூதனே !
திக்கிநா விழுக்க ! நெஞ்சு தெறிக்க !
எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயி துடிக்கையில் உளக்குலை நொய்ந்தே
இட்ட சாவங்கள் இணைந்து கூடி
முட்டுக நின்னுயிர் ! மூளி, நீ யாகுக !
தமிழினம் தகைக்கும் தருக்கனே ! நின்குடி
அமிழுக ! ஆங்கோர் அணுவின்றி அழிக !
தணலும்எம் நெஞ்சின் தவிப்பை
மணல்,நீர், தீ, வளி, வானம் – ஆற் றுகவே !
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1988
என்று அறம் பாடியவர் நம் ஐயா, இது போன்று இந்திராகாந்திக்கும் அறம் பாடினார். அது போன்றே இரு இறப்புகளும் நடந்தேறியது.
தன் இறுதிமூச்சுவரை தமிழ்மணம் கமழ வாழ்ந்தும் வழிகாட்டியாய் இருந்தும் சென்ற நம் தமிழ்த்தேசத்தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 83 ஆம் பிறந்தநாளில் அவர்தம் வீரம் செறிந்த செயல்களை உணர்வு பொருந்திய கருத்துக்களை இத்தமிழின விடியலுக்காய் நெஞ்சில் நிறுத்தி ஐயாவை நினைவுகூறுவோம்.

Post a Comment

Powered by Blogger.