Halloween party ideas 2015
.

 
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 9வது தேசிய மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

21 MARCH, 2016

இம்மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் திருகோணமலையில் நிகழ்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 9வது தேசிய மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


 

1. இலங்கைத் தீவின் தேசியக் கேள்வியாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் இனப்பிரச்சனைக்கு, நீதியானதும் நிரந்தரமானதுமான அரசியற் தீர்வு என்பது, தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அதன் அரசியல் அபிலாசைகளை, ஒரே நாட்டுக்குள் திருப்திபடுத்தக்கூடிய விதத்தில், "சமஷ்டி" என்றழைக்கபடும் இணைப்பாட்சி அரசியல் முறையின் கீழ், தமிழ் இனத்தின் வரலாற்று வாழ்விடமான, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில், பூரண பொறுப்பு வாய்ந்த ஓர் சுயாட்சி அரசினை ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும் என்று இம்மகாநாடு வலியுறுத்துகின்றது.

 

மேலும், இந்த அரசியற் தீர்வில், வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழைத் தாய்மொழியாக கொண்ட முஸ்லிம் மக்களின் தனித்த நலன்களைப் பாதுகாக்கவும், அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தவும் ஏதுவாக, முஸ்லிம் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்டவையும், நிலத்தொடர்பு பூண்டவையுமான பிரதேசங்களை உள்ளடக்கிய ஓர் சுயாதீன அரசியல்-நிர்வாக அலகு, குறித்த சுயாட்சி அரசுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என இம்மகாநாடு வலியுறுத்துகின்றது.

 

அத்துடன் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியினரான மலையகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தும் விதத்தில், மத்திய மாகாணம் உட்பட மலையகத்தில், அம்மக்கள் கணிசமான எண்ணிக்கையில் செறிந்து வாழும் பிரதேசங்களில் சுயாதீன அரசியல்-நிர்வாக அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்மகாநாடு வலியுறுத்துகின்றது.

 

2. முடிவடைந்த போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தின் பிரகாரம், சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய நீதி விசாரணை விரைவாக நடாத்தப்படுத்துவதற்கு ஏதுவாக, தேவையான சகல நடவடிக்கைகளையும், மேலும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசாங்கம் விரைந்து எடுக்க முன்வர வேண்டும் என்று இம்மகாநாடு கோருகின்றது.

 

3. முடிவடைந்த போரில், காணமற் போனவர்கள், சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் உற்றார் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக, அவர்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் உண்மை நிலைமை என்ன என்பதை இலங்கை அரசாங்கம் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்று இம்மகாநாடு கோருகின்றது.

 

4. சர்வதேசக் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மகாநாடு கோருகின்றது.

 

5. தமிழ் அரசியற் கைதிகளின் விடயத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அல்லது அவசர கால சட்டவிதிகளின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யவும், ஏனையோரைப் பொறுத்தமட்டில், புனர்வாழ்வுக்கு தகுதியானவர்கள் என்று அரசாங்கம் கருதுகின்றவர்களுக்கு, புனர்வாழ்வு பெறும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும், எஞ்சியுள்ளோருக்கு எதிராக வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி, முடிவுக்கு கொண்டுவரவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இம்மகாநாடு கோருகின்றது.

 

6. போர்முடிந்து ஏழு ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், பொது அமைதி நாடு முழுவதும் தொடர்ந்து நிலவும் சூழ்நிலையிலும் கூட, பாதுகாப்பு படைகளின் பாரிய அளவிலான பிரசன்னம், வட-கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நீடிப்பது அநாவசியமானது என்பது மட்டுமன்றி, பொது மக்களின் இயல்பு வாழ்வுக்கு தொடர்ந்தும் அசெளகரியங்களை ஏற்படுத்தி வருகின்றது என்பதை சுட்டிக்காட்டும் இம்மகாநாடு, யதார்த்த பூர்வமான முறையில் பாதுகாப்பு படைகளின் பிரசன்னத்தை குறைப்பதற்கும், படைத்தளங்களை அகற்றுவதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கோருகின்றது.

 

7. வட-கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளின் உடமையிலுள்ள தனியார் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் விரைந்து கையளிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இம்மகாநாடு கோருகின்றது.

 

8. வட-கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலீஸ் படையினரால் கையகப்படுத்தப்பட்டு, அவர்களின் உபயோகத்தில் இருந்து வரும் வணக்க ஸ்தலங்கள், பொதுக் கட்டிடங்கள், பாடசாலைகள், தனியார் வீடுகள் என்பனவற்றை அவற்றிற்கு உரியோரிடம் அரசாங்கம் மீளக் கையளிக்க வேண்டும் என்று இம்மகாநாடு கோருகின்றது.

 

9. அடிப்படை மதவாதிகளின் திட்டமிடலின் கீழ், வட-கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே திடீரென முளைத்திருக்கும் பெளத்த விகாரைகளின் விளைவாக, இலங்கைத் தீவில் இன்று நிலவும் இனமத இணக்கச் சூழ்நிலைக்கு சவால் விடுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் இம்மகாநாடு, இவ்விவகாரத்தில் தலையீட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது.

 

10. போரின் விளைவாக வட-கிழக்கு மாகாணங்களில் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படும் புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் உரியமுறையில் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதனால், இந்த மனிதாபிமானப் பிரச்சனையில் சர்வதேசம் பங்களித்து ஆவன செய்ய முன்வர வேண்டும் என இம்மகாநாடு வேண்டி நிற்கின்றது.

 

செயலாளர்நாயகம்

.ஸ்ரீகாந்தா
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)
Post a Comment

Powered by Blogger.