Halloween party ideas 2015
.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய ‘கண்களால் கைது செய்’ படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு, சில படங்கள் இவர் நடித்திருந்தாலும், ‘பருத்திவீரன்’ படம் இவருக்கு சிறந்த நடிகை அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதுகூட கிடைத்தது.

இதன்பிறகு, பிரியாமணிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. இதனால் இவருக்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன. இதனால், தமிழை தவிர்த்து, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2012-ஆம் ஆண்டு ‘சாருலதா’ என்ற படம் வெளிவந்தது. இப்படம் கன்னடம் மொழியிலும் உருவாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் ஒரு படத்தில் பிரியாமணி நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியாமணி காக்கி உடை அணிந்து சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.

இவர் சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும், இவர் போலீஸ் வேடத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இப்படத்தை பட்நாயக் என்பவர் இயக்குகிறார். சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிப்பதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்துக்கொண்டு இந்த படத்தில் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் முன்னாள் நடிகை விஜயசாந்தியை நினைவுபடுத்தும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக வியப்பை தரும் என்றும் கூறுகின்றனர்.

இப்படத்தை பட்நாயக் இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

Powered by Blogger.