Halloween party ideas 2015
.

தமிழர்களின் போராட்டங்கள் என்பது வாயாலும், சமூகவலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளோடும் தான் நின்று விடுகின்றதா என்கின்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கின்றது.

அன்பான தமிழ் மக்களே எங்களிடம் சிறந்த பேச்சுத்திறனும், அபூர்வமான நடிப்புத்திறனும் உண்டு அதனால் தான் நாம் எமது இனத்தினை இழந்து, கனவை சிதைத்து நிற்கின்றோம்.


இல்லையாயின்

எங்கள் இதயத்தின் இலட்சியமான விடுதலைப்போராட்டத்தை இழந்து இன்று அரசியல் அநாதைகளாக நின்றிருக்க மாட்டோம்.

வெளியில் இருந்து பேசுவதும் விமர்சனம் செய்வதும், எள்ளி நகையாடி மற்றவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்துவதிலும் நாங்கள் கில்லாடிகள்.

விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப்புலிகளையும் இன்று விமர்சிப்பவர்களின் கருத்துக்களை எல்லாம் தொகுத்து பார்க்குமிடத்து புலிகளை விட இவர்கள் தான் களத்தில் நின்று போராடியவர்கள் போன்றதான பேச்சாகவே இருக்கும்.

ஆனால் இவர்களிடத்தில் சென்று தமிழ் இனத்தின் விடுதலைக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டால் இவர்களின் பதில் மௌனமாகவே இருக்கும்.

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிப்பிற்கு பின்னர் இதுவரை தமிழ் இனத்தின் அரசியல் ரீதியான ஆக்கபூர்வமான போராட்டம் எதுவென கேட்டால் அதற்கும் கூட எங்களிடம் சரியான விடையில்லை.

இந்நிலையிலேயே இலங்கையில் நிகழ்ந்தது இனவழிப்பு தான். இதனை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி 1மில்லியன் அதாவது 10 லட்சம் கையெழுத்து சேர்க்கும் பணிகள் அண்மையான நாட்களாக இடம்பெற்று வருகின்றன.

உலகின் மூத்தகுடி என்று சொல்லிக்கொண்டும், தமிழன் இல்லாத நாடு இல்லை என்று பெருமை பேசிக்கொண்டும் இருக்கும் நாம். ஒரு மாங்கனித்தீவில் நந்திக்கடலில் வைத்து தன்னுடைய உறவுகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோதும்,

அவர்கள் குய்யோ முறையோ என்று கதறி அழுத வேளையிலும், கால்வேறு கை வேறாக பிய்த்து எறியப்பட்டும், எங்கள் சகோதரிகளின் கற்பை சூரையாடிய வேளையிலும் எங்களால் என்ன செய்ய முடியும், என்று வெளியில் நின்று கதறி அழுத வேளையிலும்,


ஐயகோ! என் இனம் கருவருக்கப்படுகின்றதே ஆண்டவா இதை தடுக்க யாருமே இல்லையா என்று ஈழத்தில் வருந்திக்கொண்டு இருக்கையிலே, உலக நடு நிலையாளர்கள் எங்களின் கண்ணீர் கண்டு, ஏன் எங்களின் உதிரங்கள் மண்ணை நனைக்கும் போது கூட தடுத்து நிறுத்தவே நினைக்கவில்லை.

அந்த வேளை நாங்கள் நொந்த வேளை தமிழகத்தில் நடந்த உலமகா நாடகத்தின் முதன்மை நாடகத்தை கலைஞர் அரங்கேற்றுகையில் அதைக்கண்டு உடலில் எஞ்சியிருந்த ஈழத்தவனின் உயிரும் உடலை விட்டு பிரிந்தது.

அப்பொழுது நாங்கள் கலைஞர் கருணாநிதியை திட்டித்தீர்க்காத வார்த்தைகள் இல்லை.

ஆனால் நாங்கள், அதாவது இன்றைய சமூகவலைத்தள புரட்சியாளர்கள், எந்த நேரமும் இணையத்தளத்தோடு உட்கார்ந்து ஒய்யாரமாக தமிழினப் புரட்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

இன்றைய தமிழனத்தின் பிள்ளைகள் எல்லோரிடத்திலும், இணைய வசதியோடு கூடிய கைபேசிகள் தாராளமாகவே உண்டு.

எமக்கு இப்பொழுது இணையமில்லையாயின் உடலின் அணுக்கள் எவையும் அசையாத நிலையிலிருக்கின்றோம்.

ஆனால் எங்களால் எங்கள் இனத்திற்காக ஒரு கையொப்பத்தினை இடமுடியாத நிலையிலிருக்கின்றோம்.

வெட்கித்தலை குனிய வேண்டிய ஒரு நிலை இது. விட்டால் இதற்கும் பிரபாகரனையும், புலிகளையும் அழைப்போம் போல் இருக்கின்றது.

ஏனெனில் இதுவரைக்கும் நாங்கள் எங்கள் இனத்திற்காக போராட அவர்களை தானே அழைத்துக்கொண்டிருக்கின்றோம். நாங்களாக வீதிக்கு இறங்கினோமா? சுயமான போராட்டத்தை முன்னெடுத்தோமா? ஏனைய இனத்தவர்களையும் போராட்டதில் இணைத்துக்கொண்டோமா என்றால் இல்லை.

காலங்கள் எப்பொழும் ஒரே மாதிரியிருப்பதில்லை. இப்பொழுது இலங்கையில் மேற்குலகம் விரும்பும், அல்லது மேற்குலகின் பேச்சை கேட்கும் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இனி போர்க்குற்ற விசாரணை, சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் என்றெல்லாம் பேசி நடவடிக்கை எடுக்கப்போனால் சர்வதேசம் அதாவது அமெரிக்கா உருவாக்கிய ஆட்சி கவிழ்ந்து வீழ்ந்துவிடும் என்கின்ற கருத்தை இன்றைய ஆட்சியாளர்கள் முன்வைக்க அதனால் அமெரிக்கா அதை ஏற்க,

குற்றவாளிகள் தப்பித்து நலவாழ்வு வாழ்வார்கள். விடுதலைக்காக போராடியவர்களும், அதற்காக தங்கள் குடும்பங்களை அர்ப்பணித்தவர்களினதும் வாழ்க்கை என்னவாயிற்று என்று நாங்கள் சிந்திக்கத் தலைப்படுவது காலத்தின் கட்டாயம்.

எங்களது பிள்ளைகளும், அந்த பிள்ளைகளின் பிள்ளைகளும் என தமிழனத்தின் அடுத்ததடுத்த தலைமுறை நிம்மதி பெருமூச்சு விட்டு உலகில் ஏனைய இனங்களும் அனுபவிக்கின்ற சுதந்திரக்காற்றை எங்கள் பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டும் என்று தானே இவர்கள் களம் கண்டார்கள், அவர்களின் தியாகம் எங்களுக்கானது.

ஒரு போராளியின் மனநிலையில் நின்று சிந்திப்போம் தமிழர்களே. அவனுக்கும் குடும்பம் இருந்தது. அவனுக்கும் அம்மா அப்பா, அழகான அக்கா, குட்டி தம்பி தங்கைகள் இருந்திருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து இவர்கள் வீட்டிலிருந்திருக்கலாம். நமக்கேன் தேவையில்லா வேலை என்று அவர்களும் புத்தகப் பையோடு பள்ளிக்கு போயிருக்கலாம்.

அந்த கனவுகளையும், வீட்டின் நினைவுகளையும் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு களத்தில் இருந்து அம்மாவிற்கு கடிதம் எழுதி தன் உளத்தின் நினைவுகளை அப்படியே மண்ணுக்குள் புதைத்துவிட்டு மண்ணிற்காக போராடினார்கள் எனது அண்ணனும், மாமனும், சித்தப்பனும், பெரியப்பனும்.

அவர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்று கூட இன்றுவரை தெரியாது.

அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்றும் எங்களுக்கு தெரியாது. எல்லோருமே சேர்ந்து அழித்துவிட்டு அவர் இவரை கை காட்ட, மற்றவர்கள் நாங்கள் இல்லை, இதோ ஆதாரங்கள் என்று பிறரை விழிக்க இப்படியே தமிழனின் இனவழிப்பும் கூட வியாபாரமாக்கப்பட்டு இன்னும் கொஞ்ச நாளில் அது மலிந்து சலிப்புக்குரிய விடையமாக மாறப்போகின்றது.

ஆனால் நாங்கள். ம்ம். மனவேதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உலகத்தின் எல்லாப்பரப்பிலும் வாழுகின்றோம்.

புலத்தில் இருக்கும் எங்கள் தொகையும் அதிகம். இணையமற்ற வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. நகமும் தசையும் போல இணையமும் வாழ்வும் என்றாகிய நமது வாழ்வியலில் ஒரு கையெழுத்தை இடவில்லை நாம்.

இதுவரைக்கும் 2லட்சம் கையெழுத்துக்கள் தான் பதிவாகியிருக்கின்றன.

ஆனால் தமிழர்களின் மொத்த தொகை 13கோடி. வெட்கமாக இல்லையா அன்பான உறவுகளே. சிந்தியுங்கள். எமது இனத்தை அழித்துவிட்டார்கள், சிதைத்துவிட்டார்கள் என்று இணையத்தில் கூப்பாடு போடாதீர்கள் அதில் எங்களுக்கு விளையப்போவது ஒன்றுமில்லை.

உங்கள் சொந்த பந்தங்கள் அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் இந்த http://www.tgte-icc.org இணையத்தில் சென்று உங்களின் கையெழுத்துக்களையும் பதிவு செய்யுங்கள் என்று.

13 கோடி தமிழர்களில் 10 லட்சம் கையெழுத்து வாங்க முடியாத நம்மால் தமிழீழம் வாங்கி தனி நாடு அமைக்க முடியுமா என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

2008ம் ஆண்டு தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரையை சரியாக கேளுங்கள். அவர்கள் விடுதலைப்புலிகளும் தலைவரும் தமிழினத்தின் விடுதலைப் போராட்டதை எமது அடுத்த சந்ததியிடமும், உலகத்தமிழினத்திடமும் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளமை புரியும்.

எங்கள் இனத்திற்கு நடந்தது இனவழிப்பு. விசாரணை செய் என்று ஆணித்தரமாய் சொல்ல வேண்டாமா? உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம். வாக்களியுங்கள்.

அவர்களின் வாக்கு உங்கள் காதுகளில் இருந்து அகன்று விட்டதா? தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம், அந்த தாகம் தனியவிடாமல் பார்க்க வேண்டும். அதற்காக தானே மடிந்தும் போனார்கள் குடும்பம் குடும்பங்களாக,

இன்னமும் யோசிக்காதீர்கள், உங்களிடம் கையெழுத்துப் பிச்சை கேட்கின்றோம். 2009ல் நாங்களும் சேர்ந்து தான் அவர்களை கைவிட்டோம். கையெழுத்து போட்டேனும் அவர்களின் கனவிற்கு கைகொடுப்போம். ஆதரவு கொடுங்கள்.

கருவறுத்தவர்களுக்கு தண்டனை கொடுக்க உலகம் தயார் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் தமிழர்களின் இழப்பு ஒன்றும் அவர்களின் அரசியலில் தாக்கம் செலுத்தாது. அவர்களின் அரசியலில் தாக்கங்கள், ஏக்கங்கள் வரும்பொழுது மட்டும் இனவழிப்பு பதாகை மேல் எழும்.

எங்கள் இனத்தின் அழிப்பிற்கு நீதிகிடைக்க வேண்டும் அதற்கு ஆதரவு தாருங்கள் என்று கெஞ்சி கேட்ட முதல் இனமாக தமிழ் இனம் தான் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது என்பதை இவ்விடத்தில் பதிவு செய்துகொள்கின்றோம்.

நன்றி.

எஸ்.பி. தாஸ்
karu.bomi@gmail.com

Post a Comment

Powered by Blogger.