Halloween party ideas 2015
.

செப்டம்பரில் ஜெனிவாவில் நடக்க இருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத் தொடர் தொடர்பான நடவடிக்கைகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

2009ல் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையில் தொடர்புடைய எவரும் தப்பித்துவிட முடியாது என்கிற பரவலான நம்பிக்கை இதனால் வலுவடைந்திருக்கிறது.

நவநீதம் பிள்ளை அமைத்த சட்ட அடித்தளமும், கல்லம் மேக்ரே அளித்த ஆதாரங்களும், இனப்படுகொலை செய்த இலங்கைக்கு இன்றுவரை ஆகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன.

இந்த அச்சுறுத்தலெல்லாம் போதாதென்று, ராணுவத்தின் மிருகத்தனத்தை நேரில் பார்த்தவர்களை ஜெனிவாவுக்கு அழைத்துவந்து சாட்சியமளிக்க வைத்திருப்பதன் மூலம், இலங்கையை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது - பிரித்தானிய தமிழர் பேரவை.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசனின் மகன், நிர்வாகத் துறை பொறுப்பாளர் மலரவனின் மனைவி, சமாதானச் செயலாளர் புலித்தேவனின் மனைவி - ஆகிய மூவரும் இரண்டு நாட்களுக்கு முன் (ஜூன் 25) ஜெனிவாவில் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்பு, அமெரிக்க தமிழர் பாதுகாப்பு சபை ஆகியவற்றுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது - பிரித்தானிய தமிழர் பேரவை

சர்வதேசத்தின் மீதும், ஐ.நா.வின் மீதும் இருந்த நம்பிக்கையில் தான், முன்னதாக தகவல் தெரிவித்துவிட்டு, நிராயுதபாணிகளாக வெள்ளைக்கொடியேந்திச் சென்றார்கள் நடேசன், புலித்தேவன், மலரவன் உள்ளிட்ட தளபதிகளும் போராளிகளும். வெள்ளைக்கொடியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவர்களைச் சுட்டுக்கொன்றது இலங்கைப் படை. நிராயுதபாணிகளைக் கொன்றாவது தங்களை வீரர்கள் என்று காட்டிக் கொள்ளாவிட்டால் அந்த மிருகங்களுக்குத் தூக்கம் வருமா?

சர்வதேச நியதிகளுக்கு நேர்மாறாகக் கொல்லப்பட்டவர்களின் நேரடி உறவுகள் என்கிற வகையில், நடேசன், புலித்தேவன் மற்றும் மலரவனின் உறவுகள் ஜெனிவாவில் தங்களது நினைவுகளைக் கண்ணீர் மல்கப் பதிவு செய்தனர்.

பெண்பிள்ளைகள் தங்களது பெற்றோரோடு வந்து சரணடையலாம் - என்று முதலில் அறிவித்த ராணுவம், அவர்கள் சரணடைந்த பின், பெற்றோரை விட்டுவிட்டு அவர்களை மட்டும் தனியாகப் பிரித்து அழைத்துச் சென்றதைக் குறிப்பிட்டபோது, புலித்தேவன் மனைவியின் குரலில் துயரப்பெருக்கு!

செப்டம்பரில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், மீண்டும் ஏதாவதொரு சால்ஜாப்பு சொல்லி, வாய்தா கேட்க நினைத்திருந்த இலங்கைக்கு, இந்த மூன்று பேரின் சாட்சியம், அதிரடி அதிர்ச்சி வைத்தியம். ஆறு ஆண்டுகளாக, இலங்கைக்கு வாய்தா வாங்கித்தருவதற்காக ஜெனிவாவுக்குப் போய்வந்துகொண்டிருந்த இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கூட இது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

இந்த நேரடி சாட்சியங்கள் பங்கேற்ற நிகழ்வுக்குத் தலைமை தாங்கியவர், லீ ஸ்காட். முன்னாள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான லீ, தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான நல்லெண்ணத் தூதுவராக இருக்கிறார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் வழக்கறிஞர்கள் அமைப்பின் மனித உரிமைகள் குழு சார்பில் திருமதி.கிருஸ்டி பிரிம்லோ-வும் நிகழ்வில் பங்கேற்றார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக தானே விசாரிக்கப் போவதாகச் சொல்லும் இலங்கையின் நடவடிக்கைகள் சர்வதேச நியதிகளின்படி இல்லாததை கிருஸ்டி விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

"உண்மைகள் வெளிவரவேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், தவறுகள் திருத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள், அச்சமின்றி சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். இலங்கை அரசின் விசாரணை அமைப்புகள், சுதந்திரமாக இயங்க முடியவில்லை.

முதலில், யார் யார் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும்... அப்போதுதான், யார் யார் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.." என்று தெளிவாகப் பேசியிருக்கிறார் கிருஸ்டி.

விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட எம் இனத்துக்கு சட்டப்படி நீதி பெறத் துணைநிற்கும் சர்வதேச சட்டத்தரணிகளின் பிரதிநிதி, கிருஸ்டி. போருக்குப் பின்னும் தமிழர் தாயகப் பகுதிகளில் நீடிக்கும் பாலியல் வன்முறைகள் குறித்த யாஸ்மின் சூகா அறிக்கையை ஆய்வுசெய்யும் சட்ட நிபுணர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பிலும் அவர்தான் இருக்கிறார்.

சட்ட அறிவை மட்டுமின்றி, மனிதநேய உணர்வையும் ஏந்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் சுமந்திரன்கள் மாதிரி இல்லாமல், விக்னேஸ்வரன்கள் மாதிரிதான் சிந்திக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

இந்த நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு கலந்துகொண்டதைக் குறிப்பிட்டாக வேண்டும். கட்சி வித்தியாசமெல்லாம் பாராமல், ஈழம் தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் அவர்.

சென்றவாரம் வேறொரு தகவலுக்காக பாலுவைத் தொலைபேசியில் அழைத்தபோதுதான், இப்படியொரு நிகழ்வு ஜெனிவாவில் நடக்க இருப்பது தெரியவந்தது. என்றாலும், சாட்சியமளிக்க வருவோருக்கு பிரச்சினை ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையோடு, அவர்களது பெயர்களைத் தெரிவிக்கவில்லை அவர். அந்த முன்னெச்சரிக்கைக்கும் சேர்த்து, பாராட்டுகள் பாலு!

இந்த நேரடி சாட்சியங்களின் தாக்கம், செப்டம்பரில் வெளியாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணை அறிக்கையில் எதிரொலிக்கக் கூடும்.

இலங்கையில் புதிய ஆட்சி அமைந்திருப்பதாகக் கூறி அவகாசம் கேட்க முயல்பவர்களுக்கும், நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால்தான் உள்ளக விசாரணை தாமதமாகிறது - என்றெல்லாம் பெடல் இல்லாமல் சைக்கிள் ஓட்டப் பார்க்கும் அரசியல்வாதிகளுக்கும் இது நிச்சயம் மண்டையிடியாக இருக்கும்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தங்கள் தாய்மண்ணில் நடந்த கொடூரமான இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் வேள்வியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்கள் - எமது புலம்பெயர் உறவுகள். அவர்களது ஓர்மம்தான் குற்றவாளி இலங்கைக்குக் கிடுக்கிப்பிடியாக இருக்கிறது, 2009க்குப் பிறகு!

கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதி கேட்டுப் போராடும் அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கவும், அவர்களது சிறகுகளைக் கத்தரிக்கவும் எல்லா வழிகளிலும் முயல்கிறது இலங்கை. விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்துவதில் எந்த அளவு தீவிரமாயிருந்ததோ, அதே அளவுக்கு இந்த விஷயத்திலும் கவனம் செலுத்துகிறது இலங்கை.

'புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க முயற்சிக்கிறோம்' என்று இலங்கை நாடாளுமன்றத்தில் மங்கள சமரவீர அறிவித்ததற்கு, 'இனப்படுகொலைக்கு நீதி கேட்போரின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறோம்' என்பதுதான் அர்த்தம். பிரான்ஸ் நாட்டில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் பரமலிங்கம் சென்றவாரம் தாக்கப்பட்டிருப்பது, இலங்கையின் கொலைக்கரம் ஐரோப்பா வரை நீள்வதைக் காட்டுகிறது. புலம்பெயர் உறவுகள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்!

இலங்கையை சீனாவின் மடியிலிருந்து இறக்கி தன்னுடைய பிடியில் வைத்துக்கொள்வதற்காக, 'புலிகளுக்கு இன்னும் நிதியுதவி கிடைக்கிறது' என்றெல்லாம் சென்றவாரம் திகில் கதை எழுதிய அமெரிக்காவாலேயே கூட இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை ஒரேயடியாக மூடி மறைத்துவிட முடியவில்லை.

இந்த வாரம், 'இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்கிறது' என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது அது. பிரான்சேஸ் ஹாரிசன், கல்லம் மேக்ரே உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் தொடர் முயற்சிகள் இதற்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன் நான்.

இன்னொருபுறம், ஈழ மண்ணின் அச்சமின்மையும் இதற்குக் காரணமாக இருக்கிறது. தாய்மண்ணில் இருந்தபடியே உண்மை நிலவரத்தை அச்சமின்றி அம்பலப்படுத்திவரும் எமது பெருமரியாதைக்குரிய தமிழீழப் பத்திரிகையாளர்களுக்கும், சிவில் சொசைட்டி உறுப்பினர்களுக்கும், யாழ் பல்கலைக் கழக சமூகத்துக்கும், ராயப்பு ஜோசப் முதலான மனித உரிமைப் போராளிகளுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக சமந்தகர்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சர்வதேசத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புகிற எமது முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், அமெரிக்காவின் அறிதுயிலைக் கலைத்ததில் பெரும்பங்கு இருக்கிறது.

"தமிழர் பகுதிகளில், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர், சிவில் சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர்,

சித்திரவதை செய்யப்படுகின்றனர்..... இந்தத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் இலங்கை அரசுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது..... காணாதுபோதல், கேள்விமுறையற்ற கைது,

சட்டவிரோதக் காவலில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைக் கொடுமை, குற்றவாளிகள் மீது நடவடிக்கையின்மை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆகியவை பரவலாகக் காணப்படுகிறது.... 2009 போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை....."

இதெல்லாம் அமெரிக்காவின் இந்தவாரத் திருவாசகம்.

அமெரிக்காவின் தாசர்களாகவும் இலங்கையின் தாசானு தாசர்களாகவும் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு, "சிங்கள மக்களுக்கென்று ஒரு 'கலாச்சாரம்' இருக்கிறது... அதை நாம் மதித்தே ஆகவேண்டும்" என்று ஒற்றைக்காலில் நிற்கிற மேதாவிகளுக்கு இந்த அறிக்கையைக் காணிக்கையாக்குகிறேன்!

'இதெல்லாம் 2014ம் ஆண்டு தொடர்பான அறிக்கை, மைத்திரி வந்ததும் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது' - என்று அவர்கள் அடம்பிடித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் பகிரங்கக் குற்றச்சாட்டை, அடுத்த காணிக்கையாக அறிவித்துவிட வேண்டியதுதான்!

"கடத்தப்பட்டு காணாதுபோனவர்கள் விஷயத்தில் கடற்படைக்கும் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருந்தும், அதை மூடி மறைக்க மைத்திரி அரசு தீவிரமாக முயல்கிறது.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் 700 பேர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 'கோத்தா கேம்ப்' என்றே அது அழைக்கப்படுகிறது. அப்படியொரு 'கேம்ப்' இப்போது இல்லை - என்று கூறி அதையும் மூடி மறைக்க முயல்கிறார்கள்" என்பது சுரேஷின் பகிரங்கப் புகார்.

'கடத்தப்பட்டோர் மற்றும் காணாதுபோனவர்கள் தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால், சர்வதேச விசாரணை ஒன்றே அதற்கு வழி' என்கிறார் சுரேஷ். தா.தாசர்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? 'ஈழத்தில் கோத்தா கேம்ப் இருப்பதால் உமக்கென்ன பிரச்சினை... உம்முடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போமய்யா' என்று எனக்கு மெயில் அனுப்புவதோடு நின்றுவிடப் போகிறார்களா?

தனக்கும் ராஜபக்சேவுக்கும், தாங்கியிருக்கிற பெயரையும் கழுத்தில் போட்டிருக்கிற சிகப்புத் துண்டையும் தவிர வேறெந்த வித்தியாசமும் இல்லை என்பதை, சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் நிரூபிக்கிறவர் மைத்திரி.

போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வது தொடர்பான எதிர்ப்புக் குரல்கள் வலுப்பெற்றுள்ள இன்றைய நிலையில் கூட, போர்க்குற்றங்களில் நேரடித் தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் ஜகத் ஜெயசூர்யா, தயா ரத்நாயக இருவரையும் வெளிநாட்டுத் தூதுவர்களாக அறிவித்திருக்கிறார் மைத்திரி.

ஜகத், பிரேசில் தூதுவர். தயா, பாகிஸ்தான் தூதுவர். போர்க்குற்றவாளிகளை சர்வதேசத் தூதர்களாக ஆக்குவதன் மூலம், சர்வதேச நெருக்கடிகளிலிருந்து அவர்கள் தப்பிக்க பின்வாசல் ஒன்றைத் திறந்துவைப்பதென்பது கோத்தாவின் மூளையில் உதித்த யோசனை.

கூடவே, புலம்பெயர் உறவுகள் எழுச்சியுடன் போராடுகிற நாடுகளுக்கு அவர்களை அனுப்பிவைப்பதன் மூலம், அந்த எழுச்சியை ஒடுக்க முடியும் என்பது கோதாவின் நம்பிக்கை. அந்தச் சூழ்ச்சியின் முதல்கட்டமாக, சவரேந்திர சில்வா, ஜகத் டயஸ் ஆகிய போர்க்குற்றவாளிகள் முன்பு தூதர்கள் ஆக்கப்பட்டனர்.

மோசமான போர்க்குற்றங்களில் நேரடித் தொடர்புடையவர், ஜகத் டயஸ். அப்படியொரு குற்றவாளி சுவிஸ் தூதராக இருந்ததையும், 2011ல் சுவிட்சர்லாந்து அரசு கொடுத்த நெருக்கடியாலேயே இலங்கை அவரைத் திரும்பப் பெற்றதையும் எவரும் மறந்துவிட முடியாது.

'மீண்டும் டயஸ் சுவிஸுக்கு வர வேண்டுமென்றால், கிரிமினல் விசாரணையைச் சந்திக்க வேண்டியிருக்கும்' என்று வெளிப்படையாக எச்சரித்தது சுவிஸ். 'மீறி வந்தால் கைது செய்வோம்' - என்பது அதன் பொருள்.

இப்படியெல்லாம், பயங்கரவாதிகளை 'ராஜதந்திரி' போர்வையில் பாதுகாக்க முயன்ற மகிந்தவைப் போலவே, கோதா கோடு போட்ட இடத்தில்தான் ரோடு போடுகிறது மைத்திரி அரசும்! 'அது காட்டாட்சி, இது கூட்டாட்சி' என்று வசனம் மட்டும்தான் மாறியிருக்கிறது.

மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் பொதுவான பொருத்தமான சிங்கள வசனம் ஒன்று இருக்கிறது. 'ஒன்ன பாப்போ..... கோனி பில்லா' என்கிற அந்த வசனத்தைக்காட்டி, கொழும்பிலிருந்து வருகிற பிரபல ஆங்கில நாளேட்டில் வாசகர் ஒருவர் நக்கலடித்திருந்தது குறித்தும், யாழ் மிருசுவில் படுகொலைகள் தொடர்பாக ஒரு சிப்பாய்க்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருப்பதன் 'தற்போதைய தேவை' குறித்தும் அடுத்த இதழில்......

புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com

Post a Comment

Powered by Blogger.