Halloween party ideas 2015
.

மத்திய பா.ஜ.க. அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறது.

வடமொழியான சமஸ்கிருதம் தற்போது உள்ள அயல் மொழிக்கு பதிலாக பயிலவேண்டும் என்கிறது.

சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக பயிலவேண்டும் என்பது இந்தியாவின் பல மொழிகளும், பல பண்பாட்டுக் காரணிகளும் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையான இந்திய கூட்டமைப்பை சாத்தியமாக்கியிருக்கும் கருத்தியலுக்கு எதிரானது.

இந்தியாவை ஒற்றைப்பண்பாடு கொண்ட இந்துத்துவமயமாக்குதல் என்கிற ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிப்படையான செயல்திட்டத்திற்கான நகர்வு.

பேச்சுவழக்கில் இல்லாத அல்லது குறைந்து சதமானம் மட்டுமே பேசக்கூடிய ஒரு மொழியை கல்விக்கான கட்டாயமாக்க வேண்டியதன் நோக்கம் என்ன?

சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாகவும், இந்துத்துவ பண்பாட்டை அதாவது பாரதமாத என்கிற ஒரு கற்பிதம் செய்யப்பட்ட அல்லது வரலாறு மற்றும் புராணக் கதையாடல்களின் வழி கட்டமைக்கப்பட்ட புனித நிலத்தினை ஒரு தேசிய நிலமாக மாற்றுவதும், இந்தியாவில் உள்ள பண்ணெடுங்காலமாக தங்களது சொந்த வரலாறுகளையும், கதைகளையம். நம்பிக்கைகளையும் கொண்ட பல்வேறு குடிகளை ஒரே நாடு என்ற ஒற்றை அடையாளமாக இந்துத்துவ அடையாளத்திற்குள் இருத்த முனைவதுமே இதன் உள்நோக்கம்.

ஒரு நாடு ஒரு மொழி என்பது நவீனத்தும் என்ற கருத்தாக்கம் உருவாக்கிய ஒரு கருத்தியல் நிலை.

அது முழுக்க முழுக்க ஐரோப்பிய முதலாளித்துவம் தனது வளர்ச்சிப் போக்கில் உருவாக்கிய ஒரு அரசியல் கருத்துநிலை.

நிலவுடமையில், ஐரோப்பிய குலாக்குகளில் சிக்கிக்கிடந்து உழைப்பாளர்களை, பண்ணையடிமைகளை தங்களது முதலாளிய உற்பத்திக்குத் தேவையான உடல்களாக மாற்ற முடியாச்சியாக இருந்த பாரம்பரிய பண்புகள் கொண்ட நாடுகளை தேசியம், தேசிய அரசு, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்று சொல்லி முதலாளிய உற்பத்திக்குத் தேவையான உடல்களை ஜனநாயகப் புரட்சிகள் வழி விடுவித்துக் கொண்டன.

ஆக, தேசியம் என்பதன் அடிப்படையில் உள்ள சுரண்டல் நிலை முதலாளியச் சுரண்டலே.

இன்றைய இந்துத்துவா குறைந்தபட்சம் இந்த தேசிய முதலாளிகளைக்கூட பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.

இவை முன்வைக்கும் தேசியவாதம் கார்பரேட் தேசியவாதம்.

இந்துத்துவா சக்திகளைக் கொண்டு கார்பரேட் சக்திகள் இந்தியாவை தங்கள் வேட்டைக் காடாக மாற்றிக் கொண்டிருப்பது குறித்து அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

முற்றிலும் நிலுவுடமைசார் பண்டைக்கால மரபுகளை, மதிப்பீடுகளைக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கமும், அதன் ஊதுகுழலான பா.ஜ.க.-வும் நவீனத்துவமான தேசியம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரத்தை முன்வைப்பது முரணாகத் தெரியலாம்.

உண்மையில் இந்துமதம் என்ற பாரம்பரியமான மதத்தை தங்களது அடிப்படையாகக் காட்டும் ஆர்.எஸ்.எஸ். முன்வைப்பது இந்துமத நம்பிக்கைகளை அல்ல.

அது முன்வைப்பது நவீனத்துவமாக்கப்பட்ட அதிகாரத்தை கைப்பற்றிய ஒற்றை தேசநலனைக் கொண்ட இந்தியா முழுவதையும் சுரண்டக்கூடிய ஒரு அரசியல் கருத்தியலான இந்துத்துவாவை.

அது இந்துத்துவாவை கலாச்சார தேசியம் என்று சொல்லி தேசியக் கலாச்சாரமாக மாற்ற முயல்கிறது.

இந்துமதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

இந்து என்பது இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்து வரும் பல குடிகளின் நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள் தொகுக்கப்பட்ட ஒரு மதம்.

ஒரு ஆளுகை தொழில்நுட்பத்திற்காக உருவாக்கப்பட்ட நம்பிக்கை முறை.

இந்து என்பதற்கான பூர்வீக வரலாறு ஒன்றுமில்லை என்பது இந்தியவியல் அறிஞர்கள் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டுள்ள கருத்தே.

இந்து என்பது ஒற்றைக் கருத்தியலை, ஒற்றைத் தன்மையைக் கொண்டது அல்ல.

செமட்டிக் மதங்கள் எனப்படும் யூத, கிறித்துவ, இஸ்லாமுடன் இந்துமத்தை ஒப்பிட முடியாது.

இந்துமதம் என்பது மற்ற மதங்களைப்போல நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒற்றை மதமல்ல.

பல நிறுவனங்களின் கூட்டமைப்பான ஒரு பெரும் நிறுவனம்.

மதங்களில் மூன்றுவகை உண்டு.

1. பழங்குடி மதங்கள் சான்றாக பண்டையத் தமிழர்களிடம் நிலவிய தமிழர் மதம் என்ற நம்பிக்கைகள்.

2. தேசியத்தன்மைக் கொண்ட மதங்கள். சான்றாக சீக்கிய மதம். ஒரு தேசிய எல்லையும், ஒரு தேசிய இனமும் பின்பற்றும் மதம்.

3. சர்வதேசியத் தன்மைக் கொண்ட மதங்கள்.

செமட்டிக் மதங்கள் மற்றும் புத்தமதத்தை கூறலாம்.

இதில் எந்த ஒன்றிலும் அடைபடாத மதமே இந்துமதம்.

அதற்கான நில எல்லையோ, தேசியத்தன்மையோ அல்லது குடிகளின் ஒருங்கிணைந்த தன்மையோ இல்லை.

இது ஒரு தொகுப்புத்தன்மைக் கொண்ட பலகுடிகளின் நம்பிக்கைகளை ஒருங்கிணைத்த மதம். அதனால்தான் இந்துத்துவா தேசியக் கலாச்சாரம் என்ற ஒன்று இல்லை என்பதால் கலாச்சார தேசியம் என்பதை முன்வைக்கிறது.

உதாரணமாக சிவக்குடும்பம் என்ற புராணிகத்தை

எடுத்துக்கொண்டால், சிவன் (ருத்ரன்) – இமயம் (வடக்கு), பார்வதி (காளி) – வங்காளம் (மேற்கு), கணபதி (விநாயகர்) – மகாராட்டிரம் (தெற்கு), முருகன் (சுப்ரமணியன், கார்த்திகேயன்) – தமிழகம் (தெற்கு). இந்துமதம் என்பது சிவக்குடும்பத்தின் வழியாக ஒரு இந்திய பூகோள-நிலப்பரப்பின் ஒருங்கிணைப்பை சொல்லும் ஒரு தொன்ம உருவாக்கத்துடன் தொடர்பு கொண்டிருப்தைக் காணலாம்.

ஆக, இந்துமதம் பலபண்பாடுகளின் பலமொழிகளின் பலவழிபாடுகளின் வரலாற்றுத் தொகுப்பே.

அதனால்தான் இந்துமதத்தைவிட பூர்வீகத்தன்மைக் கொண்ட கணக்குழுக்களின் சாதிகள் வலுவாக இருக்கின்றன.

அவற்றின் அடிப்படை ஒப்பந்தமே எல்லா குடிகளும் தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு ஒரு குடைக்கீழ் வாழமுனைவது.

இந்துமதமாக ஒருங்கிணைக்கப்பட்ட பிராமணக் கருத்தியலின் கீழ் ஏற்பட்ட முக்கிய நிகழ்வே சனாதன தருமத்தை, வருணாசிரமத்தை ஏற்றுக்கொள்வது என்பது.

இது இந்த குடிகளின் சமநிலையை ஒரு படிநிலையாக மாற்றியது.

அம்பேத்கர் முன்வைப்பதுபோல ஐரோப்பிய சமத்துவத்தில் காணப்படும் சமத்துவம் என்பது கிடைக்கோட்டிலானது எல்லோரும் சமம் என்பது.

இந்தியவகைப்பட்ட சமத்துவம் என்பது குத்துக்கோட்டிலானது எல்லோரும் படிநிலை சமத்துவத்தைக் கொண்டவர்கள் என்பது.

சாதிக்குள் அல்லது குழுவுக்குள் சமத்துவம் உண்டு.

இரண்டு குழுக்களுக்கிடையில் சமத்துவம் இல்லை, ஏற்றத்தாழ்வு மட்டுமே உண்டு.

எல்லோரும் சமம் என்பதை இந்துமதமாக அறியப்படும் பிராமண சனாதனம் புனிதம், வருணதர்மம் என்பதன் வழி இறையின் ஏற்பாடாகச் சொல்லி மறுக்கிறது.

இந்துமதத்தில் சனாதனம் மற்றும் வருணதர்மம் உள்ளிட்ட பிராமண மதக்கூறுகளை முதன்மையாக ஆக்கியதன்மூலம் ஒரு மேலாண்மை நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த மேலாண்மை ஒற்றை மதநம்பிக்கை கொண்டதாக இந்து மதத்தை மாற்றாமல் எல்லா சிறுகுடிகளையும் தனது தலைமைக்குள், தனது நம்பிக்கைக்குள் ஒருங்கிணைத்து உள்ளது.

இந்த ஒருங்கிணப்பிற்கு காரணமான அமைந்த ஒரு முக்கியக் கூறே சமஸ்கிருதம் என்கிற வடமொழி.

அதனால் சமஸ்கிருதத்தை முதன்மைப் படுத்துவதன்மூலம் தங்களது பிராமண மதமேலாண்மையை உறுதி செய்துக்கொள்வதே சமஸ்கிருத மொழித்திணிப்பின் அடிப்படை.

அதாவது இந்து என்கிற பன்முக நம்பிக்கைக்கு மாற்றாக இந்துத்துவா என்கிற ஒற்றைக் கருத்தியலை முதன்மைப்படுத்துவதே சமஸ்கிருத மொழித்திணிப்பின் அடிப்படை.

சமஸ்கிருதமே பண்டைய இந்தியாவில் அறிஞர்களின் மொழியாக இருந்து இந்தியா என்கிற பெருநிலப்பரப்பில் தங்களது தத்தவ, மத, இலக்கிய சிந்தனைகள் பரவ காரணமாக அமைந்தது.

அதனால்தான் புத்தர் மக்கள் மொழியான பாலி மொழியில் தனது பிரச்சாரத்தை செய்தார்.

காரணம் சமஸ்கிருதம் என்பது மக்கள் மொழியாக இல்லை.

இது புத்தர்கால மொழி மேலாண்மை அரசியலை கேள்விக்கு உட்படுத்திய ஒரு அரசியல் நிலை.

இந்தியாவில் பல மொழிகளிலும் சமஸ்கிருத ஊடுறுவலும், கலப்பும் அதன் அறிஞர்களின் சிந்தனைகள் பரவலாக்கத்தின் வழியாக நிகழ்ந்துவிட்டது.

அந்த அடிப்படையில் சமஸ்கிருதம் என்பது இந்தியாவின் பலமொழிகளில் தமிழ் உட்பட கலந்து அடையாளம் தெரியாமல் மறைந்தும் உள்ளது.

மொழிக்கலப்பு என்பது இனக்கலப்போடும், சிந்தனைப் பரிமாற்றத்தோடும் இணைந்த ஒன்று. தூய்மையான மொழி எங்கும் சாத்தியமில்லை.

ஒரு மொழி பிற மொழியிலிருந்து தனக்கு தேவயானதை எடுத்துக் கொள்வதன் வழியே வளர்கிறது.

அதனால் இந்திய பிராந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருப்பதால் அதை முதன்மை மொழியாக ஏற்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகாது.

அப்படி பார்க்கின் சமஸ்கிருத இந்தோ-ஐரொப்பிய (லத்தின் கிரேக்க) மொழிக்குடும்பத்துடன் உறவு கொண்டிருப்பதால் ஐரோப்பிய மொழிகளை உலக மொழியாக ஏற்று எல்லா மொழிகளையும் கைவிட்டுவிட முடியாது.

லத்தின்-கிரேக்க மொழிகளிலிருந்து உருவான ஆங்கிலத்தை மற்ற ஐரோப்பிய நாடுகளே ஏற்பதில்லை.

காரணம் தாய்மொழி என்பது வெறும் ஒரு பரிமாறுதலுக்கான கருவி மட்டுமல்ல.

மொழி என்பது சமூக உயிர்களின் தவிர்க்க முடியாத ஒரு உடலுறுப்பு போன்றது.

அது ஒரு சமூக இயக்கத்தின் அடிப்படை வினையாக இருக்கிறது.

இப்படி யோசித்துப்பார்த்து, இதனை புரிந்து கொள்ளமுயலலாம்.

ஒரு உயிரின் அடிப்படை இயல்பூக்கங்களான பசி, பாலுறவு மற்றும் தூக்கம் போன்றவற்றிற்கு மொழி தேவையில்லை.

இதன் பொருள் ஒரு உயிரின் உயிர் வாழ்தலுக்கு மொழி தேவையில்லை.

மொழி பிறகு எதற்குதான் தேவைப் படுகிறது?

ஒரு உயிர் தன்னை பிற உயிருடன் உறவு படுத்திக் கொள்ளும் நிலையில், அல்லது சமூகமாக மாறும் நிலையிலேயே.

அதாவது, ஒரு உயிரானது தனது புலன்கள் மூலம் உருவாகும், உள்ளார்ந்த பிரதிபலிப்பை பிற உயிரிடம் பகிர்ந்து கொள்ள முனையும் போது, இரு உயிர்களுக்கும் பொதுவான ஒரு தளம் அல்லது ஒரு சங்கேத அமைப்பு தேவைப்படுகிறது.

ஒரு உயிரானது தான் கண்ட, சுவைத்த, நுகர்ந்த...

இப்படியான ஒன்றின் தனக்குள்ளான பதிவை அல்லது நினைவை பிற உயிருக்கு பரிமாற முனையும்போதே மொழி என்பது தேவைப்படுகிறது.

ஆக, ஒரு சமூக உருவாக்கத்தின் அடிப்படையாக மொழி என்பது இருக்கிறது.

மொழியில்லாவிட்டால் மனித உயிர்கள் இருக்கும், மனித சமூகங்கள் இருக்காது, வரலாறு இருக்காது.

மொழி என்பது எப்பொழுதும் முன்பே நிகழ்ந்துவிட்ட ஒன்றின் நினைவாகவே இருப்பதால், வரலாற்றை மனிதன் மீது சுமத்துவதன் மூலம் சமூகத்தின் ஒரு தொடர்ச்சியை சாத்தியப்படுத்துகிறது.

மொழி நினைவாக இருப்பதால், ஒருவகையில் வதையாகவும், பிறிதொருவகையில் இதமாகவும் இருக்கிறது.

மொழி ஒரு பரிமாற்றுக் கருவி மட்டுமல்ல.

அது ஒரு உடலை, உயிரை சமூகவயப்படுத்துவதன்மூலம் மனித குலமாக, குடியாக கட்டமைப்பது.

அதனால் ஒரு மொழியை கற்பதும், திணிப்பதும் ஒன்றல்ல.

இது திணிப்பு அல்ல தேவையானால் கற்கலாம் என்றும், ஒரு மொழிக்கு பதிலாக பல மொழிகள் கற்பது நல்லதுதானே என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

ஒருவர் தனது வாழ்நிலைக்காக, தேவைக்காக மொழியை கற்றுக்கொள்வது அவசியமே.

அவருக்காக எல்லோரும் அந்த மொழியை கற்க வேண்டும் என்பது அறிவுப் பொறுத்தமற்ற வாதம்.

ஒருவருக்கு வயிற்றுபவலி என்றால் அவர் மருந்து சாப்பிடுவதே சரியானது. அதற்காக அவரது குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடவேண்டும் என்பது தர்க்கமற்ற அறிவற்ற வாதம்.

சமஸ்கிருத மொழித்திணிப்பு என்பது இந்துமதத்தையோ இந்திய மக்களின் அறிவாற்றலையோ அல்லது எதிர்காலத் தலைமுறையை உலகத்தரமானதாகவோ மாற்றும் நோக்கம் கொண்டதல்ல.

அது ஒரு இந்துத்துவ அஜண்டா.

இந்தியாவின் பாசிசமயமாதலின் நகர்வு அது.

Post a Comment

Powered by Blogger.