Halloween party ideas 2015
.

இலங்கை இராணுவத்திடம் சரணடையுமாறு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதற்கிணங்கவே தனது கணவர் எழிலன் சரணடைந்ததாக அவரது மனைவியும், வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி கடந்த வாரம் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


அனந்தியின் இந்த அறிக்கை முதலில் இணையங்களில் வெளியாகி பின்னர் அவை தேசிய அச்சு ஊடகங்களில் பிரசுரமாகியதும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழியின் கவனத்திற்கு அது செல்லவே அவர் உடனடியாகவே அதனை நிராகரித்துவிட்டார். எழிலன் என்ற ஒருவரையே தனக்குத் தெரியாதது போல அவரது அறிக்கை இருந்தது.

இதற்கு மீண்டும் பதிலளித்த அனந்தி, கனிமொழி பொய் கூறுகிறார். உண்மை என்னவென்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும் எனத் தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் அனந்தியின் கருத்திற்கு கனிமொழியிடமிருந்து எந்தப் பதிலறிக்கையும் இதுவரை இல்லை.

இந்த விடயத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் உண்மையில் வெளியே வராத பல விடயங்கள் இதனுள் புதைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

முதலில் தனது கணவர் பற்றிய இத்தனை பெறுமதி வாய்ந்த உண்மையை இதுவரை காலமும் அனந்தி ஏன் ஒழித்து வைத்திருந்தார்? என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதனால் இதனை ஒரு அனுதாப அலையாக பயன்படுத்த அனந்தி முயல்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

உள்ளூர் ஊடகங்களில் அறிக்கை விட்டால் கனிமொழிக்கு எங்கே தெரியவரப் போகிறது என்பதால் அறிக்கையை விட்டுவிட்டு இன்று அவஸ்தைப்படுகிறாரோ தெரியவில்லை.

இன்று அனந்தி அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் இதற்கு அதாவது அனந்தியின் கருத்திற்கோ அல்லது கனிமொழியின் பதிலுக்கோ ஆதரவாக எதனையும் கூறவில்லை.

வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அடுத்ததாக அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அனந்தி. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இவை அனந்திக்குக் கிடைத்த வாக்குகள் அல்ல. அவை முற்று முழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்த வாக்குகள்.

அதிலும் விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் அவர்களது பாணியில் தமக்காகக் குரல் கொடுத்து வரும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள். அதில் எழிலனின் கதையைக் கூறியமையால் அனந்திக்குக் கிடைத்த வாக்குகள்.

இதனை அனந்தி தனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த வாக்குகளாக எண்ணி வருகிறார் போலவே தோன்றுகிறது. அது தவறு. இதனாலேயே பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியம் மிக்க மூத்த தலைவர்களுக்கே சவாலாகவும், மரியாதை கொடுக்காத தன்மையுடனும் நடக்க அனந்தி முயற்சித்தும் வருகிறார்.

இந்த உண்மையை இன்று வரை அனந்திக்கு எவரும் எடுத்துக் கூறவில்லை. ஒருவகையில் சண்டித்தனமான போக்கினால் கூட்டமைப்பின் தலைவர்களை அடிபணிய வைத்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கோருவதும் இவரது நோக்கமாகவும் இருக்கலாம் என்ற கருத்தே பலரிடம் காணப்படுகிறது. இதனால் அனந்தி தனது உண்மையான நிலையை இனியாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதனாலேயே இன்று கனிமொழியின் பெயரை இழுத்து மூக்குடைபட்ட கதையாக முடிந்துள்ளது. அவ்வாறு இவர் இன்று கூறுவது உண்மை எனினும் இவர் கனிமொழியைக் காட்டிக் கொடுப்பது போன்ற செயலையே செய்துள்ளார். இது தமிழ்நாட்டுத் தலைவர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

இது இவரது அரசியல் சாணக்கியமின்மையையே காட்டுகிறது. எழிலன் உண்மையான போராளியாக பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரது செயற்பாடுகளைக் குறை கூறுவதற்கு இன்றுவரை வடக்கில் ஒரு சிறு பிரிவினர் உள்ளனர் என்பதை மறுக்க முடியாமலுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எழிலன் தொடர்பான விசாரணைகள் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் போது அங்கு அனந்தி வரும் போதெல்லாம் எழிலனுக்கு எதிராகக் கோஷம் எழுப்பும் ஒரு குழுவினரைக் காண முடிகிறது.

எழிலனால் பிடித்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே? என அவர்கள் நீதிமன்ற வாசலில் நின்று கோஷம் எழுப்புகின்றனர். கடந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல ஆட்சி மாறிய பின்னரும் இதே கூட்டம் பின்தொடர்கிறது.

முன்னர் என்றால் மஹிந்த ராஜபக்சவின் ஏவலுக்கு அமைய டக்ளஸ் தேவானந்தா செய்கிறார் எனப் பழியை இலகுவாக அவ்விருவர் மீதும் போட்டுவிடலாம். ஆனால் இன்றும் இந்த நல்லாட்சியிலும் அது தொடர்கிறதே? அப்போ இது உண்மையாகவே பாதிக்கப்பட்ட குழு என்பதை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இவை பற்றி அனந்தி சிந்தித்திருந்தால் தனது நிலை பற்றி உணர்ந்திருப்பார்.

எனவே அனந்தி தன்னிலை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும். ஒரு முன்னாள் போராளியின் மனைவி என்பதனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டமையினாலுமே மக்கள் ஆதரவு தனக்குக் கிடைத்தது என்ற உண்மையை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

கனிமொழி தமிழ்நாட்டு இமயத்தின் மகள். நீங்கள் நினைத்தபடி அவர்களைச் சாடி அறிக்கை விட்டு உங்களுக்குப் பிரசாரம் தேட அவர்கள் இடமளிக்க மாட்டார்கள். அத்துடன் இத்தகைய பொய்யான அறிக்கைகள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்குமான உறவைப் பாதித்துவிடும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக முழுத் தமிழ்ச் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவருமே செயற்படக் கூடாது என்பதற்கு கனிமொழி அனந்தி விவகாரம் ஒரு சிறந்த உதாரணமாகும்.

இப்படித்தான் தனக்கும், பிள்ளைகளுக்கும் இந்த அரசாங்கம் நியாயம் வழங்காவிட்டால் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தீக்குளிக்கப் போவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரடியாக அறிக்கை ஒன்றினை அனந்தி விட்டிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்படும் என அவர் எதிர்பார்த்திருகக் கூடும்.

ஆனால் இது குறித்து ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமையால் கவனத்தை வேறு திசையில் திருப்பவே கனிமொழியின் கதையைக் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ விமர்சனங்களுக்கு உள்ளாகும் அறிக்கைகளை விட்டு அவர் இன்று தனது காரியத்தைச் சாதித்து விட்டார்.

அதாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இவர் போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாகி இருக்கிறது.

இவரை விட்டால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய ஐக்கிய முன்னணியுடன் இணைந்துவிடுவார் எனும் பயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளதாகவும் தெரிகிறது.

ஏனெனில் மக்களது வாக்குகளைப் பெறுவதற்கு இவரிடம் முன்னாள் போராளி எழிலன் எனும் பெரும் துரும்பு உள்ளதே.

க.சீவகன்
thinakaran

Post a Comment

Powered by Blogger.