Halloween party ideas 2015
.

நடிப்பிலும், அழகிலும் மெருகேறிக்கொண்டிருக்கிறார், நடிகை வித்யா பாலன். முதலில் இவரது திரை உலக வாழ்க்கை போராட்ட களமாக இருந்தாலும் இப்போது புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

வித்யா பாலன் கடந்து வந்த பாதையை பற்றி அவரிடம் கேட்போம்!

தொடக்கத்தில் உங்கள் சினிமா வாழ்க்கை போராட்டமாக இருந்ததல்லவா?

பெரும்பாலான நடிகைகளுக்கு தொடக்க காலம் போராட்டமாகத்தான் இருக்கும். ஆனால் என் நிலை அதைவிடவும் மோசம். அப்படியும் இல்லாமல், இப்படியும் இல்லாமல் அந்தரத்தில் விடப்பட்டேன். சிரமப்பட்டு உள்ளே வந்தேன். ராசி இல்லாதவள் என்று மீண்டும் வெளியே தள்ளப்பட்டேன்.

அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தேன். என்னைப்போன்ற தவிப்பான மனநிலை யாருக்கும் வரக்கூடாது. அதை இப்போது நினைத்தாலும் அழுகை வருகிறது.

அப்படி என்னதான் நடந்தது, விளக்கமாக சொல்லுங்கள்?

நான் மோகன்லாலுடன் நடிக்க ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தமானேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அதன் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்தது. ஒருநாள் திடீரென்று மோகன்லாலுவுக்கும்– அந்த படத்தின் டைரக்டருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டு, கருத்துவேறுபாட்டால் படிப்பிடிப்பு நின்றதும், என் இதயத்துடிப்பே நின்றதுபோல் ஆகிவிட்டது. மோகன்லால் பிரபலமானவர். ஆனால் அன்று என் நிலையை யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. நொறுங்கிவிட்டேன். நான் ராசியில்லாதவள் என்று முத்திரை குத்தப்பட்டேன். அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக 18 சினிமாக்களில் இருந்து நீக்கப்பட்டேன். நன்றாக தெரிந்தவர்கள்கூட எனக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டார்கள்.

சினிமாவில் இருந்தே விலகிவிடலாம் என்று அப்போது நினைத்தீர்களா?

கிட்டத்தட்ட அப்படித்தான் நினைத்தேன். அழகான கனவு பாதி தூக்கத்தில் கலைந்துவிட்டது போல் இருந்தது. மீண்டும் அதே கனவு, விட்ட இடத்தில் இருந்து தொடரவேண்டும் என்று ஏங்கினேன். ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு பின்பு வேறு வேலை தேடி போய்விடலாம் என்றுகூட நினைத்தேன். அப்போதுதான் ‘பரிநீதா’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வளர்ந்து, இந்த உயரமான இடத்தில் இருக்கிறேன்.

சமீபத்தில் பூக்காரி வேடத்தில் நடித்திருக்கிறீர்களாமே?

மகேஷ் பட்டா எழுதியிருக்கும் ‘ஹமாரி அதூரி கஹானி’ படத்தில் நான் பூக்காரியாக நடித்திருக்கிறேன். மகேஷ் அவரது அம்மாவை மையமாக வைத்து அந்த கதையை எழுதியிருக்கிறார். அவரது அம்மா ஷெரின் அழகானவர். வாழ்க்கையில் ஏராளமான போராட்டங்களை சந்தித்தவர். தனியாளாக நின்று அவரை வளர்த்திருக்கிறார். இது பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு பாடமாகக்கூடிய கதை. படத்தில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் உண்டு. பூக்காரியான நான் துளியளவும் அன்பு இல்லாத கணவரோடு போராட்ட வாழ்க்கை நடத்துவேன். இம்ரான் ஹாஷ்மி என் காதலராக நடித்திருக்கிறார்.

சினிமா, விளம்பரங்கள் என்று பிசியாக இருக்கிறீர்களே?

நடிப்பதற்காக வந்துவிட்டேன். முழு நேரமும் நடிக்க சொன்னாலும் நடித்துக்கொண்டிருப்பேன்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்ற பாடம்?

முயற்சி திருவினையாக்கும்.

இன்றைய சினிமாக்களில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமெடுக்கிறார்கள். பெண்களை மதிக்கிறார்கள்.

Post a Comment

Powered by Blogger.