Halloween party ideas 2015
.

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், சிங்கள மேலாதிக்க சக்திகளிடம் நாட்டின் ஆட்சி அதிகாரம் சென்றது. சுதந்திரத்தின் பின், இலங்கையின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனங்களை அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் சமூக பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

சிங்களப் பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக சிறுபான்மை இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் தமது நிலங்களை இழந்தனர்.

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்பட்டு தமிழர்களின் தாயகம் நிலத்தை துண்டாடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்களும் சிங்கள பேரினவாத அரசுகளின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டது. அங்கு பெரும்பான்மை இனமான சிங்கள பேரினவாதிகள் ஆதிக்க சக்தியாகவும் ஆளும் சக்தியாக இருந்ததனால் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த ஒடுக்குமுறையானது உச்ச நிலைக்கு சென்றது.

சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகளால் கொதித்து எழுந்த தமிழ் இளைஞர்கள் தமது பூர்வீக தாயகத்தை சிங்கள தேசத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிங்கள பேரினவாத அரசுக்கு தமிழ் இளைஞர்கள் பதிலடி கொடுத்தால், சிறுபான்மை இனத் தமிழர்கள், சிங்கள தேசத்தினால் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டனர்.

சிங்கள இராணுவத்தால் வாழ்க்கை சிதைந்தும் சீரழிந்தும் திருப்பித் தாக்கும் பலமற்ற அப்பாவிகள் அகதிகளாக வாழ்வொடிந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுதான் இலங்கையில் நடந்த யதார்த்தமான உண்மை. ஈழத்தில் போர் நடந்த காலகட்டத்தில் உலக நாடுகள் இதனை புரிந்துகொள்ளவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான காழ்ப்புணர்ச்சியும் அந்த அமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் பரப்பிய வஞ்சகமான மாயைகள் இதற்கு காரணமாக அமைந்தன.

ஆனால், நிகழ்காலம் அப்படியல்ல பரந்துபட்ட உலகின் பல நாடுகளில் குடியேறிய தமிழர்கள் இலங்கையின் கலவர நிலவரங்களை சரியாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலைமையை ஐ.நா.வும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் புரிந்துகொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கவும் இந்த நாடுகள் வலியுறுத்துகின்றன.

ஆனாலும். தற்போதைய இலங்கை அரசின் ஒத்துழைப்பில் தேக்கநிலையே காணப்படுகிறது.

தமிழர் தாயகத்தில் இன்னும் மறுகுடியேற்றம், மறுசீரமைப்பு என்பன மந்தகதிலேயே முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழமுடியாத சூழலே இன்னும் நிலவுகிறது. அநீதியும் அடக்குமுறைகளும் அவர்கள் மீது பாயாது என்பதுக்கு போதுமான பாதுகாப்பு உத்திரவாதம் இல்லை.

அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற பல நாடுகளில் குடியுரிமை பெற்றும் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

எனினும் அவர்களின் தாய்நாடு மீட்பு பற்றிய கனவு அவர்களுக்குள் தொடர்கிறது.

சில நாடுகள் ஈழ தமிழ் அகதிகளை இரண்டாம் தர குடிமக்களாகவும் சமூக விரோதிகளைப் போலவும் நடத்துகின்றன. அவர்கள் நீண்டகாலமாக அந்நாடுகளில். அகதிகளாக வாழ்ந்த போதிலும் அவர்களுக்கு அந்நாடுகள் குடியுரிமையை வழங்குவதில்லை. இந்தியா இதற்கு சிறந்த உதாணரம்.

அகதிகள் தொடர்பான ஐ.நா. இணக்கப்பாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் எல்லாம் அங்குள்ள சட்ட விதிமுறைகளை பரிசீலித்து தகுதியுள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்குகின்றன.
ஐ.நா. இணக்கப்பாட்டில் கையெழுத்திடாத இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் எத்தனை ஆண்டுகள் தமது நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில்லை.

அந்நாடுகளின் சட்டத்திலும் அதற்கு இடமில்லை என்பது குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிப்பதும் துன்பத்திலிருந்து காப்பாற்றுவதுமே மனிதாபிமானமாக அமையும் அதற்கு நாடுகளின் எல்லைக்கோடுகள் ஒரு தடையாக இருக்குமானால், அவர்கள் காட்டும் மனிதபிமானமே போலியானதாகிவிடும்.

உச்சி வெயிலில், சுட்டெரிக்கும் மணலில், நடக்கும் கால்கள் நிழலைத் தேடுவது போலதான் அகதிகளும் பிற நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக அந்நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஆண்களும் பெண்களும் குழந்தைகளோடும் படகுகளில் ஏறி ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இது சட்டவிரோதமன குடியேற்றம் என்றாலும் சில நாடுகள் மனிதாபிமானம் கருதி சட்டதிட்டங்களை தளர்த்தி அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

இது போன்ற முன்மாதிரி நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் பின்பற்ற வேண்டும்.

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக்கூடாது என்பது இலங்கையை போன்ற நாடுகளுக்கு பொருந்தாது. காரணம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச ஒரு ஆட்சியாளராக இருந்தும் தேர்தலில் தோற்றதும் என் தோல்விக்கு தமிழர்கள்தான் காரணம் என்று கூறியிருந்தார்.

நான் தோற்றதாலும், தமிழர்கள் எண்ணம் நிறைவேறாது. மீண்டும் சிங்களவர்களுடைய ஆட்சிதான் வந்திருக்கிறது என்று வக்கிரத்துடனும் இனவெறியை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார்.
மஹிந்த ராஜபக்சவின் பேச்சும் ஈழப்போரில் இனப்படுகொலை செய்த அவர் மீதான குற்றச்சாட்டும் ஒத்துப்போவதையும் உலகத் தலைவர்கள் கவனிக்க வேண்டும்.

இப்படியான ஒரு ஆட்சியாளரின் ஆட்சியில் அங்குள்ள தமிழர்கள் எந்தளவு துன்பங்களை அனுபவித்திருப்பர். இலங்கை தமிழர் இனப் படுகொலை விவகாரத்தில் ஐ.நா. மற்றும் பெரிய நாடுகள் தலையிடுவது தர்மமே.

மேலும் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டேன் என்று கூறும் மகிந்த ராஜபக்ச தமிழர்களுக்கு நன்மை செய்யக்கூடாது என மைத்திரிபாலவுக்கும் அறிவுறுத்துகிறாரா அல்லது மைத்திரிபாலவும் என்னைப் போல சிங்கள இனவெறியர்தான் அவரையும் நம்பக்கூடாது என்று தமிழர்களுக்கு அறிவுறுத்துகிறாரா என்பது கேள்விக்குறியே.

இனக்கலவரம் என்று வந்துவிட்டால் மனிதர்கள் இனத்தின் கருவியாகிவிடுவர். அவர்களுடைய ஆட்சி அதிகாரம், ஆன்மீகம், எல்லாமே தான் சார்ந்த இனத்துக்கு தொண்டு செய்வதாக கருதி கொலை பாதகங்களையும் செய்ய தூண்டும்.

ஒரு அரசாங்கம் தன் நாட்டைச் சார்ந்த பலதரப்பட்ட இன மக்களையும் பேதமில்லாமல் அரவணைத்து நடத்துவதே ஜனநாயக தர்மமாகும்.

அத்தகைய ஆட்சியைத்தான் நாட்டின் சகல இன மக்களுமே இறைத்தன்மையோடு போற்றுவார்கள். தாய்நாட்டுப் பற்றுடன் இறையாண்மையை கடைப்பிடித்தும் வாழ்வார்கள்.

அந்த நாடே காடு, மலை, கடல், நில எல்லைகளைக் கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அர்த்தமுள்ள நாடாக இருக்கும்.

நாட்டை முன்னேற்றும் ஆட்சித்திறன் இல்லாத ஆட்சியாளர்கள், மக்களின் கோபத்துக்கு தான் ஆளாவதுக்கு பதிலாக ஒரு இனவாதத்தை தூண்டிவிடுகின்றனர்.

உணர்ச்சி வசப்படும் மக்களும் ஆட்சியாளர்களின் இயலாமையை புரிந்து கொள்வதற்கு பதிலாக இனவாதத்தின் பால் ஈர்க்கப்படுகின்றனர். இதற்கு மஹிந்தவின் கடந்தகால அரசின் செயற்பாடுகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

கடந்தகால வரலாறுகளை ஆராய்ந்தால் சில கொடுமைகளே காலங்கடந்து பாரிய நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான அடித்தளமாய் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும்.

உதாரணமாக பிரிட்டிஷ் அரசு , உலகின் பெரும்பாலான நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்து கொடுமை செய்தது.

அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றால் உலகின் பலநாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு மொழியாக ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியிருக்காது.

ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உலகம் முழுதும் பரவியிருக்கிறார்கள் இது எதிர்மறையான விளைவு. தமிழர்கள் இன்று தமிழகத்திலும் ஈழத்திலும் மாத்திரமல்ல முழு உலகிலும் பரவியுள்ளனர்.

இது தமிழர்களின் சமூக, அரசியல் பொருளாதாரம் மற்றும் கலை கலாசார துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் உரிமைகளுக்காக அழுத்தம் கொடுக்கும் பலத்தை கொடுத்துள்ளது.

- சரவணன் -
karu.bomi@gmail.com
 

Post a Comment

Powered by Blogger.