Halloween party ideas 2015
.

ஐநா மனித உரிமை அவையில் நடைபெறும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில், தமிழ்நாட்டின் சில ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகள் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்து, தமிழக மக்களை தொடர்ந்து குழப்பி வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டில், ஈழப்போரில் நடைபெற்ற பன்னாட்டு குற்றங்கள் குறித்து "இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும்" என்று தீர்மானம் கொண்டுவந்த போது, அதனை இந்தியாவும் கியுபாவும் எதிர்த்து முறியடித்து, இலங்கையின் போர் வெற்றியை பாராட்டி தீர்மானம் கொண்டுவந்தன. அப்போது இந்த தமிழக அமைப்புகள் கண்டுகொள்ளவில்லை. 

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா "இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரிய போது அதற்கு ஆதரவாக தமிழகம் திரண்டெழுந்து போராடியது. இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு 2014 இல்  "இலங்கை மீது பன்னாட்டு விசாரணையை நடத்த வேண்டும்" என்று தீர்மானம் வந்தபோது இந்த தமிழக அமைப்புகள் எதிர்த்துப் போராடின. அமெரிக்கத் தீர்மானத்தை கொளுத்தினர். அதனை தோற்கடிக்க வேண்டும் என்றனர்.

இப்போது, 2014 அமெரிக்க தீர்மானத்தை பின்பற்றி, பன்னாட்டு விசாரணை அறிக்கை வரும் நிலையில் - மீண்டும் அமெரிக்காவை எதிர்த்து போராட புறப்பட்டுள்ளனர். 

(இந்த தமிழக அமைப்புகள் கோரியது போன்று 2014 அமெரிக்கத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டிருந்தால், இப்போது ஈழப்படுகொலை ஒரு விவாதமாகவே வந்திருக்காது. யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

ஈழத்தமிழர் படுகொலை குறித்து ஒரு பன்னாட்டு நீதிமன்ற விசாரணை வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஆனால், அதற்காக அமெரிக்காவை குறிவைத்து ஒரேயடியாக எதிர்த்துப் போராடுவதில் என்ன நியாமம் இருக்கிறது?

இலங்கை மீது அப்படி ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என்றால், அது இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக முன்னெடுக்கும் நிலையில் மட்டுமே சாத்தியமாகும். எனவே, பன்னாட்டு நீதிவிசாரணை கோரிக்கையானது முதலில் இந்தியாவை நோக்கியும், அடுத்ததாக சீனா, அமெரிக்காவை நோக்கியும் அமைய வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க, உண்மையான தடைக்கல்லாக இருக்கும் இந்தியாவையும், சீனாவையும் விட்டுவிட்டு, அமெரிக்கா மீது மட்டும் குற்றம் சாட்டுவதில் நியாயம் இல்லை.

தமிழக அமைப்புகளின் குழப்ப நிலை குறித்து விரிவாக அறிய இந்தக் கட்டுரையை படியுங்கள்:

2009 தீர்மானம் 1

2009 உள்நாட்டு விசாரணை தீர்மானத்தை தோற்கடித்த இந்தியா: தமிழக அமைப்புகள் கண்டுகொள்ளாத நிலை!

ஈழப்போரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமைப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட 2009 மே மாதம் 19 ஆம் நாள் ஜெர்மனியின் தலைமையில் 17 உறுப்பு நாடுகள் கூட்டாகக் கோரிக்கை வைத்தன. இதற்கு ஐநா மனித உரிமைப் பேரவிவையில் உறுப்பினராக இல்லாத 20 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், இப்படி ஒரு முயற்சி நடப்பதை முன்கூட்டியே அறிந்த இந்தியா, கியூபா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகள் இலங்கையை காப்பாற்ற தாங்கள் கூட்டாக செயல்படப் போவதாக  2009 மே மாதம் 15 ஆம் நாள்  ஐநா மனித உரிமைப் பேரவைக்கு அறிவித்தன. அணி சேரா நாடுகள் என்கிற பெயரில் கியூபாவின் தலைமையில் இந்த இலங்கை ஆதரவு அணி அமைக்கப்பட்டது.

2009 மே மாதம் 26, 27 ஆம் நாட்களில் கூடிய ஐநா மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான சிறப்புக் கூட்டத்தில், இரண்டு மாறுபட்ட தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

சுவிட்சர்லாந்து நாடு கொண்டுவந்த தீர்மானத்தில், இலங்கைப் போரில் நடந்த மனித அழிவுக்கும் இழப்பிற்கும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும், போரில் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது குறித்து சர்வதேச தரத்தில் இலங்கை அரசாங்கமே உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது.

The Human Rights Council 'Deplores the significant loss of human lives and suffering in the context of the current situation' 'Stresses the importance of combating impunity and calls on the government of Sri Lanka to investigate all allegations and bring to justice, in accordance with international standards, perpetrators of violations of human rights and of international humanitarian law'

மனிதப் பேரழிவுக்கு வருத்தம் மற்றும் உள்நாட்டு விசாரணை என்கிற கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்த இந்தியாவும் கியூபாவும் இந்த தீர்மானத்தை தோற்கடித்தன.

இதற்கு பதிலாக, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான போர் நடத்தும் உரிமையை அங்கீகரித்தல், இலங்கை அரசுக்கு பாராட்டு, உலகநாடுகள் இலங்கைக்கு பண உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் அடங்கிய அவமான கரமான தீர்மானத்தை இந்தியாவும் கியூபாவும் முழுமூச்சாக செயல்பட்டு வெற்றிபெறச் செய்தன.

S-11/1 Assistance to Sri Lanka in the promotion and protection of human rights: The Human Rights Council 'Welcoming the conclusion of hostilities and the liberation by the Government of Sri Lanka of tens of thousands of its citizens that were kept by the LTTE  against their will as hostages' 'Urges the international community to cooperate with the Government of Sri Lanka in the reconstruction efforts, including by increasing the provision of financial assistance'

இவ்வாறாக, 2009 ஆம் ஆண்டில், இலங்கையில் உள்நாட்டு விசாரணை தேவை என்கிற மிகக் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட, ஐநா மனித உரிமைப் பேரவை இருந்தது. அதைவிடக் கொடுமையாக, இலங்கையை பாராட்டி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

(இந்த பாராட்டுத் தீர்மானம் ஒரு மனித உரிமை அவமானம் என்று சொல்லி, இதனை திரும்பப் பெற வேண்டும் என்று ஐநா பொதுச்செயலர் அமைத்த தரூஸ்மான் குழு கருத்து தெரிவித்தது).

2009 ஆம் ஆண்டு மே மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் நடந்த இந்த சிறப்புக் கூட்டம் குறித்தும், அதில் இந்தியாவின் அப்பட்டமான தமிழினத் துரோகம் குறித்தும் அப்போது தமிழ்நாட்டில் பரவலாக அறிந்திருக்கப்படவில்லை.

(இந்தக் கூட்டத்தின் போது, இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு அதிகாரப்பூர்வ ஆவணத்தை சமர்ப்பித்தது. இந்தக் கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து மொத்தம் நான்கு அமைப்புகள் மட்டுமே கோரிக்கை அறிக்கையை சமர்ப்பித்தன. அதில் பசுமைத் தாயகம் அறிக்கையும் ஒன்று. அந்த அறிக்கையில் - இலங்கையின் இனப்படுகொலை அளவிலான கொடூரங்கள் நடந்துள்ளது தொடர்பில் ஐநா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பசுமைத் தாயகம் கோரியது. மேலும் தமிழர் பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் காக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. பசுமைத் தாயகம் சார்பிலான பிரதிநிதி இக்கூட்டத்தில் பங்கேற்று இலங்கைக்கு எதிராக உரை நிகழ்த்தினார்).

தீர்மானம் 2

2012 உள்நாட்டு விசாரணைக் கோரி தீர்மானம்: தமிழக அமைப்புகள் ஆதரவு!

2009 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் வெற்றியைக் கொண்டாடி தீர்மானம் கொண்டுவந்து போது அமெரிக்கா ஐநா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராக இல்லை.  அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் ஒரு கண்டனத் தீர்மானத்தை கனடா நாடு கொண்டுவர முயன்று, போதுமான ஆதரவு கிடைக்காது என்பதால் கைவிட்டது.

இந்நிலையில் புதிதாக உறுப்பினர் ஆன அமெரிக்கா 2012 ஆம் ஆண்டில் 'இலங்கயில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமையை ஊக்கப்படுத்துதல்" எனும் தீர்மானத்தை கொண்டுவந்தது. அந்தத் தீர்மானத்தில், எல்.எல்.ஆர்.சி.யின் ஆக்கப்பூர்வமான பரிந்துறைகளை நிறைவேற்றுவதுடன், அதற்கும் கூடுதலாக நீதியையும் பொறுப்புடைமையையும் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்' என்றும், பன்னாட்டு சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை களைவதற்கான முழுமையான திட்டத்தை அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

Promoting reconciliation and accountability in Sri Lanka: The Human Rights Council 'Calls upon the Government of Sri Lanka... to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans

இவற்றை செயலாக்குவதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் உதவ வேண்டும், அந்த உதவிகளை இலங்கை அரசு ஏற்க வேண்டும் என்றும் முதலில் கோரப்படிருந்தது (to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing the above-mentioned steps,)

ஆனால், ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் உதவிகள் இலங்கை அரசின் சம்மதத்துடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து, ஏற்கச் செயதது (in consultation with and with the concurrence of the Government of Sri Lanka, advice and technical assistance on implementing the above-mentioned steps). (இதன் படி, ஐநாவின் உதவியை இலங்கைக் கோரவும் இல்லை. ஐநாவின் தலையீடு ஒரேயடியாக முடக்கப்பட்டது)

2013 தீர்மானம் 3

2013 உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தி தீர்மானம்: தமிழக அமைப்புகள் ஆதரவு!

அமெரிக்கா 2013 ஆம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமையை ஊக்கப்படுத்துதல்" எனும் தீர்மானத்தை கொண்டுவந்தது.

இந்த தீர்மானத்தில் பன்னாட்டு குற்றங்கள் குறித்த ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை இலங்கை அரசே நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது (calls upon the Government to conduct an independent and credible investigation into allegations of violations of international human rights law and international humanitarian law, as applicable;)

இதுகுறித்து 2013 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஒரு இடைக்கால அறிக்கை அளிக்க வேண்டு வேண்டும். 2014 மார்ச்சில் ஒரு விவாத அமர்வை ஐநா மனித உரிமைகள் ஆணையம் நடத்த வேண்டும் என்று இருந்த கோரிக்கையை, 2013 இல் வாய்மூல அறிக்கை, 2014 இல் ஒரு சாதாரண விவாதம் என்று இந்தியா மாற்றி அமைத்தது.

இவ்வாறு "இலங்கையில் உள்நாட்டு விசாரணை" என்கிற தீர்மானத்தை அமெரிக்கா 2013 இல் முன்வைத்த போது, அதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற பெரும் போராட்டம் தமிழ்நாட்டில் எழுந்தது. மாணவர்கள் நாடெங்கும் உண்ணாவிரதம் இருந்து ஒரு பெரும் எழுச்சியை உறுவாக்கினார்கள்.

2014 தீர்மானம் 1

2014 பன்னாட்டு விசாரணை தீர்மானம்: தமிழக அமைப்புகள் குழப்பம்!

2014 மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "இலங்கையில் நடைபெற்ற போரில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதுதொடர்பான குற்றச்செயல்கள் நிகழ்த்தப்பட்டது குறித்து, ஒரு முழுமையான புலனாய்வை மேற்கொள்ளுமாறு" ஐநா மனித உரிமை ஆணையருக்கு உத்தரவிடப் பட்டது.

To undertake a comprehensive investigation into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka during the period covered by the Lessons Learnt and Reconciliation Commission, and to establish the facts and circumstances of such alleged violations and of the crimes perpetrated with a view to avoiding impunity and ensuring accountability, with assistance from relevant experts and special procedures mandate holders

இதுதான் இலங்கை மீதான முதல் பன்னாட்டு நடவடிக்கை ஆகும். இந்த தீர்மானத்தின் படி, இலங்கை மீது பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இப்படி உண்மையாகவே இலஙகை மீது பன்னாட்டு விசாரணை தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, தமிழ்நாட்டில் சில அமைப்புகள் அந்தத் தீர்மானத்தை எதிர்த்தன. தீர்மான நகலை கொளுத்தினர். அதனை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். ஈழத்தமிழர்கள் சிலர் தீர்மானத்திற்கு எதிராக ஜெனீவா சென்று பிரச்சாரம் செயதனர். அப்போது 'அந்த தீர்மானத்தில் இனப்படுகொலை என்கிற வாசகம் இல்லை' என்று சொல்லி அதனை எதிர்த்தனர். பன்னாட்டு மனித உரிமை சட்டமீறல் என்றால் அதற்குள் இனப்படுகொலையும் உண்டு என்பதை மறைத்து இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது, அதில் பன்னாட்டு விசாரணை உத்தரவை நீக்க வேண்டும் என்று ஒரு முறையும், இந்த தீர்மானத்தையே ஒத்திவைக்க வேண்டும் என்று மறுமுறையும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது இந்தியா. இறுதியில் அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு முழுதீர்மானமும் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, வெளிநடப்பு செய்தது இந்தியா.
2015 - இப்போது நடப்பது என்ன?

2014 ஆம் ஆண்டில் எந்த தீர்மானம் வேண்டாம் என்று சொல்லி, தீர்மான நகலை எரித்தும், அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியும் போராட்டம் நடத்திய அதே அமைப்புகள், தலைவர்கள் பலர், இப்போது 'அமெரிக்கா பன்னாட்டு விசாரணையைக் கைவிட்டுவிட்டது’ என்று புலம்புகின்றனர். இப்போதும் அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.

இலங்கையில் பன்னாட்டு குற்றங்கள் நிகழ்ந்தது குறித்து, உள்ளது உள்ளபடி உண்மைகளை ஆவணப்படுத்தி வெளியுலகிற்கு சொல்வதுதான் சர்வதேச விசாரணை குழுவின் பணியாகும். அந்த உண்மையின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஐநா அவை மற்றும் உலக நாடுகள் முடிவுசெய்ய வேண்டும்.

2014 ஆம் ஆண்டில் அமெரிக்க முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 'உண்மையை உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்' என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மீதான குற்றவியல் விசாரணையை, பன்னாட்டு தலையீட்டுடன் இலங்கைக்கு உள்ளேயே நடத்தலாம் என அமெரிக்கா கருதுவதாகத் தெரிகிறது. இதில் பன்னாட்டு தலையீடு என்கிற கருத்தை இலங்கை அரசு ஏற்கவில்லை. இலங்கைக்குள் விசாரணை என்பதை தமிழர்கள் ஏற்கவில்லை.

இவ்வாறாக, அமெரிக்கா மீதான இப்போதைய குற்றச்சாட்டு என்பது, இதுவரை கொண்டுவரப்பட்ட பன்னாட்டு விசாரணை (Investigation) தொடர்பாக அல்ல. மாறாக, இனி நடக்க இருக்கும் பன்னாட்டு குற்றவியல் நடவடிக்கை (Judicial Trial) தொடர்பாகத்தான்.

தமிழ்நாட்டில் குழப்பும் அரசியல்?

2009 ஆம் ஆண்டில், இலங்கை இராணுவ வெற்றியை ஐநா மனித உரிமைப் பேரவை போற்றி புகழ்ந்த போது, தமிழ்நாட்டில் பலரும் அதுகுறித்து பேசவில்லை.

2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஐநா மனித உரிமைப் பேரவையில், உள்நாட்டு விசாரணை என்கிற தீர்மானம் வந்த போது, தமிழ்நாட்டில் பலரும் அதனை ஆதரித்தனர்.

2014 ஆம் ஆண்டில் 'பன்னாட்டு விசாரணை' என்கிற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது 'அந்த தீர்மானத்தில் இனப்படுகொலை என்கிற வாசகம் இல்லை' என்று சொல்லி அதனை எரித்தனர்.

இப்போது, அமெரிக்கா பன்னாட்டு விசாரணையை கைவிட்டுவிட்டது என்று சொல்லி புதிய போராட்டங்கள் நடத்தப்படுகின்றனர்.

ஆனால், பன்னாட்டு விசாரணை (International Investigation) என்பது ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு விசாரணை அறிக்கை வெளிவர உள்ளது. இனி, பன்னாட்டு குற்றவியல் விசாரணைக்கு (International Criminal Trial) வழிசெய்ய வேண்டுமென்றால், அதற்கான சாவி இந்தியாவிடமும் சீனாவிடமும்தான் இருக்கிறது - என்பதை மறைத்து 'வழக்கம் போல' குழப்பும் அரசியலை மேற்கொண்டுள்ளன தமிழ்நாட்டின் சில ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகள்.

தமிழ் மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை, ஏமாற்றும் குழப்பவாத அமைப்புகள் இருக்கவே செய்யும். இது தமிழினத்தின் தலைவிதி.

R. ARUL
Pasumai Thaayagam Foundation
Chennai, India
NGO in special consultative status with UN ECOSOC 

Post a Comment

Powered by Blogger.