Halloween party ideas 2015
.

மின்னஞ்சல் மூலம் கேள்விகளை எழுப்பிய நண்பருக்கு ஒரே இதழில் பதிலளிக்க முடியாமல், இரண்டாவது இதழிலும் அதைத் தொடர வேண்டியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடையவில்லை. உண்மையில் அதற்காக வருந்துகிறேன்.

கடந்த ஆறு ஆண்டுகளாக, தடம் மாறாமலும் தடுமாறாமலும் ஒரேபாதையில்தான் நடக்கிறோம் நாம்!

தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் குரலைப் பலப்படுத்துவது... 'போர்க்குற்றம்' என்கிற பம்மாத்து வார்த்தையால் அந்த இனப்படுகொலையை மூடி மறைக்க முயலும் அயோக்கியசிகாமணிகளை அம்பலப்படுத்துவது...... இந்த இரண்டைத் தவிர வேறென்ன நோக்கம் இருக்கிறது நமக்கு!

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதைத்தான் ஒவ்வொரு இதழிலும் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். 'நேற்றுதான் இதை நினைத்தேன்...

இன்று நீங்கள் அதை எழுதிவிட்டீர்கள்' என்று என்னிடம் சொல்கிற என் வாசக நண்பர்களின் குரலில் மருந்துக்குக்கூட பொய்மை இருப்பதில்லை. அதுதான், உண்மை.

வேறு திசைகளில் திரும்பிவிடாமல், நேர்ப்பாதையில் வேகவேகமாக முன்னேறிச் செல்ல வேண்டிய நிலையில், ஒரு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க இரண்டு இதழ்கள் தேவைப்பட்டிருப்பதில் எனக்கு உள்ளபடியே வருத்தம்.

நண்பர்கள் சிலர் வேறுமாதிரி கருதுகின்றனர். "இது ஒற்றை நபருக்கு அளிக்கப்படுகிற பதிலல்ல, குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்குமான பதில்" என்கிறார்கள் அவர்கள். குழப்பத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கான பதிலா, குழப்பத்தில் ஆழ்த்துபவர்களுக்கான பதிலா என்பது எனக்குப் புரியவில்லை.

சில நண்பர்கள், குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல் நண்பர் யாரென்பதை எளிதாக யூகித்துவிட்டனர். என்னிடம் கேட்டிருக்கும் கேள்விகளில் அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை வைத்து, 'இன்னார் தானே' என்று கேட்கிறார்கள் அவர்கள். அவரது பழைய மின்னஞ்சல்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்திருக்கும் அவர்கள், அதற்கும் பதிலளிக்க வேண்டும் என்கிறார்கள். எனக்கென்னவோ, இதுவே அதிகமென்று தோன்றுகிறது.

கேள்விமேல் கேள்விகளை எழுப்பிய அந்த மின்னஞ்சல் நண்பர் வயதால் முதியவர் என்கிறார்கள் சில நண்பர்கள். அவரது தமிழிலிருக்கும் இளமையைப் பார்க்கும்போது, அதை என்னால் நம்ப முடியவில்லை! அதேசமயம், அவரது எழுத்திலிருக்கும் கயமைத்தனத்தைக் கண்டிக்காமலும் இருக்க முடியவில்லை.

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர்களுக்குத் தங்கப்பதக்கமா கொடுக்கச் சொல்கிறீர் - என்று, அவர் கேட்பதன் உள்ளர்த்தம் விளங்குகிறதா உங்களுக்கு!

நமது செலவில் நமக்கே சூனியம் வைக்கப் பார்க்கிறார் மனிதர். தெரியாமல் செய்த தவறென்றா நினைக்கிறீர்கள் இதை! தெரிந்தே செய்கிறார். புத்தனின் பாதையை விட்டு ஒரு மில்லிமீட்டர் கூட நகராமல் அன்பையும் அகிம்சையையும் இலங்கை பரப்புகிறது பாருங்கள்.....! அதற்காக, சம்மனே இல்லாமல் ஆஜராகிறார் நமது நண்பர்.

கேள்விகளின் நாயகன் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களது அரச விசுவாசம் பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை. இதெல்லாம் உங்களது தனிப்பட்ட உரிமை. ஆனால், உங்கள் எஜமானர்களான சிங்களப் பொறுக்கிகள் எம் இனத்தைத் திருப்பித் திருப்பி அடித்தபிறகுதான், திருப்பி அடித்தார்கள் எம் இளைஞர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அப்படித் திருப்பி அடித்ததற்காக உங்களைப் போன்ற மேதாவிகள் தங்கப்பதக்கம் அணிவிக்க வேண்டுமென்று அவர்கள் எப்போதாவது எதிர்பார்த்திருப்பார்களா? அப்படியே நீங்கள் அணிவித்திருந்தாலும், அதற்காக அவர்கள் அகமகிழ்ந்திருப்பார்களா?

தங்களது தலைவன் நச்சுக் குப்பியை அணிந்துகொண்ட அடுத்தநொடியே, தங்கள் கழுத்தில் அதைப் பெருமகிழ்ச்சியோடு அணிந்துகொண்டவர்கள் பிரபாகரனின் தோழர்கள்.

எம் இனத்தைக் காக்க எம்மையே தருவோம் - என்று தெள்ளத்தெளிவாகத் தெரிவித்த அவர்களது ஒவ்வொரு அங்கமும் தங்கம். உங்களைப் போன்றவர்களின் தங்கப் பதக்கங்களுக்கு அவர்கள் மேனியைத் தழுவுகிற அருகதை இருக்கிறதா? அவர்களது கால்தூசுக்காவது சமமாகுமா, 20 நாடுகளின் தயவில் குப்பை கொட்டியிருக்கும் உங்கள் சிங்களப் படை!

எமது இளைஞர்கள் கொதிப்படையும் அளவுக்கு, 'அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர்களுக்குத் தங்கப்பதக்கமா கொடுப்பார்கள்' - என்றெல்லாம் தடித்த வார்த்தைகளை வீசுகிறீர்கள். இப்படிப்பட்ட குரூர நக்கல்களால் அவர்களை உசுப்பி விடுகிற நீங்கள், 'எமது இளைஞர்களை உசுப்பி விடுகிறீரா' என்று என்னைப் பார்த்துக் கேட்பது, அறிவுசார் அராஜகம்.

எமது இளைஞர்களைத் தூண்டிவிடுவது யார் - என்று சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து ஆற அமர யோசித்துப் பாருங்கள். தங்கள் இனம் கண்ணெதிரே அழிக்கப்பட்டதைப் பார்த்துத் துடித்தவர்கள் அவர்கள்.

நடந்த இனப்படுகொலைக்கு நீதி தேவை - என்பதுதான் அவர்களது கோரிக்கை. குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படும்போது, அவர்கள் தண்டிக்கப்படும்போது, அந்த இளைஞர்களின் கோபம் தணிய வாய்ப்பிருக்கிறது.

உங்களைப் போன்றோரின் அயோக்கியத்தனம் குற்றவாளிகள் தப்பிக்க துணைபோகுமென்றால், அதன் விளைவு என்னவாயிருக்குமென்று நினைக்கிறீர்கள்? அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளும் சேர்ந்தே தங்களை ஏமாற்றியிருப்பது அம்பலமான பிறகு, தமக்கான நீதியைத் தாமே பெற்றாக வேண்டிய நிலைக்கு எங்கள் இளைஞர்கள் தள்ளப்படுவார்களா, மாட்டார்களா?

அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராடியவர்களுக்குத் தங்கப்பதக்கமா தரமுடியும் - என்று கேட்கிற அதே வாயாலேயே, 'பிரபாகரன்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறக்கிறார்கள்' என்கிற வினோதமான கண்டுபிடிப்பை ஊரறிய அறிவிப்பதில் பிரகாசிக்கிறது உங்களது நாசமாய்ப் போன 'சாணக்கியம்'.

'யார் காலையாவது நக்கிப் பிழைப்பதுதான் சாணக்கியம்' - என்று தப்பும்தவறுமாக உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தது யார்? அந்த சாணக்கியத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

உண்மையும் நம்பிக்கையும் அடியோடு முரண்பட்டவை என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? ஒருகாலத்தில், 'உலகம் தட்டை' - என்று உலக மாந்தர் நம்பினார்கள் என்பதற்காக உலகம் தட்டையாகவா இருந்தது?

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிரபாகரன்கள் பிறப்பார்கள் - என்பது உங்கள் நம்பிக்கையா, 'அப்படித்தான் பிறக்க வேண்டும்' என்பது உங்களது விருப்பமா - என்பது எனக்குத் தெரியவில்லை.

தொடர்ந்து நசுக்கப்படுகிற ஓர் இனத்தில், நீதி மறுக்கப்படுகிற ஓர் இனத்தில், பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் ஒரு காலகட்டத்தில் பிரபாகரனாகத்தான் உருமாற்றம் அடையும் - என்கிற உண்மையை மட்டுமே என்னால் உணர முடிகிறது.

உண்மையில், பிரபாகரன்கள் பிறப்பதில்லை. அவர்களுக்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. உங்களைப் போன்றவர்களின் துரோகமும், உங்களது சிங்களச் சிநேகிதர்களின் குரோதமும்தான் அவர்களைப் பிரபாகரன்களாக்குகிறது.

இந்த அடிப்படை மாற்றத்துக்குக் குறுக்கே உங்களது விருப்பமும் நம்பிக்கையும் நிற்கமுடியும் என்றா நினைக்கிறீர்கள்?

'ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் போராடவேண்டும், அதுவரை அடிமைகளாகவேதான் இருக்கவேண்டும்' என்றெல்லாம் எவராவது 'சாணக்கியம்' பேசிக்கொண்டிருந்தால், சட்டைக் காலரோடு கொத்தாகப் பிடித்துத் தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.... எச்சரிக்கையாக இருங்கள். (கொத்தாக - என்றால் என்ன அர்த்தம் என்பதை அறிந்துகொள்ள அலரி மாளிகையை அணுகவும். 2009ல் 'கொத்து' தான் அதன் சொத்தாக இருந்தது.)

தங்கப்பதக்கமா கொடுப்பார்கள் - என்று சாதுர்யமாக எச்சரித்துவிட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிரபாகரன் பிறப்பான் - என்று சாமர்த்தியமாகக் காயடிக்கப் பார்க்கும் உங்களது எழுத்தைப் படிக்கும்போதே, கம்பளிப்பூச்சியைப் பிடித்துக் காது மடலுக்குள் விட்டமாதிரி இருக்கிறது எனக்கு! அதை எழுதும்போது உங்களுக்கு அருவருப்பாகவும் அசூயையாகவும் இல்லையா? அல்லது, அந்த இரண்டுமே அறவே இல்லையா?

நீங்கள் வயது முதிர்ந்தவர் - என்று நண்பர்கள் சிலர் இப்போதுகூட தகவல் அனுப்புகிறார்கள். அகவை ஆராய்ச்சிக்குள் நான் நுழையவேயில்லை. வயது முதிர்ச்சிக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் தொடர்பு இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது - உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால் - 'மடமையிலும் மடமை'.

மக்களின் முதல்வர் விக்னேஸ்வரனைக் காட்டிலும் நீங்கள் வயதில் மூத்தவரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. விக்னேஸ்வரனின் அறிவு முதிர்ச்சியை மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

போர்க்குற்றம் என்று சொன்னால்தான் சர்வதேசத்தின் ஆதரவு கிட்டும் - என்று சொல்கிற அதிமேதாவிகளின் பட்டியலில் இருக்கிற நீங்கள், கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்தே பிடிக்க முயலுங்கள்....!

அதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. 'ஒன்றரை லட்சம் உறவுகளைத்தான் காப்பாற்ற முடியவில்லை...... குற்றமிழைத்த சிங்கள சிநேகிதர்களையாவது காப்பாற்றுவோமே.....' என்கிற உங்களது மனிதநேய அணுகுமுறைக்கு எனது வந்தனம்.

விக்னேஸ்வரனின் நிலை வேறு. விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட எம் உறவுகள் ஒவ்வொருவருக்கும், சீரழிக்கப்பட்ட ஒவ்வொரு சகோதரிக்கும் நீதி வேண்டும் என்பது அவரது நிலை. நடந்தது இனப்படுகொலை தான் - என்கிற உண்மையைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார் அவர்.

நடந்த இனப்படுகொலைக்கு நீதி தேட முயலும் நண்பர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நக்கல் கிக்கலெல்லாம் கிடையாது, நமது முதல்வரிடம். அதுதான், 'போர்க்குற்றம்' என்று குழப்பப் பார்க்கிறவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. வீட்டிலிருப்பவர்கள் குரைப்பதற்கு முன்பே, வீட்டில் அடிமைச் சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருப்பவர் பேசுவார் பாருங்கள்...

அப்படித்தான் அவசர அவசரமாகப் பேசுகிறார்கள் அவர்கள். 'இனப்படுகொலை என்றெல்லாம் பேசாதே' என்று அலரி மாளிகை வாய்திறக்கும் முன்பே, இவர்கள் அலறுகிறார்கள்.

நல்லது நண்பர்களே! அடிமையாகவே கிடப்பதற்கு ஆசைப்படுபவர்களும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்காக அவதிப்படுபவர்களும் எந்த அடிப்படையில் ஒன்றுபட்டிருக்க முடியும்? அவர்கள் அவர்களாகவும், நாம் நாமாகவும் இருப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன் நான்.

சென்ற வாரம் டொரன்டோ நண்பர்களிடம் மனம்விட்டுச் சொன்னதை, இப்போது வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன்...

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதிலிருந்து, ஒரு பத்திரிகையாளனாக, என்னைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் நான் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியிருந்தது. ஈழத்தின் மீதும்,

எங்கள் மாவீரர்களின் வீரத்தின் மீதும், அவர்களைப் போற்றிய இனத்தின் சுதந்திர தாகத்தின் மீதும் மரியாதை எழ அதுதான் காரணமாக இருந்தது. அந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், இன்றுவரை அதற்காக எழுதுகிறேன், அதற்காகப் பேசுகிறேன், அதற்காகத் திரைப்படம் எடுக்கிறேன்.........

இந்தக் கடமையிலிருந்து நான் எந்தச் சமயத்திலும் விலகி நிற்கப் போவதில்லை. என் நண்பர்கள் ஒவ்வொருவரையும் போலவே எனக்கும், ஈழம் - பிரபாகரன் என்கிற இரண்டே அடையாளங்கள்தான்! எது எம் இனத்தின் பெருமைமிகு அடையாளமோ அதை நான் ஏன் மூடி மறைக்க வேண்டும்?....

என்றாலும், ஒன்றை நான் உணர்ந்தே இருக்கிறேன்.....

நான் தமிழ்நாட்டில் பிறந்தவன்....

ஈழத் தாய்மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தர்களோடு ஒப்பிடும்போது, நான் அந்நியன்....

அந்த மண்ணில் பிறந்தவர்களை விமர்சிக்கத் தயங்குவது இதனால்தான்....

என்றாலும் சிலரது துரோகங்கள் எல்லை கடந்து போகும்போது பேசாதிருக்க முடியவில்லை என்னால்.....

என்னுடைய ஈழத்து உறவுகள் இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.....!

நான் திருவிழாப் பாடகனில்லை.... தெருப்பாடகன்...

உங்கள் வீதி வழியே புல்லாங்குழலோடு போய்க் கொண்டிருக்கிறேன்....

தாரை தப்பட்டைகளை அடித்தால் கதவு திறந்து பார்க்கிற நீங்கள், என்னுடைய குழலிசையை வெளியே வந்துதான் கேட்கவேண்டுமென்கிற அவசியமில்லை....

ஒன்றே ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்....

என்னையும் என்னுடைய புல்லாங்குழலையும் எவரும் தடை செய்துவிட முடியாது...

புல்லாங்குழல் என்னுடையது......

அது பொருந்தியிருக்கிற உதடுகள் என்னுடையவை....

உங்களுக்காகத்தான் நான் அதை இசைக்க முடியும்....

இதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களால், ஒரு மின்னஞ்சல் மூலமோ அலைபேசி மூலமோ இந்தத் தெருப்பாடகனைத் தடுத்துவிட முடியும் என்றா நினைக்கிறீர்கள்?

பின்குறிப்பு: கனடாவில் நடந்த 'கடல் குதிரைகள்' இசை வெளியீட்டு விழா பற்றி ஏன் எழுதவில்லை என்று உரிமையுடன் கேட்டிருக்கும் நண்பர்களே! ஒரு மின்னஞ்சலுக்கு பதில் எழுதி முடிக்கவே இரண்டு இதழ்கள் ஆகியிருக்கிறதே.... இசை வெளியீடு பற்றி எழுத எங்கே இடமிருக்கிறது?

'யூ டியூப் - கடல் குதிரைகள்' என்கிற முகவரிக்குப் போய், கடல் குதிரைகளுக்காக, வேதம் புதிது தேவேந்திரன் இசையில் உணர்ச்சிப் புயல் காசி ஆனந்தன் எழுதி இளங்குயில் ஜெசிகா ஜூட் பாடியிருக்கிற 'கூண்டுக்குள்ளே விடுதலையை அடைக்க முடியுமா' பாடலைக் கேட்டுவிட்டு என்னிடம் பேசுங்கள். ஒரே வாரத்தில் ஒருலட்சத்து பதினைந்தாயிரம் பேருக்கு மேல் கேட்டிருக்கும் அந்தப் பாடலை நீங்களும் கேட்க வேண்டாமா?

புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com

Post a Comment

Powered by Blogger.