Halloween party ideas 2015
.

இதை எழுதுவதற்கே கை நடுக்கமாக இருக்கிறது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கும் தமிழர் உரிமைக்கான எல்லாப் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் - தம் கணவர் கோவேந்தனுடனும், தம் இருவயதுக் குழந்தை இளம்பிறையுடன், தோழர்களோடு தோழர்களாக கைதாகி முழக்கமிட்ட எங்கள் சகோதரி - தோழர் சாதிக்குல் ஜன்னா (எ) புதுமொழி (வயது 30), இப்போது நம்மோடு இல்லை!

கடந்த சில வாரங்களாக SJS என்ற ஒவ்வாமை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வந்த தோழர் ஜனா, இன்று (11.03.2016) மாலை ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து விட்டனர்.

தோழர் கோவேந்தனும் ஜன்னாவும் மதங்கடந்து காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டு, அதற்கான சிக்கல்களையும் உறுதியுடன் எதிர்கொண்டனர். தோழர் கோவேந்தன் தமிழர் கண்ணோட்டம் இதழ் அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்ற, தோழர் ஜன்னா  நண்பர் வேடியப்பன் நடத்தும் டிஸ்கவரி புக் பேலசில் பணி புரிந்து வந்தார்.

எல்லோரையும் “அண்ணா” - “அக்கா” என அன்போடு அழைத்து வந்த சகோதரி ஜன்னா, இன்று எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தி விடை பெற்றுவிட்டார்.

தோழர் கோவேந்தனுக்காவது நாம் ஆறுதல் வார்த்தை கூற முயற்சிக்கலாம். ஆனால், இளம்பிறைக்கு நாம் என்ன சொல்லி ஆறுதல் பேசுவது?

கையறு நிலையில், சிதம்பரம் சிவசண்முகம் தெருவிலுள்ள தோழர் கோவேந்தன் இல்லத்தில் நாளை (11.03.2016) காலை 10 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுக நடக்கிறது.

தோழர் சாதிக்குல் ஜன்னாவுக்கு வீரவணக்கம்!

Post a Comment

Powered by Blogger.