Halloween party ideas 2015
.

சிங்களதேசத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் மிகமிக சிலர் மட்டுமே இரண்டு கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் அத்தகைய கொடுப்பனவு கிடைத்த மனிதராக அனைத்து சிங்களப் பேரினவாத கட்சிகளின் நன்மதிப்பை பெற்றவராக அருள்பெற்று இருக்கிறார்.

அவரும் அதற்கான நன்றிப்பெருக்கு மிகப்பெற்றவராக அடிக்கடி தனது சிங்களதேச விசுவாசத்தை வெளிக்காட்டும் விதமான அறிக்கைகளை பேட்டிகளை விடுத்தவண்ணமே இருக்கிறார்.

மிக அண்மைய அவரது அறிக்கை ‘ சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணையே போதும்’ என்பதாக ஊடகங்களில் வெளிவந்ததை அனைவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

இதற்கும் மேலாக எப்போது எப்போதெல்லாம் சர்வதேச கவனம் அல்லது சர்வதேச மனிதஉரிமை கூட்டம் நடாத்தப்படுகின்றதோ அதற்கு சில வாரங்களுக்கு முன்னரேயே ‘ கேபியை ஒப்படைக்கும்படும்படி இந்தியா ‘ கேட்பதும்..

‘ இதோ ராஜிவ்காந்தி மரணத்துக்காக கேபியை ஒப்படைக்கின்றோம் ‘ என்று சிங்களமும் அறிக்கைகளை மாறி மாறி சரம்தொடுப்பதும் கடந்த ஆறுவருடங்களாக நடைபெறுவதை உற்றுக்கவனித்து இருக்கமுடியும்.

இதன் உச்சக்கட்ட நாடகமாக இப்போது சிங்களதேச சட்டமாஅதிபர் திணைக்களம் கேபி மீது குற்றஞ்சுமத்த எந்தவொரு சாட்சியமும் இல்லைஎன்றும் அறிவித்து இருக்கின்றது.
அவ்வப்போது சிங்களதேசத்தில் எழும் கேபியை விசாரியுங்கள் என்ற குரல்களும் எழுந்த ஒருசில நாட்களுக்குள்ளாகவே கூர்மழுங்கி மௌனித்து போவதையும் கவனித்து இருக்கலாம்.
ஏன் மகிந்தருக்கு எதிராக மகிந்தரின் சகோதரங்களுக்கு எதிராக குற்றசாட்டுகள், விசாரணைகள் என்று கோதா கட்டும் மைத்திரி அரசுகூட ஆரம்பத்தில் கேபியை கைது செய்வோம் என்று குரல் எழுப்பியதும் அதன்பின்னர் அடங்கிபோய் விட்டதையும் வெகு சிறிய சம்பவமாக தள்ளிவிடமுடியாது.

மைத்திரி ஆட்சிப்பொறுப்பேறிய போது கேபியை கைது செய்ய எழுந்த குரல்கள் அதன்பின்னர் அடங்கிப்போனது பற்றி கோத்தபாய ‘ கேபியின் ஒத்துழைப்புகள் பற்றி சிறீலங்காபுலனாய்வு மற்றும் படையகபொறுப்பாளர்கள் வைத்திருக்கும் புரிந்துணர்வே’ அதற்கான காரணம் என்று தெரிவித்து இருந்தார்.

இப்படி சிங்களதேசத்தின் ஆட்சிபீடமேறும் பேரினவாத கட்சிகள், அதன்மீது தொங்கும் குருவிச்சை கட்சிகள் எல்லாவற்றினதும் நன்மதிப்பை மட்டுமன்றி அருகில் இருக்கும் இந்தியாவின் மறைமுக அரவணைப்பையும் பெற்றவராக கேபி தொடர்ந்து இருந்துவருவதற்கு காரணம் என்ன என்பதற்கு சரியான பதிலாக 2010டிசம்பர் 03ம்திகதி கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் விமல்வீரவன்ச கூறியதே மிக சரியானதுஆகும்.

( வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் காணவும், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளை அறிந்துக் கொள்ளவுமே கே.பியை அரசாங்கம் பயன்படுத்துவதாக  விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். அத்துடன் கேபியை பயன்படுத்தி, வெளிநாட்டு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.)

உண்மையில் கேபி மலேசியா கோலாலம்பூர் விமானநிலையத்தில் இருந்து சிங்கள தலைநகருக்கு விமானம் ஏறுவதற்கு முன்னரேயே அவருக்கும் இந்தியா-சிறீலங்கா அரசுகளுக்குமான ஒத்துழைப்புகள் ஆரம்பித்துவிட்டிருந்தன.

அமெரிக்க இரட்டைகோபுரங்கள் மீதான தாக்குதலின் ஆறாவதுவருட நினைவுகளை உலகம் அனுஸ்டிக்கும் நாள் அன்று 2007 செப்படம்பர் 11ம்திகதி உலக தொலைக்காட்சிகளின் செய்திகளின் உச்சரிப்பிலும், செய்திகளுக்கு கீழே ஓடிடும் எழுத்துகளிலும் தாய்லாந்தில் கேபி கைதுசெய்யப்பட்ட செய்தி எல்லோர் கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

அதனைவிட சுவாரசியமான நகர்வு ஒன்றும் நடந்தது அப்போது. அப்போதைய இந்தியா வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி தாய்லாந்து சென்று அங்கிருந்து ‘ கேபி தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை ‘ என்று அறிவித்ததும்

அப்போதைய தாய்லாந்து இன்ரர்போல் பிரதம அதிகாரியான கேணல் அபிசாட் சூரிப்னாயவும் ‘ கடந்த நான்கு ஐந்து நாட்களில் எந்தவொரு சிறீலங்கா தேசத்தவரும் தாய்லாந்தில் கைதுசெய்யப்படவில்லை  என்று சொன்னதுடன் நிற்காமல் ஒருபடி மேலேபோய் ‘  கடந்த இரண்டுவருடங்களாக கேபி தாய்லாந்துக்கு வரவில்லை’ என்று சொன்னதும் மிகமுக்கியமான அறிவிப்புகள் ஆகும்.அப்போதே கேபி க்கான வகிபாத்திரம் இந்திய-சிறீலங்கா அரசுகளால் நிர்ணம் செய்யப்பட்டுவிட்டன.

இந்தியாவின் பிரதமமந்திரியாகவும் போனவருடம் வரைக்கும் இந்தியாவை ஆட்சிசெய்ததுமான காங்கிரஸ் தலைவியின் கணவருமான ராஜிவ்காந்தியின் மரணத்துக்காக தேவைப்படுபவராக சர்வதேச காவல்துறையிடம் கேட்ட இந்தியா அரசு இதுவரைக்கும் கேபியை அழைத்து விசாரிக்காமல் இருப்பதற்கும் சிங்களதேசத்தின் அப்போதைய (மார்ச்25 1981) மிகப்பெரும் வங்கிப் பணப்பறிப்பான நீர்வேலி பணப்பறிபில் தேடப்பட்டு அதன் பின்னர் எண்ணற்ற விடயங்களுக்காக தேடப்பட்டிருந்த கேபியை சிங்களஅரசுகள் பேணிப் பாதுகாப்பதும், உத்தியோகபூர்வமற்ற ஒரு ராஜதந்திரிக்குரிய அனைத்து வசதிகளையும் இரண்டு பெரிய பேரினவாத கட்சிகளும் வாரி வழங்குவதும் கேபியை வைத்து நடாத்திய இனி நடாத்த போகும் காய்நகர்த்தல்களுக்காகவே.

ஒரு மணித்தியால விமானபயணத்தில் ஓரிரு புலனாய்வு விசாரணை அதிகாரிகள் சென்று விசாரித்து திரும்பக்கூடிய தூரத்தில் இடத்தில் கேபி இருந்தும் இன்னும் ஏதோ அவர் ஆப்கானிஸ்தான் ரோறா போறா மலைப்பகுதியில் தலைமறைவாக இருப்பதுபோல இந்தியா ‘ அவரை விசாரிக்கவேணும். அவரை விசாரிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வதுகூட கேபி யை வைத்து இந்தியா நகர்த்தும் காய்களுக்காகவே..

இந்தியாவின் நலனும் சிங்களத்தின் நலனும், பாரதத்தின் தேவையும் சிறீலங்காவின் தேவையும் ஒரு புள்ளியில் ஒன்றாக இருப்பதால் அந்த தேவைக்கான ஒரு நபராக கேபி இன்னும் கூர் தீட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறார்.

இதில் முதன்மையானது ‘ விடுதலைப்புலிகளுக்கு பின்னரான ஒரு காலத்தில் தமிழர்களுக்கு தலைமையாக கொண்டுவரப்’படும் ஒரு பொம்மையாக கேபி’ பிராந்திய வல்லாதிக்கத்தாலும் பேரினவாதத்தாலும் உருவாக்கப்பட்டு இருந்தார்.

அவரும் அதற்கு ஏற்றாற்போலவே 2009 மே மாதத்துக்கு பின்னர் பலபல புனைவுக்கதைகளை அறிக்கைகளாக விட்டு புதிய தலைமையாக தன்னை உருவகித்து வந்தார். எல்லாவற்றிலும் மேலாக அவரது அறிவுறுத்தலுக்கு அமைய தமிழீழவிடுதலைப்புலிகளின் புதிய மத்தியகுழு பொறுப்பாளராக கேபியை நியமித்து வந்த அறிக்கைகளும் வந்தன.

நல்லவேளையாக எல்லாம் முடிந்தது என்று கேபியும் மற்றவர்களும் கணக்கு போட்டு நகர்வுகளை முன்னெடுத்தபோதும் கேபியால் கணக்குப்போட மறந்த
ஒரே ஒரு விடயம் தேசப்புதல்வர்களின் உன்னத தியாகங்களின் உறுதியின் ஒரு துளியை பற்றி எழுந்து நின்ற புலம்பெயர் ஊடகங்கள் ஒரு சில.

விடுதலைப்புலிகளுக்கு பின்பான ஒரு காலத்தை செயற்கையாக உருவாக்கி அதற்கு ஒரு அடிபணிவு தலைமையாக கேபியை இருத்தி தமிழர்கள் இன்னும் பலபல நூற்றாண்டுகள் எழும்பாத விதமாக செய்துவிடலாம் என்ற இந்திய-சிறீலங்கா கனவுகளை இந்த ஊடகங்கள் மிகமிக துணிச்சலுடன் எதிர்த்து ஆணித்தரமாக கருத்துகளை முன்வைத்து கேபியின் நினைப்பை தவிடுபொடி ஆக்கினர். தனது சாயம் இவ்வளவு சுலபமாக வெளிறிப்போகும் என்பதை கண்டுகொண்ட கேபி கொழும்புக்கு விமானம் ஏறி அங்கிருந்து காய்களை நகர்த்தும் வேலைகளை செய்தார்.

கடந்த காலங்களில் கேபியின் கொடுப்பனவுகளால் அகமும் புறமும் நிறைந்திருந்த ஒருசிலர் கேபியை மீண்டும் தமிழர்களின் தலைவராக கொண்டுவரும் திட்டங்களுக்கான பொழிப்புரைகளையும் அதற்கான வழிமொழிவுகளையும் செய்தனர். கேபி மட்டும் மீண்டும் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்கும் ஒரு நபராக ஏற்கப்பட்டு இருந்தால் இன்னும் பலபல நூற்றாண்டுகளுக்கு தமிழினம் எழுச்சி கொள்ள முடியாமல் போயிருக்கும்.

அமைப்புகள் என்பனவற்றை கடந்து தேசியவிடுதலையில் தணியாத பற்று கொண்ட ஒரு சில ஊடகங்கள்ட மட்டுமே தீரத்துடன் இதனை எதிர்த்து எழுதி எழுதி கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து இந்த அபாயநாடகத்தை தடுத்தனர்.

முன்னாள் போராளிகளை பராமரித்தல், வடக்கு-கிழக்கு அபிவிருத்தி,
புலம்பெயர் தேசங்களில் விடுதலைக்கு எதிரான ஒருவித மாற்று அரசியலை முன்வைத்தல் என்ற கேபியின் அனைத்து வேடங்களும் கலைந்தாலும் கேபியை வைத்து இந்தியாவும் சிறீலங்காவும் இன்னும் காய்களை நகர்த்தியபடியே இருக்கின்றனர்.

இந்தியாவில் மோடி வந்தால் என்ன மன்மோகன் சிங் இருந்தால் என்ன லங்காவில் மைத்திரி வந்தால் என்ன மகிந்த இருந்தால் என்ன இதுவே தொடர்வதற்கு காரணம் அனைத்துலக பரப்பில் கேபியை வைத்தே விடுதலைப்புலிகளின் மீதான பொய்களை விசிறலாம் என்பதாலே…

இப்படி அடிக்கடி சிங்களத்துக்கு பொன்’முட்’டைகளை இட்டு காப்பாற்றும் கேபியை ஒருநாளில் சிங்களம் அறுத்து கறி சமைக்காது.இதனை போலவே தமிழர்கள் உலக அரங்கில் ஒன்று சேர்ந்து பத்துகோடி பெருங்குரலாக எழுவதை தடுப்பதற்கு இனியும் கேபி போடப்போகும் ராஜிவ்காந்தி மரணம் சம்பந்தமாகவும் இன்னபிற சம்பவங்கள் தொடர்பாகவும் இடப்போகும் பொன்முட்டை முட்டைகளுக்காக காத்திருக்கும் இந்தியாவும் ஒரே நாளில் கேபி என்ற பொன்முட்டை இடும் வாத்தை வேள்வித்தீயில் எறிந்துவிட மாட்டார்கள்.

தமிழர்கள் கேபியை மிக நன்றாக இனம் கண்டு கொண்டாலும்கூட இன்னும் அவர்மீது பிராந்திய வல்லாதிக்கமும் பேரினவாதமும் நம்பிக்கை வைத்திருப்பதற்கு காரணம் அவருக்கான பாத்திரத்தின் தேவை இன்னும் இருப்பதாக அவர்கள் கருதுவதால்தான்.அண்மையில் கருணாவின் பேட்டியை வெளியிடும்படி தூதரகமட்டங்களில் இருந்தெல்லாம் தொலைக்காட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதுபோல மிக விரைவில் கேபியின் பேட்டியும் பல சுடச்சுட புனைவுகளுடன் வெளிவரலாம்.

எமது மக்கள் தாயககோட்பாட்டில் உறுதியாக நிற்கும்போதெல்லாம், தமிழீழவிடுதலை என்ற இலட்சியத்தில் ஒருங்குஇணையும் போதெல்லாம் கேபியை மீண்டும் மீண்டும் புதிய புதிய வடிவத்தில் பிராந்திய வல்லாதிக்கமும்,பேரினவாதமும் களமிறக்கி கொண்டே இருக்கும். இனியும்தான்.

Post a Comment

Powered by Blogger.