Halloween party ideas 2015
.

சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும். கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார்.சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு ஓலைப் பாயை வைத்துக் கொண்டு விரிப்பதற்கு பல வகைகளில் முயல்கிறார். கடைசியில் கீழே விழுந்து மூக்கு உடைந்ததுதான் மிச்சம். அப்போதும் கூட இது கரிகால் பெருவளத்தானின் ரத்தம். ராஜ ராஜசோழன், ராஜேந்திர சோழனின் பரம்பரை ரத்தம் என்று கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார்.

தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பேராசிரியர் அருணனை இவர் தரக்குறைவாக, கண்ணியக்குறைவாக பேசியது நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊடகத்தில் மாற்றுக் கருத்து உள்ளவர்களோடு விவாதிக்கும்போது கூட கண்ணியம் குறையாமல் அதே நேரத்தில் தன்னுடைய கருத்தை அழுத்தமாக முன்வைப்பவர் பேராசிரியர் அருணன். தமிழரின் தத்துவ மரபை தன்னுடைய ஆழ்ந்த வாசிப்பின் மூலமும் உழைப்பின் மூலமும் நிரூபித்தவர். சமூக சீர்திருத்தம் - இரு நூற்றாண்டு வரலாறு, தமிழர் தத்துவ மரபு, காலந்தோறும் பிராமணியம், கடவுளின் கதை போன்ற இவருடைய அரிய நூல்கள் தமிழ் உலகிற்கு அவர் அளித்துள்ள கொடைகள். தமிழருக்காகவே அவதரித்திருப்பதாக பீற்றிக்கொள்ளும் சீமான், மேடையில் கத்தி கூச்சல் போட்டதைத் தவிர தமிழுக்கு எதுவும் செய்ததில்லை. தடித்த வார்த்தைகளை தாறுமாறாக பேசுவதன் மூலம் மட்டுமே தன்னையும் ஒரு ஆளுமையாக கருதிக் கொள்கிறார்.

ஆனால், இப்படிப்பட்டவரையும் நியாயப்படுத்தி எழுதுவதற்கு சிலர் இருக்கிறார்களே என்று நினைக்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது. “இனவெறியா? மார்க்சிய பைத்தியமா?” என்ற தலைப்பில் அ.வியனரசு என்பவர் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் விருந்தினர் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். விருந்து பலமாக இருக்கிறது போலிருக்கிறது. வியனரசு நல்ல தமிழறிஞர்தான் அவருடைய போதாத காலம் இப்போது சீமானிடம் சென்று சிக்கியிருக்கிறார். சீமானிடமிருந்து வெளியேறிய அய்யநாதன் மற்றும் அவரது கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர்களிடம் விசாரித்தால் தெரியும் சீமானின் முகவிலாசம் என்னவென்று.தந்தி டிவியில் சீமான் வரம்பு மீறி வார்த்தைகளை அள்ளிக் கொட்டியதை நியாயப்படுத்தும் வகையில், ஜனநாயகப்படியான விவாதத்தில் அருணன் நேரச் சுரண்டலில் இறங்கியதாகவும், அதை எதிர்க்கும் இளைஞனின் கோபக் கனலாய் ஒரு வார்த்தை அப்படித்தான் வரும் என்றும் ஆதிக்கவெறியர்களுக்கு எதிரான புரட்சியின் வெளிப்பாடு அது என்றும் வியனரசு கூறியுள்ளார்.

சீமான் பங்கேற்கும் விவாதங்களை கவனிக்கும் யாரும் எளிதாக ஒன்றை அவதானிக்க முடியும். சீமான்தான் பலரது நேரத்தையும் அபகரித்து காட்டுக் கூச்சல் போட்டு தன்னுடைய அறியாமையை அம்பலப்படுத்திக் கொள்வார்.சீமான் கூறியது ஆதிக்க வெறியர்களுக்கு எதிரான புரட்சியின் வெளிப்பாடாம். இவர்களது புரட்சியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. போக்கிரித்தனத்திற்கு பெயர் புரட்சி அல்ல. தமிழகத்திற்கு சொந்தமான தாதுமணலை கொள்ளையடித்த வைகுண்டராஜனின் திருமணவிழாவில் சீமான் பங்கேற்று வாழ்த்துரைத்து வழங்கியதும் கூட `தமிழ் தேசிய புரட்சி’யின் வெளிப்பாடுதான் போலும்.சீமானின் கொள்கை என்ன என்று கேட்டபோதுதான் அவர் அத்துமீறி வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார். அவரிடம் கொள்கை இருக்கிறதா என்று கேட்டிருக்கக்கூடாதுதான். கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடியவர்தான் அவர். சீமானின் நாம் தமிழர் கட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டது. அது முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதை பலரும் சுட்டிக்காட்டிய பிறகு அதை அப்படியே அமுக்கிவிட்டார்கள். அதில் நாம் தமிழர் கட்சியில் சேருபவர்கள் இன்சொல் பேச வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது.

அது சீமானுக்கு மட்டும் பொருந்தாது போலும்.சீமான் ஒரு நேர்காணலில் தகப்பனையும், தலைவனையும் கடன்வாங்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் பாட்டனை மட்டும் அவ்வப்போது கடன்வாங்கிக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஆரம்பத்தில் நான் பெரியாரின் பேரன் என்றார் சீமான். பிறகு பெரியாரையே கொச்சைப்படுத்தினார். பெரியார் தமிழர் தலைவர் அல்ல என்றார். கடைசியில் முருகன்தான் என் முப்பாட்டன் என்று கூறி வேல் தாங்கி, காவடி எடுத்து ஆடிக்காட்டினார். இன்னும் எத்தனை பாட்டன்கள் வருவார்களோ தெரியவில்லை.அவருடைய கட்சி விளம்பரத்தில் பால் தாக்கரே, ஹிட்லர் போன்ற மனிதகுல விரோதிகளின் படங்களை கூச்சமில்லாமல் போட்டுக் கொள்கிறார்கள். மும்பையிலிருந்து தமிழர்களை அடித்து விரட்டியவர்தான் பால் தாக்கரே. அவர்தான் இவருக்கு முன்னோடியாம். இவர்களது தமிழ் தேசியத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை. மராட்டியத்தில் இனக்கலவரத்தை தூண்டிவிட்ட பால் தாக்கரே கம்யூனிஸ்ட்டுகளையும் குறி வைத்து தாக்கினார். அந்த வகையில் சீமானுக்கு அவர் முன்னோடிதான்.ஆரிய இனம்தான் உலகத்தில் உயர்ந்த இனம்; ஆரிய ரத்தம்தான் தூய ரத்தம் என்று கூறித்தான் ஹிட்லர் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை நரவேட்டையாடினான். அந்த பாசிச ஹிட்லரும் கம்யூனிஸ்ட் விரோதிதான். இவர்களையெல்லாம் கொண்டாடுவதிலிருந்தே சீமானை புரிந்துகொள்ள முடியும்.இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று தமிழகம் முழுவதும் சென்று அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார் சீமான். இலை மலர்ந்தது, ஈழம் மலர்ந்ததா என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.

இப்படி தடித்தனமாக பேசுவது சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சுப.வீ. குறித்து பேசும்போது இப்படியே கத்தி, கத்தி சாக முடியாது, பொறுத்து பொறுத்துப் பார்ப்பேன், இல்லையென்றால் கத்தி எடுத்து குத்தவேண்டியதுதான் என்று பேசியவர்தான் சீமான். இப்படியெல்லாம் பேசுவது என்ன மனநிலை என்பதை வியனரசுதான் விண்டுரைக்க வேண்டும். `யாதும் ஊரே’ என்பதுதான் தமிழ்நெறி என்கிறார் வியனரசு. ஆனால், சீமானின் தமிழ் தேசியம் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. சாதி வெறியர்களின் கொடூரத்தால் தர்மபுரி இளவரசன் கொலையுண்டபோது இவர் என்ன கூறினார். `ஒரு கண்ணை துடைத்தால் இன்னொரு கண்ணில் காயம் படும்‘ என்றார். அடிப்பவனையும் அடிப்பட்டு இறப்பவனையும் ஒரே மாதிரி பார்ப்பது மட்டுமல்ல, ஆதிக்கவாதிகளின் பக்கம் நிற்பதுதான் இவரது `புரட்சிகர நோக்கம்‘ போலும். சீமான் மற்றும் அவரது தம்பிமார்களின் எதிரிகள் யார் தெரியுமா? தமிழ்நாட்டில் செண்டை மேளம் வாசிப்பவர்கள்தான். அந்த கலை தமிழர்களுக்கு எதிரானதாம். எனவே செண்டை மேளம் வாசிப்பவர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று இவர் கர்ஜிக்க அவரது தம்பிகள் அதேபோல செய்தார்கள்.

தமிழர் இசையான நாதஸ்வரத்தை இவர்கள் எத்தனை மேடையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.வந்தேறி வடுகர்கள் என்று தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக வெறியை தூண்டிவிடுகிறது சீமானின் இயக்கம். இவருடன் தொலைபேசியில் பேசிய தேனி வாலிபர் ஒருவரை இவர் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்க அவரது கட்சியினர் அந்த இளைஞரை அடித்து துவைத்தார்கள். தெலுங்கு பேசும் துப்புரவுப் பணியாளர்கள் கூட இவர்களுக்கு எதிரிகள். ஆனால் வைகுண்டராஜன்கள் இவர்களுக்கு புரவலர்கள், அவர்களது துணையோடுதான் தமிழ் தேசியக் கொடியை பறக்கவிடப் போகிறார்களாம். திருமலைநாயக்கர் மஹாலை இடிக்கவேண்டும் என்கிறார்கள் இவர்கள். இப்படியே போனால் தமிழ்நாட்டில் ஏதாவது மிஞ்சுமா? ஆனால் ராஜராஜ சோழன் போன்றவர்கள் தமிழ் தேசிய முன்னோடிகளாம். சோழர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் உழவர்கள் கொடூரமாக வதைக்கப்பட்டார்கள்.

மறுபுறத்தில் பிராமணர்களுக்கு ஏராளமான கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டன, தேவதாசி முறை நியாயப்படுத்தப்பட்டது என்பதெல்லாம் இவர்களுக்கு வேண்டுமானால் பெருமிதமாக இருக்கலாம். கண்ணை மூடிக் கொண்டு தமிழ் தேசியம் பேசினால் அது கடைசியில் மன்னர் ஆட்சிமுறையை நியாயப்படுத்துவதில் தான் போய் முடியும்.மும்பையில் வடமாநிலத்தவர்கள் ஆட்டோ ஓட்டினால் அவர்களது ஆட்டோவை எரிக்க வேண்டும் என்கிறது சிவசேனையின் நீட்சியான மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி. அதே சாயல்தான் சீமான்களின் பேச்சுகளிலும் வெளிப்படுகிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவுடமை இயக்கம் செய்துள்ள சேவைகள் அளப்பறியது. விடுதலை பெறும் இந்தியாவின் மாநிலங்கள் மொழிவழிப்பட்டவையாகவே அமைய வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்தப் போராட்டத்தின் வெற்றி காரணமாகவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அமைந்தன என்பதை `நாம் தமிழர்’ இயக்கம் நடத்துபவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். சென்னை மாநகரம் தமிழகத்தோடுதான் இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மாகாண கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, ஆந்திர மாநிலக்குழுவும் ஆதரித்தது என்பது கடந்தகால வரலாறு.இராஜாஜி முன்வைத்த குதர்க்கமான தட்சண பிரதேச கோரிக்கையை எதிர்த்து மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தமிழக எல்லையோரத்தில் உள்ள பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சர்வ கட்சி கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்த கோரிக்கைகளுக்காக சென்னையில் நடந்த பேரணிக்கு தலைமையேற்ற ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. தமிழக உரிமைக்காக ரத்தம் சிந்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். வெறும் வறட்டுக் கூச்சல் போடுபவர்கள் அல்ல. இதேபோன்று குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராடி சிறை சென்றவர்கள் பொதுவுடமை இயக்கத் தலைவர்களான ஜி.எஸ்.மணி, டி.மணி, எம்.எம். அலி போன்ற தோழர்கள்.சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இதனால் தான் அவர் தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறந்தார்.

அதன்படி அவரது உடலைப் பெற்று இறுதிநிகழ்ச்சி நடத்தியவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தலைவர்கள்.காங்கிரஸ் கட்சி இந்தி மொழிக்காகவும், திமுக ஆங்கில மொழிக்காகவும் கச்சை கட்டி நின்றபோது அன்னைத் தமிழே அனைத்துத் துறைகளிலும் தலைமை தாங்க வேண்டும் என்று சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் முழங்கியவர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா போன்ற பொதுவுடமை இயக்க தலைவர்கள்.பட்ஜெட் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழில் ஒலித்த முதல் குரல் மார்க்சிய இயக்கத்தின் பிதாமகர் பி.ராமமூர்த்திக்கு சொந்தமானது.செம்மொழி ஆண்டு அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் முழங்கிய குரல் பி.மோகன் என்ற கம்யூனிஸ்ட்டுக்கு சொந்தமானது.தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தலைநகர் தில்லிக்குச் சென்று முழங்கியவர்கள் தமுஎகசவினர். அவர்களுக்கு தலைமைதாங்கிச் சென்றவர் அருணன். அப்போதெல்லாம் சீமான் எங்கே இருந்தார் என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். திருச்சி பெல் ஆலை, சேலம் உருக்காலை, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் அயராத பணியினால் தமிழகத்திற்கு கிடைத்தவை.

பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம் நிறைவேறுவதற்கு காரணம் கம்யூனிஸ்ட்டுகள், கேரள முதல்வராக இருந்த இஎம்எஸ் அவர்களோடு பேசி, பரம்பிக்குளம், ஆழியாறு உபரி நீரை தமிழகத்திற்கு கிடைக்கச் செய்தவர் தோழர் பி.ராமமூர்த்தி. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.தமிழ்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் எதுவுமே செய்யாமல் `நாம் தமிழர்’ என்று பெயர் வைத்துக்கொண்டு ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிரிவினையைத் தூண்டுகிற சில்லரைத்தனமான வேலைகளில் ஈடுபடுபவர்தான் சீமான்.ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் யாரிடமும் கூலி வாங்கிக் கொண்டு கூவுபவர்கள் அல்ல. வரும் தேர்தலில் தன்னுடைய கட்சியை விட மக்கள் நலக் கூட்டணி அதிக வாக்குகள் பெற்றால் தம்முடைய கட்சியை கலைத்துவிடுவதாக சீமான் கூறியிருக்கிறார். இதை அவர் மறந்துவிடக்கூடாது. ஏற்கெனவே ஒருமுறை தமிழ் ஈழம் கிடைப்பதற்கு முன்னால் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். அப்படி செய்தால் என்னை செருப்பால் அடிக்கலாம் என்று கூறியிருந்தார் சீமான் என்பது ஏனோ நினைவுக்கு வந்து தொலைகிறது.

Post a Comment

Powered by Blogger.