Halloween party ideas 2015
.

மாயமான கடற்படை விமானத்தில் பயணம் செய்த எனது கணவரை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என சமூக வலைத்தளம் மூலம் பிரதமருக்கு, விமானியின் மனைவி கோரிக்கை விடுத்து உள்ளார்.



சென்னையில் இருந்து கடந்த 8–ந்தேதி புறப்பட்டு சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் மாயமானது. அதில் இருந்த விமானிகள் சுபாஷ்சுரேஷ், எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. 3 பேருடன் மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விமானத்தை கடந்த ஒரு வாரமாக தேடி வருகின்றனர்.

மாயமான விமானி சுபாஷ்சுரேஷ் சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரைச்சேர்ந்தவர், சுபாஷின் தந்தை சுரேஷ் சென்னை துறைமுகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் பத்மா.

குடும்பத்தினர் சோகம்
சுபாஷ்சுரேசுக்கு 29 வயது ஆகிறது. இவருக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், இஷான் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். பி.டெக் படித்த சுபாஷ்சுரேஷ் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் பைலட் பயிற்சியை முடித்து கடந்த 2008–ம் ஆண்டு கடலோர காவல் படையில் சேர்ந்தார்.

கொச்சியில் பணியாற்றிய அவர் கடந்த டிசம்பர் மாதம் தான் சென்னைக்கு மாறுதலாகி வந்தார். கடந்த 8–ந்தேதி பணிக்கு சென்ற ‘சுபாஷ் இரவு வீட்டிற்கு திரும்பிவிடுவதாக கூறி சென்றார். ஆனால் கடந்த ஒரு வாரமாக வராததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

பிரதமருக்கு கோரிக்கை
இந்தநிலையில் சுபாஷ்சுரேஷின் மனைவி தீபலட்சுமி தனது ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் ‘‘சுபாஷ் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்’’ என எழுதி உள்ளார்.

மேலும் அவர் பிரதமருக்கு ஒரு கோரிக்கை வைத்து உள்ளார். அதில், ‘எனது கணவர் விமானி சுபாஷ்சுரேசை கடந்த 8 தினங்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க நீங்கள் தலையிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்து உள்ளார்.

விமானி எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரின் குடும்பத்தினரும் சென்னைக்கு வந்து உள்ளனர்.

Post a Comment

Powered by Blogger.