Halloween party ideas 2015
.

ஐநா பன்னாட்டு விசாரணை - ஓர் அறிமுகம்
International Investigation by United Nations – an introduction

இர. அருள், பசுமைத் தாயகம், சென்னை, இந்தியா

இலங்கை மீது பன்னாட்டு விசாரணை (International Investigation) நடத்தப்படும் என்கிற வாக்குறுதியை 2014 ஐநா தீர்மானத்தின் மூலம் அமெரிக்கா காப்பாற்றியுள்ளது. ஆனால், இதன் தொடர்ச்சியான நீதிவிசாரணையை (Judicial Trial) எப்படி நடத்துவது என்பதில் மூன்றுவிதமான கருத்துகள் நிலைவுகின்றன. 1. உள்நாட்டு  நீதிவிசாரணையே போதும் என்கிறது இலங்கை அரசு.  2. பன்னாட்டு தலையீட்டுடன் கூடிய உள்நாட்டு  நீதிவிசாரணையை முன்வைக்கிறது அமெரிக்கா. இதன்மூலம் தமிழர்களுக்கு ஏமாற்றமளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது அமெரிக்கா. 3. உள்நாட்டு  நீதிவிசாரணை வேண்டாம். பன்னாட்டு விசாரணை மட்டுமே வேண்டும் என்கின்றனர் தமிழர்கள்.

இலங்கை மீதான பன்னாட்டு விசாரணை தொடர்பாக தமிழர்களை குழப்பும் வேலையில் சில அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். ஐநா மூலமாக நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கும், பன்னாட்டு குற்றவியல் நீதிவிசாரணைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குழப்புவதன் மூலம் இந்த நிலை நேர்ந்துள்ளது. குழப்பத்தைக் களைய இந்தக் கட்டுரையை படியுங்கள்:


ப்பட்டமான மனித உரிமை மீறல்கள் எந்த ஒரு நாட்டிலாவது நடைபெறுமானால், அவற்றை உரிய சட்டங்களின் கீழ் அந்த நாடே விசாரித்து, குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டியது பன்னாட்டு சட்டங்களின் கீழ் கட்டாயமான தேவை ஆகும்.

ஆனாலும், இத்தகைய குற்றங்கள் பரவலான அளவில் நிகழும் நாடுகளில் கொடும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களும், அந்த நாட்டை ஆள்வோரும் ஒரே கூட்டமாக இருக்கின்றனர். அரசாங்கமே மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நிலையில் குற்றம் இழைத்தவர்கள் மீது நியாயமான விசாரணை நடத்தி, அவர்களை தண்டிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதிவழங்க முடியாத நிலை ஏற்படும் போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள ஐநா பாதுகாப்புச் சபை (Security Council), ஜெனீவாவில் ஐநா மனித உரிமைப் பேரவை (UNHRC) ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன.

இவையன்றி ஐநா பொதுச்செயலர், ஐநா மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன.

பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கிறது? அதன் நோக்கம் என்ன?

ஐநாவின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும் நோக்கிலேயே பன்னாட்டு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன.

பன்னாட்டு சட்டங்களை மனித உரிமைச் சட்டங்கள் (International Human Rights Law - IHRL) என்றும் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்கள் (International Humanitarian Law - IHL) என்றும் பிரிக்கின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டது குறித்தோ, இரண்டும் மீறப்பட்டது குறித்தோ சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு விசாரணை ஆணையம் அமைப்பதற்கான தீர்மானங்களிலேயே, அவற்றின் நோக்கமும் வரையறுக்கப்படுகிறது. பொதுவாக:

* உண்மையிலேயே சர்வதேச சட்டம் மீறப்பட்டதா?
* திட்டமிட்டும் பரவலாகவும் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டனவா?
* குற்ற நிகழ்வுகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு என்ன?
* குற்ற நிகழ்வுகளின் பின்னணி என்ன? சூழல் என்ன?

- என பலவிதமான குற்றப்பின்னணிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் சர்வதேச விசாரணை நடத்தப்படுகிறது. குறிப்பாக 'பொறுப்புடைமையை நிலைநாட்டுதல்' (Accountability) - அதாவது குற்றச்செயல்களைக் கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதே சர்வதேச விசாரணை ஆணையத்தின் முதன்மை நோக்கமாகும்.

மொத்தத்தில் பெரிய அளவில் நடைபெற்ற குற்றச்செயல்கள் குறித்து 'நடந்தது நடந்தபடி' அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்துவதுதான் சர்வதேச விசாரணையில் கிடைக்கும் முதன்மை பலன் ஆகும்.

சர்வதேச விசாரணையை குற்றவாளி நாடு ஏற்குமா?

குற்றம் இழக்கப்பட்ட நாடுகளில் குற்றத்தில் ஈடுபட்டவர்களே ஆட்சிக்கட்டிலிலும் அமர்ந்திருந்தால் - அவை சர்வதேச விசாரணையை ஏற்பதும் இல்லை. அத்தகைய விசாரணை ஆணையத்தை நாட்டுக்குள் அனுமதிப்பதும் இல்லை.

ஆனாலும், நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதே விசாரணை நடத்த தடையாக இருப்பதில்லை. ஒரு நாட்டில் நடக்கும் குற்றத்தை பார்த்த சாட்சிகளும், ஆதாரங்களும் வெளிநாடுகளில் பரவிக் கிடப்பதாலும், அறிவியல் நுட்பங்களாலும் எந்த ஒரு நாட்டிற்கு உள்ளேயும் நுழையாமல் - அந்த நாட்டில் நடந்தக் குற்றங்களை மதிப்பிட முடியும். சிரியா, வடகொரியா போன்ற நாடுகளுக்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் அந்த நாடுகளுக்குள் நுழையாமலேயே விசாரணை நடத்தியுள்ளன.

சர்வதேச விசாரணையின் பலன் என்ன?

உள்ளது உள்ளபடி உண்மைகளை ஆவணப்படுத்தி வெளியுலகிற்கு சொல்வதுதான் சர்வதேச விசாரணை ஆணையத்தின் பணியாகும். அந்த உண்மையின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஐநா அவை மற்றும் உலக நாடுகள் முடிவுசெய்ய வேண்டும்.

உண்மை (Truth) இரண்டு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக நீதி (Justice), அடுத்தது நல்லிணக்கம் (Reconciliation). குற்றங்கள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை ஈடுசெய்யப்படுவதும், குற்றமிழைத்தோர் அதனை உணர்ந்து வருந்துவதும் நீதியின் வடிவங்களாகும்.

குற்றத்தால் பாதிப்படைந்தோர் குற்றம் இழைத்தவர்களை மன்னிக்க முன்வருவதும், குற்றம் இழைத்தோர் தமது தவறுகளை ஒப்புக்கொண்டு வருந்துவதும் - அதன் தொடர்ச்சியாக இருதரப்புக்கும் பலனளிக்கும் எதிர்காலத்தைக் கட்டமைப்பதும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்.

இந்த வழிமுறைகளில் 'நீதி' மிக முதன்மையானது. நீதியை விட்டுவிட்டு நல்லிணக்கத்தை மட்டும் பேசுவது, நடந்த தவறுகளை மூடி மறைத்துவிட்டு எதிர்காலத்தை மட்டும் பேசுவோம் என்கிற ஆபத்தான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

எனவே, ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத வார்த்தைகளாக 'உண்மை, நீதி, நல்லிணக்கம்' (Truth, Justice and Reconciliation) என்கிற பட்டியலில் உண்மையே முதலில் வருகிறது. அந்த உண்மையைக் கண்டறிவதே சர்வதேச விசாரணையின் பலனாகும். நீதி மற்றும் நல்லிணக்கம் நோக்கியப் பாதையில் இதுவே முதல் படி.

விசாரணை ஆணையமும் தீர்ப்பாயமும் ஒன்றா?

இல்லை. 'பன்னாட்டு விசாரணை ஆணையம் (International Commission of Inquiry)' அல்லது 'பன்னாட்டு விசாரணை (International Investigation)' என்பது குற்றம் சாட்டப்படும் நாட்டில் உண்மையாக என்ன நடந்தது என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிக்கொண்டுவரும் முயற்சி. இதற்கு மாறாக 'பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்  (International Criminal Tribunal)' என்பது அந்தக் குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கும் நடைமுறை. இவை இரண்டும் ஒன்றல்ல.

பன்னாட்டு விசாரணை (Investigation)

பன்னாட்டு விசாரணை ஆணையம் என்பது தனிமனித குற்றங்களை நிரூபிக்க முயற்சிக்காது, மாறாக, அரசின் குற்றங்களை விசாரிக்கும். நடந்தது என்ன, அரசாங்கம் செய்த குற்றம் என்ன, அரசாங்கம் எவ்வாறு கடமை தவறியது என பரந்துபட்ட அளவில் விசாரணை நடத்தும். குற்றமிழைத்த தனிமனிதர்களின் தோராயமான பட்டியலையும் கண்டறிய முடியும். இந்த விசாரணை சில மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும்.

பன்னாட்டு விசாரணை ஆணைய விசாரணையின் போது குற்றங்கள் மற்றும் விதிமிறல்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் நம்பத்தகுந்த அளவில் இருந்தாலே போதும் (reasonable to conclude). விசாரணையின் முடிவில் யாருக்கும் தண்டனை வழங்கப்படாது. மாறாக, பரிந்துரைகளை அளிக்கப்படும்.

பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் (Trial)

பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் என்பது அரசின் குற்றங்களை விசாரிக்காது. மாறாக, தனிமனித குற்றங்களை விசாரிக்கும். இந்த விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும். பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாய விசாரணையின் போது குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் (Beyond a Reasonable Doubt). விசாரணையின் முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

எனவே, 'பன்னாட்டு விசாரணை'  என்பது உண்மையை அறிவதற்கான முயற்சி ஆகும். இது குற்றம் செய்தவர்களை உடனடியாகத் தண்டிப்பதற்கான முயற்சி அல்ல. பன்னாட்டு விசாரணை ஆணையத்தின் மூலம் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால் - அதன் தொடர்ச்சியாக பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கப்படும் வாய்ப்பு உண்டு.

'பன்னாட்டு விசாரணை (International Investigation) என்பது ஒரு நாட்டையே குற்றம் சாட்டக்கூடியது. ஆனால், பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal) என்பது குற்றம் செய்த தனிமனிதர்களை தண்டிப்பது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை யார் அமைப்பார்கள்?

குற்றம் நடந்த நாட்டில் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது 'பன்னாட்டு விசாரணையால் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு அடுத்ததாக அந்த சட்ட மீறல்களில் ஈடுபட்டோரைக் கண்டறிந்து, தண்டிக்கும் கடமையை அந்த நாட்டின் அரசு மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்று உலகம் நம்ப வேண்டும். அப்படிப்பட்ட சூழலில், குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கும் கடமை சர்வதேச சமூகத்துக்கு வரும்.

பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்க்க வேண்டும் என்று ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை கோரிக்கை வைக்கலாம். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்கும் அதிகாரம் ஐநா பாதுகாப்பு அவை மட்டுமே உண்டு. ஐநா பாதுகாப்பு அவையில் வீட்டோ அதிகாரத்துடன் உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் மட்டுமே இத்தகையை நீதிமன்ற அமைப்புகளை உருவாக்க முடியும்.

நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா பாதுகாப்பு அவை குற்றவியல் தீர்ப்பாயத்தை (International Criminal Tribunal) அமைக்கலாம். அல்லது, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கும் (International Criminal Court) இதற்கான விசாரணை நடத்த ஐநா பாதுகாப்பு அவை பரிந்துரைக்கலாம்.


R. ARUL
Pasumai Thaayagam Foundation
NGO in special consultative status with UN ECOSOC 

Post a Comment

Powered by Blogger.