Halloween party ideas 2015
.



ஏதன் தோட்டத்தில் பிறந்த ஆதாம் ஏவாள் காதல் வாழ்க்கை தொடங்கி இன்று வரை, மலையளவு வேறுபாடுகள் இருந்தாலும் அதனை கடுகளவுதான் என்று எதிர்த்து நிற்கும் வலிமையை காதல் மட்டும் தான் பெற்றிருக்கிறது. நாடு, நகரங்கள், ஆட்சி அதிகாரங்கள், என்று எதனை இழப்பதற்கும் காதல் தயாராக இருக்கிறது. காதலை இழப்பதற்கு காதல் தயாராக இருப்பதே இல்லை. அதனால் தான் காதல் மரணத்தையும் வென்று, இன்று வரை காவியமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நவீன வாழ்கையில் கட்டாயம் அழிய வேண்டிய சாதி அகமண முறையயால் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அகமண சாதிவெறி, காதலை கொலை செய்து சமாதி வைக்க கொடிய ஆயுதங்களோடு நம்மை சுற்றி சுற்றி திரிந்து கொண்டேயிருக்கிறது. சாதியை பாதுகாக்க, காதலை கொலை செய்வது, எத்தகைய பிற்போக்குத்தனம்? சாதி ஆதிக்க கொலைகள், பகிரங்கமாக பட்டப்பகலில் தமிழகத்தில் பரவலாக நடைபெறுவது தான் இன்றைய நமது வேதனை.

காதல் திருமணம் செய்து கொண்டதற்காக சங்கர் என்னும் தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி காயங்களுடன் மருதுவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இதன் பின்னணியில் சாதியைப் பயன்படுத்தும் தேர்தல்அரசியலும் இருக்கிறது. இதைவிட மோசடித்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? இந்த கொடுமையை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?

மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கி, மனித சமத்துவத்தை நிறைவேற்றும் இளைஞர்களின் முன்னணிப் படை ஒன்று, இப்பொழுது தேவைப்படுகிறது. சித்தாந்தத்தால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இந்த படை திசைகள் தோறும் நின்று, சாதியம் உருவாக்கி வைத்துள்ள அனைத்து தீமைகளையும் எதிர்த்து களம் இறங்க வேண்டும். இதுமட்டுமல்லாது சாதிய தீமைகளை அகற்ற அரசியல் வாதிகள் ஒவ்வொரும் மனசாட்சியோடு போராடவில்லை என்றால், நாம் மேடைகளில் பேசும் பொது வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாகிவிடும்.
பிரபஞ்சத்தில் பிறந்த மனித கூட்டம், அடிப்படையில் பல்வேறு வேறுபாடுகளுடன் தான் பிறந்தது. கறுப்பு, வெள்ளை, பழுப்பு, மஞ்சள் என்று மனிதரில் பல்வகை நிறங்கள் இருந்தன. மண்ணுக்கேற்ற வாழ்க்கைமுறை, தட்பவெட்ப நிலைகேற்ற பழக்க வழக்கங்கள் என்று வேறுபாடுகளும் தோன்றி வளர்ச்சியடைந்து வந்தன. காலத்தின் சுழற்சி இந்த வேறுபாடுகள் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, மானுடத்தின் மையப்புள்ளில் மனிதர் அனைவரையும் இணைத்து வைத்துவிட்டது. ஆனலும், இந்த சூழற்சியின் மையப்புள்ளி எது என்றால் காதல் என்று மிக எளிதாக நம்மால் கூறிவிட முடியும்.
-
தாமரை தலையங்கம் ஏப்ரல் 2016

Post a Comment

Powered by Blogger.