Halloween party ideas 2015
.

இந்தியில் புத்திசாலி நடிகை என்ற பெயரைப் பெற்றிருக்கிறார், கல்கி கொச்சலின். மற்றவர்களின் புகழ்ச்சியில் மயங்கிவிடாத அவர் இங்கே காதல், செக்ஸ், ஓரினச்சேர்க்கை போன்று பலரும் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றியும் தடாலடியாகப் பேசுகிறார்!

மூளை வளர்ச்சி பாதிப்புக்குள்ளான பெண்ணாக நீங்கள் நடித்த ‘மார்க்கரிட்டா வித் எ ஸ்ட்ரா’ படம் பலத்த பாராட்டைப் பெற்றிருக்கிறதே?

ஆம். கடின உழைப்புக்குப் பின் கிடைத்த இந்தப் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில் நன்றாக நடிப்பதற்காக நான் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆறு மாதங்கள் தயாரானேன். இயக்குநர் சோனாலி போஸின் உறவினரான மாலினி என்ற பெண் இதே குறைபாட்டுடன் வாழ்கிறார். அவரோடு நான் பல நாட்களைக் கழித்தேன். நாங்கள் இருவரும், தியேட்டர், ஓட்டல், பார்ட்டி என்று ஒன்றாகச் சென்றோம். நான் அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.

படத்தில் ஓரினச்சேர்க்கை பெண்ணாகவும் நடித்திருக்கிறீர்களே?

நான் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். வயதுக்கு வந்த நபர், தான் விரும்பும் எந்த நபருடனும் இணை சேர அனுமதிக்கப்பட வேண்டும். அது அந்த இருவரின் விருப்பத்தை பொறுத்தது. அதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதான விஷயமில்லை. படப்பிடிப்பில் நம்மைச் சுற்றி 15 பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் நம்மையே பார்த்துக்கொண்டிருப்பதால் நம்மால் இயல்பாக இருக்க முடியாது.

நீங்களும், உங்கள் கணவர் அனுராக் காஷ்யப்பும் பிரிந்துவிட்டீர்கள். அந்த பிரிவு துயரில் இருந்து நீங்கள் மீண்டுவிட்டீர்களா?

மீண்டுதானே ஆகவேண்டும்! நான் எனது பழைய காலத்தை மறந்துவிட்டேன். ஆனால் நான் பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறேன். நான் ஒரு பாசிட்டிவான பெண். கடந்தகால சம்பவங்கள் சில என்னை சங்கடத்துக்குள்ளாக்கின. ஆனால் நான் சோகத்திலேயே மூழ்கிக் கிடக்க விரும்பவில்லை. எப்போதும் மன அழுத்தத்திலேயே இருக்க முடியாது. சந்தோஷமாக இருப்பதும், வருத்தமாக இருப்பதும் அவரவர் விருப்பம்தான். நாம் நம் மனநிலையை கட்டுப்பாட்டில் வைக்கவும், நமது நாளை மதிப்பானதாக மாற்றிக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மீண்டும் புதிய உறவை யாருடனாவது ஏற்படுத்திக்கொள்வீர்களா?

நான் காதலிக்கத் தயாராகயிருக்கிறேன். ஆனால் காதல் எளிதில் வராது. நமக்கு விதிக்கப்படும்போதுதான் காதல் நமக்குள் பூக்கும். அப்படி ஒரு சரியான நபரை நான் காணும்போது இயல்பாக என்னுள் காதல் பிறக்கும். அப்போது வார்த்தைகளுக்குக் கூட அவசியமிருக்காது.

காதல் பற்றிய உங்கள் கருத்து மாறியிருக்கிறதா?

எனக்கு 15 வயதாக இருக்கும்போது, காதல் என்பது கடைசியில் கல்யாணம் செய்துகொண்டு ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்றுதான் நினைத்தேன். கணவர் அழகாயிருக்க வேண்டும், அவருக்குப் பெரிய வீடு இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது நினைத்தேன். இன்றோ, காதலைப் பற்றிய என் எண்ணங்கள் மாறி இருக்கிறது. ‘காதல் என்பது சுயநலமற்ற செயல்பாடு. எந்த எதிர்பார்ப்பும், பிரதிபலனும் இல்லாமல் நாம் நமது துணைக்கு நல்லது செய்வது. அதுதான் உண்மையான காதல்’ என்று கருதுகிறேன்.

அப்படியென்றால் திருமணத்தின் அவசியம் என்ன?

இன்று அனைவரும் சம்பாதிக்கிறார்கள், சுதந்திரமாக வாழ்கிறார்கள். எனவே திருமணம் செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. சமூகத்தை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக நாம் திருமணம் செய்துகொள்ள முடியாது. நாம் விரும்பும்போது திருமணம் செய்துகொள்ளலாம். சுமார் 45 வயதுள்ள சிலர், 20 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் நமது அன்பை யாருக்காகவும் நிரூபிக்கத் தேவையில்லை. துணையில் இருவரும் சந்தோஷமாக இருக்கிறோம், ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான சான்றிதழா திருமணம்? நமது உறவு என்பது நம்முடைய தனிப்பட்ட விஷயம்.

திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொள்வது பற்றி?

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது ஒன்றும் தவறில்லை. பொறுப்பாகச் செயல்படும் வரை இதிலொன்றும் பிரச்சினையில்லை. ஆணுறை, கருத்தடைச் சாதனங்கள் பற்றியெல்லாம் நமக்கு இங்கே முறையாக பாலியல் கல்வி இல்லை. செக்ஸ் என்பது தடுக்கப்பட்ட விஷயமாக உள்ளது. இன்றும் யாரும் அதை வெளிப்படையாகப் பேசுவதில்லை. கர்ப்பமாகிவிடாமல்தான் கவனமாக இருக்க வேண்டும். பாலியல் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் பாதுகாப்பான உறவு முக்கியம்.

ஓரினச்சேர்க்கை குறித்து உங்கள் கருத்து?

வயது வந்த இருவர், ஒருவரை ஒருவர் விரும்பும்போது அதற்கு வேறு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தேவையில்லை. ஏன் நாம் அடுத்தவர் வாழ்க்கையில் அதிகாரம் செலுத்தவும், எதிர்ப்புக் காட்டவும் வேண்டும்!

எந்தப் பெண்ணாவது உங்கள் மீது ஆசைப்பட்டிருக்கிறாரா?

ஒருமுறை, ஓரினச்சேர்க்கையாளர்களின் பார்ட்டி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லோரும் ஜாலியாக கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார்கள், ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு நானும் தப்பவில்லை. ஆனால் எல்லோரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்கிற நிலையில் எதுவும் தப்பாகத் தெரியவில்லை.

ஒரு பெண் அவசியம் அறிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது?

உங்களை நீங்களே மதிக்காவிட்டால், வேறு யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள். எல்லா உறவுகளிலும் நேர்மை கட்டாயம் இருக்கவேண்டும். தகவல் தொடர்பில் இடைவெளி இருக்கக்கூடாது. நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நமது துணையும் அறிந்துகொள்ளவேண்டும். ஆண், பெண் உறவில் இருவருக்குமே சம உரிமை இருக்கிறது. செக்ஸ் என்பது சந்தோஷத்துக்காகத்தானே தவிர, குழந்தைகளை உற்பத்தி செய்ய அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Post a Comment

Powered by Blogger.